தொழில் நுட்பங்களைத் தமிழில் தரும் EACH ONE TEACH ONE



புதுமை

தமிழ்நாட்டில் தொழில்நுட்பத் துறைகளில் பட்டப்படிப்பு முடித்த பாதிப்பேர்  தொழில்நுட்பம் குறித்த அறிவை அவ்வளவாகப் பெற்றிருப்பதில்லை. ஏனென்றால், டெக்னாலஜியின் மொழி ஆங்கிலமாக இருப்பதே தமிழ்நாட்டு மாணவர்களின் இந்நிலைக்குக் காரணம்.

நம் பட்டதாரிகளின் இந்நிைலமையைக் கண்ட கிரிட்ஸ் அண்ட் கைட்ஸ் என்ற நிறுவனத்தின் சாஃப்ட்வேர் டெவலப்பரான ராஜவசந்தன், டெக்னாலஜி குறித்த ஆல் இன் ஆல் அப்டேட்டுகளை வீடியோக்களாக்கி ‘ஈச்  ஒன் டீச் ஒன்’என்ற யு-டியூப் சேனலை  தொடங்கி தொழில்நுட்பங்களைத் தமிழில் ற்றுத்தந்துகொண்டிருக்கிறார்.

நவீன டெக்னாலஜி பற்றிய அறிமுகங்கள்,  ஆச்சரியமூட்டும் தொழில்நுட்பச் செய்திகள், நடைமுறை ஆய்வுகள் குறித்த எளிதாக புரியும்படியான டெக்னாலஜி வீடியோக்கள்  ஒருபுறம், பொய்யான வரலாற்றுச் சம்பவங்களின் பின்னணி, கோடிங் மற்றும் போட்டோகிராபி கற்றுத் தரும் வீடியோக்கள் மறுபுறம் என தன் யு-டியூப் சேனலை பயனுள்ள பொக்கிஷங்களின் பெட்டகமாக்கியிருக்கிறார்.

தமிழ் மாணவர்களுக்குப் பயன்படும் விதமாக தொழில்நுட்பக் கல்வியை யு-டியூப் மூலம் சுலபமாக்கியிருக்கும் ராஜவசந்தனிடம் பேசியபோது, “சாஃப்ட்வேர் டெவலப்பராக வேலை நல்லபடியாகப் போய்க்கொண்டிருந்த நேரம். என்னோட நிறுவனத்தில் எனக்கு கீழ் ஒரு டீம் வேலை பார்த்தாங்க.

அவங்க பெரும்பாலும் கிராமங்கள்ல இருந்தும், வெளியூர்களில் இருந்தும் பி.இ., எம்.சி.ஏ. போன்ற பட்டப்படிப்பை படிச்சிட்டு சென்னைக்கு வந்தவங்க. அதிலிருந்த முக்கால்வாசி பேருக்கு தான் படித்து முடித்துவிட்டு வந்த பாடப்பிரிவில் டெக்னாலஜி பற்றிய அறிவு குறைவாகவே இருந்தது. இதன்காரணமாக வேலையை முடிக்க தாமதமாவது, தவறுகள் நடப்பது போன்ற சிக்கல்கள் உருவானது.

டெக்னாலஜி பற்றிய பாடங்கள் ஆங்கிலத்தில் இருந்ததே அவர்களின் நிைலமைக்கு காரணம் என உணர்ந்தேன். ஆகவே, எனக்குத் தெரிந்த டெக்னிக்கல் ஸ்கில்ஸை அவர்களுக்கு சொல்லித் தர ஆரம்பிச்சேன். எனக்கு டெக்னாலஜி, கோடிங், புரோகிராமிங்னு கொஞ்சம் தெரியும். இதைச் சொல்லித் தரும்போது புரிஞ்சிகிட்ட விஷயங்களை நடைமுறையில் வேலை செய்யும்போது அவர்களால் செயல்படுத்த முடியவில்லை.

அதற்கு ஆங்கில மொழி அறிவும் ஒரு காரணமாக இருந்தது. நமக்குத் தெரிஞ்ச டெக்னிக்கல்  விஷயங்களை வீடியோக்களாக யூடியுபில் அப்லோடு பண்ணினால் இவர்களைப் போல் டெக்னாலஜி மீது ஆசை இருந்தும் அணுக முடியாமல் இருப்பவர்களுக்கு உதவும்னு முடிவு பண்ணினேன். அதன் விளைவாக 2016 ஜனவரியில் உருவானதுதான் எங்களுடைய யு-டியூப் சேனல். 

