எனக்கும் ரொமான்ஸ் வரும்! வெற்றி சவால் விடுகிறார்



‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி அனைவரின் பாராட்டைப் பெற்று, ‘ஜீவி’ படத்தில் சிறந்த நடிகன் என்ற அந்தஸ்தைப் பெற்றவர் வெற்றி. தற்போது ஐந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய சினிமா அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
“உங்க சொந்த ஊரு?”

‘‘சொந்த ஊர் திருநெல்வேலிதான். ஆனால், நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னைதான். படிச்சது லண்டனில். படிப்புக்குப் பிறகு அப்பாவுடன் சேர்ந்து கன்ஸ்ட்ரக்‌ஷன் ஒர்க்கை கவனித்து வந்தேன்.”
“அப்புறம் எப்படி சினிமாவுக்கு?”

“சினிமா நடிகனாக வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. சின்ன வயதில் ரஜினி சாரின் ஸ்டைல் பிடிக்கும். காலேஜ் டைமில் விஜய் சாரின் ரசிகனாக மாறினேன். சினிமாவில் நடிக்க முடிவானதும் நடிப்புக்கு கூத்துப்பட்டறை, கிஷோர் மாஸ்டரிடம் நடனம், பவர் பாண்டியன், சுதீஷ் மாஸ்டர்களிடம்  ஆக்‌ஷன் என்று என்னைத் தயார்படுத்திக்கொண்டேன்.”
“முதல் படமே சொந்தத் தயாரிப்பு போல?”

“எனக்கு பிசினஸ் பின்னணி இருப்பதால் மிகவும் கவனமாக என்னுடைய ஸ்டெப்ஸை எடுத்து வைத்தேன். ஏன்னா, நான் தோற்றுப்போய்விட்டால் ‘எதுக்கு தேவையில்லாத வேலை’ என்று சுற்றி இருப்பவர்களிடமிருந்து கமெண்ட் வரும்.  அதன்படி என்னுடைய முதல் படத்தை கவனமாகத் தேர்வு செய்தேன்.

வெளி நிறுவனங்களில் ஒருசில வாய்ப்புகள் வந்தாலும் அதில் சொல்லும்படியான கேரக்டர் இல்லாததால் தயங்கினேன். ஒரு கட்டத்தில் அப்பாவே எனக்காக படம் தயாரிக்க முன் வந்தார். அப்படி எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘8 தோட்டாக்கள்’ படத்தில் நாயகனாக அறிமுகமானேன்.”

“முதல் படத்தில் நல்ல வரவேற்பு கிடைச்சும், அடுத்தடுத்து படங்களில் காணோமே?”

“செலக்டிவ்வா செய்யுறேன். ‘8 தோட்டாக்கள்’ படத்துக்குப் பிறகு வந்த ‘ஜீ.வி’ படத்துக்கும்ப் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்போ நிறைய வாய்ப்புகள் வந்துள்ளன. கதைக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் நடிக்கணும் என்பதால் கவனமாகப் படங்களைத் தேர்வு செய்கிறேன்.”
“இப்போ என்ன படம் போயிக்கிட்டிருக்கு?”

“இப்போ ‘கேர் ஆஃப் காதல்’ படத்தில் நடித்துள்ளேன். இந்தப் படம் ‘கேர் ஆப் கச்சிராப்பலம்’ என்ற தெலுங்குப் படத்தின் மறு உருவாக்கம். ஹேமம் பார் இயக்கியுள்ளார். இது காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம்.

‘இறுதிச்சுற்று’ படத்தில் நாயகிக்கு அக்காவாக நடித்த மும்தாஜ் எனக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் ‘தாடி’. பிப்ரவரி மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

இந்தப் படத்துக்குப் பிறகு ‘வனம்’ படம் வெளியாகும். ‘தடம்’ படத்தில் நாயகியாக நடித்த ஸ்மிருதி இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

இதில் கலைக் கல்லூரியில் சிற்பக் கலை பயிலும் மாணவனாக நடிக்கிறேன். இந்தப் படம் பூர்வ ஜென்மத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. மூணாறு அருகே உள்ள காட்டில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி வித்தியாசமாக இருக்கும். திரையில் அந்தக் காட்சிக்கு பெரிய வரவேற்பு கிடைக்கும்.

