அடி பின்னுகிறார் சினேகா!



ஜோதிகாவைத் தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸ தனுஷ் நடித்த ‘பட்டாஸ்’ படத்தின் மூலம் ஆரம்பித்துள்ளார் சினேகா.
‘பட்டாஸ்’ படத்தில் அடிமுறை என்கிற சண்டைப்பயிற்சி கலைஞராக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்ற நிலையில் தன்னுடைய come back அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

‘‘படத்தில் என்னுடைய கேரக்டரை பெரிதும் பாராட்டுகிறார்கள். இந்தப் பாராட்டு அனைத்தும் இயக்குநர் துரை செந்தில்குமாருக்கு உரித்தானது. அவர்தான் இப்படியொரு மிகச்சிறந்த கதாபாத்திரத்தை உருவாக்கி, அதில் என்னை நடிக்கவும் வைத்தார்.நடிகர்களுக்கு சவால் தரும் பாத்திரத்தை உருவாக்கி, அதில் நம்மை பிரகாசிக்கச் செய்வது இயக்குநர்தான். அதுவும் முன்னணி நடிகரான தனுஷ் நடித்திருக்கும் படத்தில் அவருக்கு இணையான ஒரு கதாபாத்திரத்தை எனக்கும் கொடுத்து, இன்று இத்தனை பாராட்டையும் பெற்றுத் தந்திருக்கிறார்.

‘அடிமுறை’ கலையை எனக்கு சொல்லித் தந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் இந்நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தின் பெருமை பேசும் இப்படியொரு படத்தில் நானும் பங்கு கொண்டிருப்பது பெரும் மகிழ்ச்சி.

இன்று உலகின் தொன்மையான தற்காப்புக் கலை தமிழகத்தின் ‘அடிமுறை’ என்பது இந்தப் படம் மூலம் பதிவாகியிருக்கிறது. இது நம் அனைவருக்கும் பெருமையே. இந்நேரத்தில் படத்தில் அதிக கனம்மிகுந்த பெண் பாத்திரத்திற்கு இடம் தந்து, என் மீதும் வெளிச்சம் விழக் காரணமாயிருந்த தனுஷுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார்.  

‘பட்டாஸ்’ படத்தின் இயக்குநர் துரை செந்தில்குமாரிடம் பேசினோம்.‘‘சினேகாவின் திரைப்பயணம் மிகப்பெரியது. அவருக்கு என்றும் அழியாத பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவரது திறமைக்கு அவர் எந்த மாதிரியான பாத்திரத்தையும் மிக எளிதாகச் செய்துவிடுவார். வெகு சவால் நிறைந்த, தன்னை மாற்றிக்கொள்ள வேண்டிய  இந்தக் கதாபாத்திரத்தை வெகு அர்ப்பணிப்புடன், மிக நேர்த்தியாகச் செய்தார்.

தன் தொழில் மீது மிகுந்த காதலும், நேர்த்தியும் கொண்டவராக அவர் இருந்தார். இந்தப் படத்துக்காக நிறைய பயிற்சிகள் மேற்கொண்டார். தனது முழு ஆற்றலையும் தந்து கதாபாத்திரத்தைத் தாங்கிப் பிடித்தார். அவரது நடிப்பிற்குக் கிடைத்து வரும் பாராட்டும்  வரவேற்பும் எங்கள் மொத்த குழுவையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது’’ என்றார்.

படத்தின் தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் கூறியதாவது...‘‘comeback’ என்பது சிறந்த நடிகர்களைப் பொறுத்தமட்டில் ஒரு அர்த்தமற்ற சொல். ஒரு சிறந்த நடிகர் எக்காலத்திலும் மறக்கப்படமாட்டார்.

அதிலும் தன் தொழிலை நேசித்து, நேர்த்தியாக தன் நடிப்புத் திறமையை அர்ப்பணிப்புடன் செய்பவர் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்காது குடியிருப்பார். சினேகா அப்படியானவர்தான். அவர் தன் நடிப்பை, உயிராக நேசித்துச் செய்யக்கூடியவர். அப்படிப்பட்ட சிறந்த நடிகர்கள் ஒரு அற்புதமான கதாபாத்திரத்தைச் செய்யும்போது ரசிகர்கள் கண்டிப்பாகக் கொண்டாடுவார்கள்.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படங்களில் பெண் கதாபாத்திரங்கள் எப்போதும் கனமானதாக,  சிறந்து விளங்கக்கூடியதாக இருக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருப்போம். ‘பட்டாஸ்’ படத்தில் சிறப்புமிக்க பெண் கதாபத்திரத்தை உருவாக்கிய இயக்குநர் துரை செந்தில்குமாருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தக் கதாபாத்திரத்திற்காக சினேகா செய்துகொண்ட முன்னேற்பாடுகளும், பயிற்சியும்,  அவர் அந்த கதாபாத்திரத்தை அர்ப்பணிப்புடன் செய்த விதத்தையும் பார்த்தபோது, நிச்சயம் ரசிகர்களிடம் பெருத்த பாராட்டு பெறுவார் என எதிர்பார்த்தோம். இன்று அது நிஜமாகியிருக்கிறது. தமிழகத்தின் தொன்மையைச் சொல்லும், ரசிகர்கள் பாராட்டும்படியான படத்தைத் தந்ததில் பெரும் மகிழ்ச்சி’ என்றார்.

- ரா