செய்தித் தொகுப்பு



கேம்பஸ் நியூஸ்

மாணவர்கள் உருவாக்கும் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தலாம்!

கோபிச்செட்டிப்பாளையத்தில் தனியார் பள்ளி விழாவில் பங்கேற்ற மங்கல்யான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, ’‘மாணவர்கள் செயற்கைக்கோள் தயாரிப்பில் ஈடுபட்டால் வியாபார ரீதியாக வெளிநாடுகளுக்கும் வழங்க முடியும். ஆண்டிற்கு 12 முதல் 18 செயற்கைக்கோள்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

இளம் விஞ்ஞானிகள், படிக்கும் காலத்திலேயே செயற்கைக்கோள் தயாரிப்பில் புதிய உத்திகளைக் கையாள வேண்டும். திரும்பத் திரும்ப செய்யும் செயற்கைக்கோள்களைத் தாண்டி புதிதாக யோசித்து மாறுப்பட்ட உத்திகளில் செயற்கைக்கோள்களைத் தயாரிக்க முடியுமா என்ற கோணத்தில் இளம் விஞ்ஞானிகள் யோசிக்க வேண்டும். நிலநடுக்கம், சுனாமி வருவது குறித்து முன்கூட்டியே கணிக்க முடியுமா என்ற ரீதியிலும் அவர்கள் சிந்திக்க வேண்டும் ‘‘ என்று கூறியுள்ளார்.

கல்வி நிலையங்களில் அரசு விழாக்களுக்குத் தடை!
   
தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்களில் அரசு விழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்குதல், முதல்வர், அமைச்சர் பங்கேற்கும் விழா போன்ற அரசு நிகழ்ச்சிகளுக்கு பள்ளி, கல்லுாரி, பல்கலை வளாகங்கள் பயன்படுத்தப்பட்டுவந்தன.
இதனால் துாய்மைக் கேடு ஏற்பட்டதுடன் மைதானங்களில் விளையாட்டுப் பொருட்களும் சேதமடைந்தன.

மேலும் மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் அரசு விழாக்களைக் கல்வி நிலையங்களில் நடத்துவதற்குத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து கருத்தரங்கு போன்ற கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளைத் தவிர பொருட்காட்சிகள் நடத்துவது, நலத்திட்டங்களை வழங்குவது போன்ற அரசு விழாக்களுக்குக் கல்வி நிலையங்களைப் பயன்படுத்தக்கூடாது என கலெக்டர்களுக்கு செய்தி மக்கள் தொடர்பு இயக்குநர் கடிதம் அனுப்பியுள்ளார்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் கண்காட்சி!

இந்திய அரசு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை குறு சிறு நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சி நிலையம் பிப்ரவரி 2 மற்றும் 3ம் தேதிகளில் தேசிய அளவிலான (MSME Vendor Expo - 2018)  விற்பனையாளர் அபிவிருத்தி நிகழ்ச்சியை நடத்துகிறது. தொழில் கண்காட்சி பயிலரங்கம் இணைந்த இந்த நிகழ்வு சென்னை கிண்டி எம்எஸ்எம்இ வளாகத்தில் நடைபெறுகிறது.

மத்திய பொதுத்துறை நிறுவனங்களும், அரசுத்துறை நிறுவனங்களும் தங்களுடைய வருடாந்தரத் தேவையான பொருள் மற்றும் சேவையில் குறைந்தபட்சம் 20 சதவிகிதமாவது குறு மற்றும் சிறுதொழில் நிறுவனங்களிடமிருந்தே வாங்க வேண்டும். இந்த 20 சதவிகிதத்திலும் உள் ஒதுக்கீடாக 4 சதவிகிதம் பட்டியலினத்தோர் நடத்தும் குறு மற்றும் சிறுதொழில் நிறுவனங்களிடமிருந்து வாங்க வேண்டும்.

இதுவே பொதுக்கொள்முதல் கொள்கையின் முக்கிய அம்சமாகும். இதன்படி வாங்குவோர் - விற்போர் சந்திப்பு நிகழ்ச்சி (வெண்டார்) நடைபெறுகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. அதேபோல் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் உற்பத்திப் பொருட்களுக்கான விற்பனை வாய்ப்பைப் பெற உள்ளன. கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டு தொழில்முனைவோர் ஆவதற்கான வாய்ப்பைப் பெறலாம்.

‘நீட்’ தேர்வு எழுத +2வில் 50% மார்க் கட்டாயம்!

+2 முடிக்கும் மாணவர்கள் எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ். படிப்பில் சேர, ‘நீட்’ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இத்தேர்வில், சி.பி.எஸ்.இ. உட்பட, அனைத்துப் பாடத் திட்டங்களையும் பின்பற்றி, வினாத்தாள் தயாரிக்கப்படுகிறது. தேர்வுக்கான பயிற்சியில் தமிழக மாணவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ‘நீட்’ தேர்வில் மட்டும் அதிக மதிப்பெண் பெற்றால், மருத்துவ சேர்க்கையில் இடம் கிடைக்கும் எனப் பல மாணவர்கள் நினைத்துள்ளனர். ஆனால், ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் பெற்றாலும், +2வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண் பெற வேண்டும் என சி.பி.எஸ்.இ. விதிகளில் கூறப்பட்டுள்ளது.

‘நீட்’ தேர்வு எழுதும் மாணவர்களில் பொதுப் பிரிவினர், இயற்பியல், வேதியியல், உயிரியலில் 50% மதிப்பெண் கட்டாயம் பெற வேண்டும். மற்ற பிரிவினர் 45% மதிப்பெண் பெற வேண்டும். அவர்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும், 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என ‘நீட்’ தேர்வு விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.