மேலாண்மை பட்டப்படிப்புகளில் சேர MAT Exam 2017



அட்மிஷன்

இந்தியா மட்டுமின்றி பிற நாடுகளிலுமுள்ள புகழ்பெற்ற மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் உள்ள அனைத்து வகையான மேலாண்மைப் படிப்புகளிலும் சேர்க்கை பெறுவதற்கான ‘மேலாண்மைத் திறனாய்வுத் தேர்வு  செப்டம்பர்’2017’ (Management Aptitude Test -MAT September’2017) குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

மேலாண்மைத் திறனாய்வுத் தேர்வு: அனைத்திந்திய மேலாண்மைக் கழகம் (All India Management Association) எனும் அமைப்பு, ‘மேலாண்மைத் திறனாய்வுத் தேர்வினை நடத்தி அதற்கான மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கி வருகிறது.

1988ஆம் ஆண்டில் இந்தியாவிலுள்ள வணிகப் பள்ளிகளுக்கான (B-School) நுழைவிற்குக் கூடுதல் தகுதியாகக் கொள்ளப்பட்ட இந்த மதிப்பெண் சான்றிதழ், 2003 ஆம் ஆண்டு முதல் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையால், இந்தியாவின் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலுமுள்ள மேலாண்மைத் துறையின் முதுநிலைப் பட்டப்படிப்புகள் (MBA) மற்றும் முதுநிலைப் பட்டயப்படிப்புகள் (PGDM) போன்றவைகளில் சேர்க்கை பெறுவதற்கான தகுதியுடையதாக அங்கீகரிக்கப்பட்டது. தற்போது, இந்தியா மட்டுமின்றி பன்னாட்டு அளவிலான புகழ்பெற்ற நிறுவனங்களின் மேலாண்மைப் படிப்புகளுக்குமான சேர்க்கைக்கும் இத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள் உதவுகின்றன.

கல்வித்தகுதி: இத்தேர்வுகளுக்குக் குறைந்தபட்ச கல்வித்தகுதியாக ஏதாவதொரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பில் கடைசி ஆண்டு பயின்று வரும் மாணவர்களும் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கும் முறை: இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அனைத்திந்திய மேலாண்மைக் கழகத்தின் https://apps.aima.in/Matsept17/ எனும் இணைய முகவரிக்குச் சென்று, விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதற்கான வழிகாட்டல்களை முழுமையாகப் படித்துத் தெரிந்துகொண்டு, இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இணைய வழியில் விண்ணப்பிக்கும்போது, தேர்வுக் கட்டணமான ரூ.1400ஐ Credit Card/Debit Card அல்லது Net Banking மூலம் செலுத்தலாம்.

இது தவிர, இக்கழகத்தின் அச்சிட்ட விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று அல்லது இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொண்டு, அந்த விண்ணப்பத்தினை நிரப்பி அனுப்பி வைக்கலாம். விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயரில் தேர்வுக் கட்டணமாக ரூ.1400க்கான வங்கி வரைவோலையைப் பெற்று, அதையும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பிவைக்க வேண்டும்.

இணைய வழியில் விண்ணப்பிக்கவும், அஞ்சல் வழியிலான விண்ணப்பம் அலுவலகத்திற்குச் சென்றடையவும் கடைசி நாள்: 25.8.2017.
தேர்வு மையங்கள்: இந்தத் திறனாய்வுத் தேர்வு, தாள் வழித் தேர்வு (Paper Based Test), கணினிவழித் தேர்வு (Computer Based Test) என்று இரண்டு வழிமுறைகளில் நடத்தப்படுகின்றன.

தேர்வு எழுத விரும்பும் வழிமுறையினை விண்ணப்பிக்கும்போதே, விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். இரு வழிமுறைகளுக்குமான தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் இடம்பெற்றிருக்கின்றன. தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர் உட்பட நாடு முழுவதும் மொத்தம் 37 முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இம்மையங்களில் 24 மையங்களில் தாள்வழித் தேர்வு மட்டும் நடத்தப்படும். 13 மையங்களில் தாள்வழித் தேர்வு, கணினிவழித் தேர்வு என இரு வழிகளிலுமான தேர்வுகள் நடத்தப்படும்.

 தமிழ்நாட்டில், சென்னையில் மட்டும் தாள்வழித் தேர்வு, கணினிவழித் தேர்வு என்று இரு வழிகளிலான தேர்வுகள் நடத்தப்பெறும். கோயம்புத்தூர் மையத்தில் தாள்வழித் தேர்வினை மட்டுமே எழுதமுடியும். அனுமதி அட்டை: இத்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதற்கான அனுமதி அட்டையினை (Admit Card) 26.8.2017 முதல் https://apps.aima.in/matadmitcard.aspx எனும் இணைய முகவரியிலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தேர்வு நாட்கள்: இரு வழிகளிலான தேர்வுகளில் தாள்வழித் தேர்வு (Paper Based Test) 3.9.2017 அன்று காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை அனைத்து மையங்களிலும் நடைபெறும். அதன் பின்னர், கணினி வழித் தேர்வு (Computer Based Test) 9.9.2017 முதல் தொடங்கி மாறுபட்ட நேரங்களில் நடத்தப்பெறும். கணினிவழித் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கைக்கேற்ப இந்நாட்களின் அளவும் அதிகமாக இருக்கும். கணினிவழித் தேர்வு எழுதுபவர்கள் அவர்களுடைய அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாளில், நேரத்தில் மட்டுமே தேர்வினை எழுத முடியும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மதிப்பெண் சான்றிதழ்: தேர்வுக்கான முடிவுகள் ஒரு மாதத்திற்குப் பின்பு http://apps.aima.in/mat_input_result.aspx எனும் இணைய முகவரியில் வெளியிடப்படும். தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழை இந்த இணைய முகவரியிலிருந்து விண்ணப்பதாரரின் 6 இலக்கத்
திலான பதிவு எண் (Registrationn Form Number), 9 இலக்கத்திலான வரிசை எண் (Roll Number) போன்றவைகளை உள்ளீடு செய்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

ஒளிப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் ஒன்றும் அஞ்சல் வழியில் அனுப்பி வைக்கப்படும். இந்த மதிப்பெண் சான்றிதழினை மேலாண்மைப் படிப்புச் சேர்க்கைக்கு ஒரு வருட காலத்திற்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இத்தேர்வினை அங்கீகரித்துள்ள மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள், தேர்வுக்கான பாடத்திட்டங்கள், முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் தேர்வு குறித்த கூடுதல் தகவல்கள் போன்றவற்றை https://www.aima.in/testing-services/mat/mat.html எனும் இணையதளத்திற்குச் சென்று தெரிந்துகொள்ளலாம். தேர்வு தொடர்பான தகவல்களை 011-47673020 எனும் தொலைபேசி எண்ணிலோ அல்லது mat@aima.in எனும் மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டும் பெறலாம்.

- தேனி மு.சுப்பிரமணி