தவிர, குரு ராமானுஜம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. செம்மரக் கடத்தலை மையமாக வைத்து இதன் கதை எழுதப்பட்டுள்ளது.”

“இளம் ஹீரோவா இருந்தும் உங்க கிட்டே ரொமான்ஸ் அவ்வளவா வெளிப்படலையே?”“முதல் இரண்டு படங்களிலும் கதைக்கு தேவைப்படாததால் நெருக்கமான காதல் காட்சிகளில் நடிக்கவில்லை. அடுத்தடுத்து வர்ற படங்களைப் பாருங்க. ‘வண்ணத்திரை’ வாசகர்களை திக்குமுக்காடச் செய்யுமளவுக்கு ரொமான்ஸ் இருக்கும்.”

“படங்களை எப்படி செலக்ட் பண்றீங்க?”

“முதலில் நான் கதை கேட்பேன். எனக்கு பிடித்திருந்தால் சம்மதம் தெரிவிப்பேன். சிறிது குழப்பமாக இருந்தால் எனது சகோதரர் மற்றும் அப்பாவுடன் கதை கேட்டு முடிவு செய்வேன். பல கதைகள் கேட்டு அவற்றில் ஐந்து கதைகளைத் தேர்வு செய்திருக்கிறேன். இந்தப் படங்களில் நடித்தபிறகு சொந்தமா நிறைய படங்கள் தயாரிக்கிற திட்டமிருக்கு. டைரக்‌ஷனிலும் எனக்கு ஆர்வம் இருக்கிறது. ஆனால் இப்போதைக்கு இல்லை.”“மறக்க முடியாத பாராட்டுகள்?”

“நிறைய. குறிப்பா சொல்லணும்னா ‘8 தோட்டாக்கள்’ பார்த்துவிட்டு ரஜினிகாந்த் சார் பாராட்டினார். ‘ஜீவி’ பார்த்துவிட்டு விவேக் பாராட்டினார். பெரிய ஜாம்பவான்களான அவர்கள் என்னுடைய நடிப்பைப் பாராட்டியது மறக்க முடியாதது.”“ரோல் மாடல் யார் சார்?”

“ரஜினி சார், விஜய் சார் ஆகியோரின் ரசிகன் என்றாலும் சினிமாவில் எனக்கு ரோல் மாடல் என்று யாருமில்லை. எனக்குள்ள திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு நடித்து வருகிறேன். நான் தனித்துவம் மிக்கவன் என்பதை நிரூபிக்க போராடிக்கிட்டிருக்கேன்.”

“சினிமாவில் ஹீரோ ஆவதற்காக ஒரு நாளைக்கு நூறு பேராவது சென்னைக்கு பஸ் ஏறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன அட்வைஸ் சொல்லப் போறீங்க?”

“வாய்ப்பு கிடைச்சதுமே வெற்றி மட்டுமே கிடைக்கும்னு குருட்டுத்தனமா நம்பக்கூடாது. சினிமாவில் வெற்றி, தோல்வி சகஜம். அதை சினிமாவைப் பற்றி தெரியாதவர்கள் புரிந்துகொள்வது கடினம். என்னுடைய முதல் படத்துக்கு நல்ல டாக் கிடைத்தது. ஆனால் டப்பு கிடைக்கவில்லை. கோடிகளில் நஷ்டம் வந்தது. அந்த மாதிரி சமயங்களில் குடும்பத்தினர் ஆதரவாக இருக்கிறார்கள்.

மைம் கோபி நல்ல ஆலோசகராக இருந்து எனக்கு டிப்ஸ் கொடுக்கிறார்.  சினிமாவில் ஒரே இரவில் ஹீரோவாக முடியாது. சினிமாவுக்கு புதுமுகங்கள் ஏராளமாக வருகிறார்கள். நல்ல படங்களில் நடிக்கும்போது ரசிகர்கள் ஆதரவு கிடைக்கும். எது நல்ல படம்னு கண்டுபிடிக்கிறது கதை கேட்கும்போதே உங்களுக்குத் தெரியணும். அப்படித் தெரிஞ்சுக்கிட்டா வெற்றி, தோல்வி பற்றி பெருசா கவலைப்பட மாட்டீங்க...”

- எஸ்