TNPSC GROUP 2A தேர்வில் வெற்றி பெறுவது எப்படி..?



போட்டித் தேர்வு டிப்ஸ்

தேர்வர்களுக்கு அவசியமான சூப்பர் டிப்ஸ்!


தமிழக அரசுப் பணியில் சேர்ந்துவிட வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு தொடர்ந்து பல தேர்வுகளையும் எழுதி டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ தேர்வையும் எழுத ஆர்வமாகக் காத்திருந்த தேர்வர்கள் களத்தில் இறங்க வேண்டிய காலம் வந்துவிட்டது. ஆம், ஆகஸ்ட் 6 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. இறுதிக்கட்ட தயாரிப்பில் இருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு இதோ பயனுள்ள சில குறிப்புகள்.

* குறைந்த பட்சம் 5 முழுமையான மாதிரித் தேர்வுகளை எழுதிப் பார்க்க வேண்டும். தேர்வு அறை மாதிரியே சூழலை உருவாக்கிக் கொண்டு 3 மணி நேரத் தேர்வாக நீங்கள் எழுதும் மாதிரித் தேர்வு அமைய வேண்டும்.

* மாதிரித் தேர்வுகளை மதிப்பிடும்போது கவனமாக மதிப்பிடுங்கள். இதே தேர்வுக்குத் தயாராகும் இன்னொருவர் உங்கள் தேர்வுத்தாளை மதிப்பீடு செய்வது சரியாக இருக்கும்.

* மாதிரித் தேர்வுகளை எழுதும்போது திட்டமிட்ட நேரத்திற்குள் அனைத்து வினாக்களையும் முடித்துவிட வேண்டும். இது உங்கள் நேர மேலாண்மைக்கு உதவும்.

* மாதிரித் தேர்வுகளை மதிப்பிட்ட பின் உங்கள் பலமான பகுதி எது? பலவீனமான பகுதி எது? என்று தெரிந்துகொண்டு சரி செய்துகொள்ளுங்கள்.

*மாதிரித் தேர்வுகளில் நீங்கள் செய்யும் தவறுகளை மிகச் சரியாகத் திருத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் செய்திருக்கிற பிழை… சாதாரணமான தவறா? (Silly Mistakes) ஞாபக மறதியால் ஏற்பட்ட பிழையா? (Memory Sense) கருத்துகளை புரிந்து கொள்வதில் ஏற்பட்டுள்ள தவறா? (Concept Mistakes) என்பதைப் பார்க்க வேண்டும்.

* கேள்விகளை மிகவும் கவனமாகப் படிக்க வேண்டும். ஏனெனில் அவற்றில் ஏதேனும் சிறு வித்தியாசங்கள் (நுட்பமான செய்திகள்) இடம்பெற்றிருக்கும்.
 5 முழுமையான தேர்வுகளைத் தவிர மேலும் 5 முழுமையான தேர்வுகளுக்கு வாய்வழித் தேர்வுகளை (Oral Tests)  முயன்று பார்க்கலாம்.
தேர்வறைக் குறிப்புகள்

*தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகத் தேர்வு மையத்திற்கு சென்றுவிடுங்கள். தேர்வு மையங்கள் எங்கே இருக்கின்றன என்று ஓரிரு நாட்களுக்கு முன்பே தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

*ஒரே பெயரில் வெவ்வேறு இடங்களில் பள்ளிகள் செயல்படுவதால், பள்ளிகளின் இருப்பிடங்களைக் குறைந்தபட்சம் முதல் நாளே தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

*தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை முன்கூட்டியே பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஹால் டிக்கெட்டில் உங்கள் புகைப்படம் இல்லையென்றால் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் இருந்து உங்கள் புகைப்படம் ஒட்டிய தற்காலிக அடையாள அட்டையைத் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

*தேர்வுக்குச் செல்லும்போது இரண்டு பால்பாயின்ட் பேனாக்களை எடுத்துச் செல்லுங்கள்.

*விடையளிக்கும்போது பதற்றமாக இருக்காதீர்கள். ஒவ்வொரு கேள்வியையும் கவனமாகப் படித்து புரிந்துகொண்டு விடையளியுங்கள். உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் விடைத்தாளில் (OMR Sheet) வரிசைக்கிரமமாக விடைகளை எழுதுங்கள்.

*தெரிந்த வினாக்களுக்கு விடையளித்துவிட்டு இடை இடையே வினாக்களை விட்டுச் செல்வது ஆபத்தானது.  OMR விடைத்தாளில் ஒரு விடைக்கு நிழலிடுவது மாறினால் கூட ஒட்டுமொத்த விடைகளும் தவறாகிவிடும். மிக கவனம்.

*ஆப்டிடியூட் பகுதியில் சில கணக்குகள் கடினமாகக் கேட்கப்பட்டிருக்கும். இந்த வகை வினாக்களுக்கு விடையளிக்க நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளாதீர்கள். அது உங்கள் தேர்வு நேரத்தை முழுமையாக விழுங்கிவிடும். கொடுக்கப்பட்ட நான்கு விடைகளையும் வினாவில் அப்ளை செய்து பார்த்து எளிமையாக விடை கண்டுபிடித்துவிடலாம்.

*மிக எளிமையான ஓர் உதாரணத்தைப் பாருங்கள்.
வினா : 7 - X = 4  எனில்  ‘X’ன் மதிப்பு
A) 4     B) 8    C) 3    D) 10

செய்முறை விளக்கம் - இந்த வினாவிற்கு முறைப்படி விடை கண்டுபிடிக்க வேண்டுமானால் கீழ்க்கண்டவாறு செய்யவேண்டும்.
7-X = 4
-X = 4-7
-X = - 3
X = 3    விடை = C) 3 ஆகும்.

ஆனால் விடைகளை ஒவ்வொன்றாக கொடுக்கப்பட்டிருக்கும் சமன்பாட்டில் பிரதி யிட்டுப் பார்க்கலாம்.
முதல் விடை A) 4
X = 4 எனச் சமன்பாட்டில் பிரதியிட
7 - 4 = 4
3 = 4 வருகிறது. எனவே, இது தவறு.

இப்படி ஒவ்வொரு விடையாகப் பிரதியிட்டு பார்ப்பது எளிதானது. மிகக் கடினமான கணக்குகளுக்கு இந்த முறை பயன்படும்.

*நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் விடையை நன்றாக யோசித்து நிழலிடுங்கள்.

*ஒரு முறை நிழலிட்ட விடையை மாற்ற முயற்சித்து இங்க் எரேசர், ப்ளேடு போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டாம். அது உங்கள் விடைத்தாளை நாசமாக்கிவிடும்.

15 நிமிடம் முன்பாகவே முடித்துவிடுங்கள். ஏதேனும் கேள்வி விடுபட்டிருக்கிறதா என்று பாருங்கள். ஏனெனில் ஒவ்வொரு கேள்வியும் உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கக்கூடியது.

*தேர்வறைக்கு செல்போன் கொண்டு போவதை அவசியம் தவிர்க்கவும். தேர்வறைக்கு வெளியே செல்போனை வைத்துவிட்டு தேர்வறையில் பதற்றமாக இருக்க வேண்டாம்.

*தேர்வு எழுதும் மூன்று மணி நேரமும் மிக முக்கியமானது. நேரவிரயம் செய்யாதீர்கள். உங்களுக்கான நல்ல நேரம் தொடங்கட்டும். வாழ்த்துகள்!
(TNPSC அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ள சூப்பர் டிப்ஸ் பகுதி அடுத்த இதழில் இடம்பெறும்)