செய்தித் தொகுப்புகேம்பஸ் நியூஸ்

டிப்ளமோ இன் யோகா சயின்ஸ் மாணவர் சேர்க்கை!

மொரார்ஜி தேசாய் தேசிய கல்வி நிறுவனம் மத்திய அரசின் கீழ், தன்னாட்சி நிறுவனமாகச் செயல்படுகிறது. இந்நிறுவனம் டிப்ளமோ இன் யோகா சயின்ஸ் (டி.ஓய்.எஸ்சி.,) படிப்பில் மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கல்வித்தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலை அல்லது கல்லூரியில், ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டப்படிப்பில் 50%  மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., மாணவர்கள் 45% மதிப்பெண்கள்
பெற்றிருந்தால் போதுமானது. ’மெரிட்’ முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
வயது வரம்பு: 1.8. 2017ம் தேதி நிலவரப்படி வயது 30க்குள் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 4.8.2017
மேலும் விவரங்களுக்கு: www.yogamdniy.nic.in

தமிழ்வழியில் சட்டப்படிப்பு!

தாய்மொழியில் கற்பதால் மாணவர்களால் பாடத்தை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும் என்ற கருத்தின் அடிப்படையில்  இந்தக் கல்வி ஆண்டில் (2017 - 2018) திருச்சி, கோவை, நெல்லை ஆகிய அரசுச் சட்டக்கல்லூரிகளில் உள்ள 3 மற்றும் 5 வருட சட்டப்படிப்பு தமிழ்வழியில் தொடங்கப்படவுள்ளது. அந்தக் கல்லூரிகளில் தலா 60 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு சட்டக் கல்லூரியில் ஐந்து வருட சட்டப்படிப்புக்கு மட்டும் தமிழ்வழியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் தொழிலின் மீதான ஈர்ப்பு மாணவர்களிடையே குறையாமல் உள்ளது. சட்டப்படிப்புக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நல்ல வரவேற்புள்ளது. இதற்கு முன்பே சென்னை, மதுரை சட்டக் கல்லூரிகளில் மட்டும் தமிழ்வழியில் சட்டப்படிப்பு இருந்தது. தற்போது மேற்கண்ட சட்டக் கல்லூரிகளிலும் இந்த ஆண்டு முதல் தமிழ்வழியில் சட்டப்படிப்பு தொடங்கப்படுவது கிராமப்புற மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தும்.

இனி பட்டப்படிப்பு சான்றிதழிலும் ஆதார்!

இந்தியர்கள் இனிமேல், ஆதார் அட்டை இல்லாமல் எந்தச் செயலையும் செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. ரயில் டிக்கெட், வங்கி கணக்கு, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு ஆதார் அட்டை அவசியம் என்ற நிலையை மத்திய மாநில அரசுகள் கொண்டு வந்துவிட்டன. இந்நிலையில் பட்டப்படிப்பு சான்றிதழில் போலிகள் அதிகம் நடமாடுவதைத் தவிர்க்க, இனிமேல் விநியோகிக்கப்படும் பட்டப்படிப்பு சான்றிதழில் மாணவரின் ஆதார் அட்டை எண் மற்றும் புகைப்படம் இடம்பெற வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு
(யு.ஜி.சி)  அறிவுறுத்தியுள்ளது.

பட்டப்படிப்புகளில் படிப்பதற்காக மாணவர்கள் சேரும் கல்லூரிகள் பெயர்களையும், படிப்பு முறை (முழுநேரம், பகுதி நேரம் அல்லது தொலைநிலைக் கல்வி) போன்ற விவரங்களையும் சான்றிதழ்களில் சேர்க்கவும், அதில் மாணவர்களின் புகைப்படங்கள் மற்றும் ஆதார் எண் இடம்பெற வேண்டும் என்றும், அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் யு.ஜி.சி. அறிவுறுத்தி உள்ளது.

1325 சிறப்பாசிரியர்கள் பணி!

பள்ளிக் கல்வி மற்றும் இதர துறைகளில் 2012 முதல் 2016 ஆம் ஆண்டிற்கான சிறப்பாசிரியர்கள் ( உடற்கல்வி, இசை, ஓவியம், தையல்) காலிப்பணியிடங்களுக்கான நேரடி நியமன பணித்தெரிவிற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மொத்தம் 1325.
கல்வித் தகுதி : பொதுக் கல்வித் தகுதி - 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு, தொழில்நுட்பக் கல்வி.
வயது வரம்பு: பணிநிறைவு வயது 58 ஆண்டுகள் என்பதால் 1.7.2017 அன்று பணிநாடுநர்களின் வயது 57க்கு மேல் இருக்கக்கூடாது.
தேர்வுக் கட்டணம்: தேர்வுக் கட்டணமாக ரூ.500 (sc/sca/st மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேர்வுக் கட்டணம் ரூ.250 மட்டும்) ஆன்லைனில் கிரெடிட்/டெபிட் கார்டுகள் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணைய தளத்தில் இதற்குரிய trbonlineexams.in/spl/ இணைப்பினை பயன்
படுத்தி இணைய வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 18.8.2017 (பிற்பகல் 11.59 வரை). எழுத்துத் தேர்வு 23.9.2017-ல் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு http://trb.tn.nic.in என்ற இணைய
தளத்தைப் பார்க்கவும்.

ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு இலவசப் பயிற்சி!

புதுடெல்லியில் உள்ள ஜமியா மில்லியா இஸ்லாமியா மத்திய பல்கலைக்கழகம், விடுதி வசதியுடன் கூடிய ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு சிறுபான்மையினரிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
சேர்க்கை முறை: யு.பி.
எஸ்.சி., மூலம் தேர்வு நடத்தப்படும். அப்ஜெக்டிவ் அடிப்படையிலான எழுத்துத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறும்.
உதவித்தொகை: மாதம் 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 8.8.2017
மேலும் விவரங்களுக்கு: பல்கலைக்கழகத்தின் http://jmi.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.