அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!மொழி

Loose vs Lose

ஒரு ஆங்கில பத்திரிகையைக் கையில் எடுத்துக்கொண்டு ரகுவை நோக்கி வந்த ப்ரவீணா, ‘Choose quickly, else you will loose’ என்ற வரியைக் காண்பித்தவாறே, “ரைமிங் வேர்ட்ஸ் சூப்பர். இல்லைங்களா சார்?” என்றாள். பத்திரிகை வரியைப் பார்த்த ரகு “ரைமிங் எல்லாம் சரிதான். ஆனால் மீனிங்தான் தப்பு” என்றார்.

ரகு சொன்னதைக் கேட்டு புருவம் உயர்த்தி “எப்படி?” என்ற பாவனையில் ஒரு பார்வை பார்த்தாள் ப்ரவீணா. “சரி. ‘Choose quickly, else you will loose” என்பதன் அர்த்தம் என்ன?” என்று கேட்ட ரகுவிடம், “சீக்கிரமா தேர்ந்தெடு, இல்லையென்றால் இழந்துவிடுவாய்” என்றாள் ப்ரவீணா.

“ப்ரவீணா…. ‘loose’ என்றால் ‘இழந்துவிடுதல்’ என்று பொருள் கிடையாது. ‘தளர்வான’ என்று பொருள். ‘lose’ என்றால் தான் ‘இழத்தல் அல்லது தொலைத்தல்’ என்று பொருள். so ‘Choose quickly, else you will lose’ என்று தான் வரவேண்டுமே தவிர ‘loose’ என்று வரக்கூடாது” என்ற ரகுவைச் சற்றே புரிந்துகொள்ள முடியாமல் பார்த்தாள் ப்ரவீணா.

“என்ன…? நான் சொல்றதை நம்ப முடியலயா? ‘lose’ மற்றும் ‘loose’ ஆகிய இரண்டு வார்த்தைகளுக்கும் ‘லூஸ்’ என்ற ஒரே உச்சரிப்புதான். ஆனால், ஸ்பெல்லிங், மீனிங், இலக்கண அடையாளம் வேறு வேறு. அதாவது, ‘lose’ என்பது வினைச்சொல். (lose lost lost losing) மற்றும் ‘loose’ என்பது விவரிக்கும் சொல். அதாவது, நீ தொலாபுலான்னு டிரஸ் போட்டிருந்தா அது லூஸ் ஃபிட். (Loose fit)…. முடிச்சு சரியா போடலைண்ணா லூஸ் நாட் (loose knot) பற்பொடி விளம்பரத்தில பார்த்திருப்பியே ‘ஆடும் பல் அசையாது’ன்னு. அந்த ஆடும் பல்லுக்கு loose tooth என்று சொல்ல வேண்டும்.”

என்றார் ரகு.உடனே ப்ரவீணா, “அப்படின்னா ‘சரியான லூஸ் நீ’ன்னு என்னை அடிக்கடி என் அண்ணன் சொல்லுவான், அதுக்கும் looseதான் ஸ்பெல்லிங்குங்களா சார்?” என்று கேட்டாள். அதற்கு,“ஆமாம், அதுதான்.

‘Have an eye, else you may lose’ என்பார்கள். lose என்பதற்குத் தொலைந்து போகுதல்-தொலைத்துவிடுதல், (He lost his son during Tsunami) விட்டுவிடுதல், (If you lose that 2000 rupee currency, you will feel sorry) தோற்றுப்போதல் (They lost the battle) என்று பல அர்த்தங்கள் உண்டு” என்று சொன்ன ரகு தன் கைக் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு இருக்கையை விட்டு எழுந்து வெளியே புறப்பட்டார்.ஆங்கில வார்த்தை சந்தேகங்களுக்குத் தொடர்புகொள்ள:englishsundar19gmail.com        

சேலம் ப.சுந்தர்ராஜ்