‘சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவித்துக்கொண்டிருப்பவர் களுக்கு சாப்பிட பணம்  தருவதைவிட, தனக்கு தெரிந்த தொழிலை கற்றுக்கொடுத்து வாழ்நாள் முழுதும் அவரை வயிறார சாப்பிட வழிவகை செய்வதே சரியானது’என்ற ஒரு  சொல்வழக்கை மனதில் வைத்து  எனக்குத் தெரிந்த விஷயங்களைத் தெரியாதவர்களுக்கு கற்றுத் தரவேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதுதான் ஈச்  ஒன் டீச் ஒன் எனும் யு-டியூப் சேனல்” என  சேனல் உருவான பின்னணியை ராஜவசந்த் கூறினார்.

உங்களின் வீடியோக்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு எப்படி இருக்கு என்று கேட்டபோது, “டெக்னாலஜி என்பது நவீன அறிவியலின் பிராக்டிக்கல் வெர்ஷன். வீடியோவை பார்த்து ஏற்படும் சந்தேகங்களை எந்நேரமும் கேட்டு தெளிவு பெறலாம்  என்ற நோக்கில் வீடியோவில் எங்கள் டீமின் வாட்ஸ்-அப் நம்பரை கொடுத்தோம். தமிழில் டெக்னாலஜி குறித்த என் வீடியோக்களுக்கு முதலில் பெரிதாக எந்த வரவேற்பும் இல்லாமல்தான் இருந்தது. எங்கள் டீம் மெம்பர்ஸ் மட்டும் அதை பார்த்து பயனடைந்துவந்தார்கள்.

நாளடைவில் டெக்னாலஜியில் ஆர்வமுள்ளவர்கள் எங்கள் சேனலை அணுக ஆரம்பித்தார்கள். சந்தேகங்களைக் கேட்டு வாட்ஸ்-அப்பிலும் மெம்பர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாக ஆரம்பித்தது. விவாத மேடையாகவே எங்கள் வாட்ஸ்-அப் குரூப் திகழ்ந்தது. இப்படியே  256 மெம்பர்களுடன் இரண்டு வாட்ஸ்-அப் குழுக்கள் உருவாகியுள்ளது. தொழில்நுட்பங்களில் விளையாட தமிழ்நாட்டு மாணவர்களுக்கு விருப்பம்தான். ஆனால், மொழிதான் பிரச்னை. அதை சரி செய்தால் போதும்” என்ற ராஜவசந்த் தங்கள் இலக்கை பற்றி விளக்கினார்.

மாணவர்களின் இந்நிலைக்குக் காரணம் தமிழ்நாட்டுக் கல்விமுறை சரியில்லை என்று சொல்ல மாட்டேன். ஏனென்றால் எட்டாம் வகுப்பு படிப்பவனுக்கு அவனுக்குத் தேவையான அனைத்தும் அவன் புத்தகத்தில் உள்ளது. ஆனால், சிக்கல் என்னவென்றால் அதை அவனுக்கு எப்படி சொல்லிக் கொடுக்க வேண்டும் எனும் டீச்சிங் சிஸ்டத்தில்தான் சிக்கல் உள்ளது. எந்த மொழியில் மனிதன் சிந்திக்கிறானோ அந்த மொழியில்தான் அவன் கல்வி கற்க வேண்டும். ஆனால், இங்கு நிலமை அப்படியே தலைகீழாக உள்ளது.

எனக்குத் தெரிந்த விஷயங்களை  எந்த சமரசமும் இல்லாமல் கற்றுத் தந்து தமிழ்நாட்டில் டெக்னாலஜி யில் ஆர்வமுள்ளவர்களைத் தொழில்நுட்பம் குறித்து கேள்வி கேட்க செய்து அதற்கான பதிலை அவர்களையே தேடச் செய்தலே என் இலக்கு” என்று  தன்னம்பிக்கையோடு தன் குறிக்கோளையும் சொல்லி முடித்தார் ராஜவசந்த். இவரின் நல்ல முயற்சிக்கு நாமும் வாழ்த்து சொல்வோம்!

- குரு