தொரட்டி ஷமன் மித்ரூ



டைட்டில்ஸ் டாக்-147

‘தொரட்டி’ என்பது மேய்ப்பனின் கையில் இருப்பது. எட்டாத உயரத்தில் இருக்கும் தழைகளைப் பறிப்பதற்கு தொரட்டி பயன்படும். அந்த வகையில் என்னைப் பொறுத்தவரை சினிமாவும் எட்டாத உயரத்தில் இருக்கிறது. அதில் வெற்றிக் கனி பறிப்பது அவ்வளவு சுலபமில்லை.

எனக்கு பூர்வீகம் தேவகோட்டை. நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னை. அப்பா எலிகன்ட் நிறுவனத்தில் டிசைனிங் பிரிவில் இருந்தவர். ‘வீடு’ பட உருவாக்கத்தில் இயக்குநர் பாலுமகேந்திரா ஐயாவுடன் உடனிருந்தவர். சொந்தமாக இரண்டு படங்களைத் தயாரித்துள்ளார். அப்பா சினி ஃபீல்ட் என்பதால் என்னை அறியாமல் சினிமா ஆர்வம் எனக்குள் வந்தது.

எங்கள் குடும்பமே லாயர் ஃபேமிலி என்று சொல்லலாம். அக்கா ஹைகோர்ட் வக்கீல். மைத்துனர் சுப்ரீம் கோர்ட் வக்கீல். நானும் அடிப்படையில் வக்கீல். கம்பெனி வழக்குகளில் பிரபல நிறுவனங்களுக்காக பல வழக்குகளில் வாதாடியுள்ளேன்.

அப்பாவுக்கு சினிமா பிடிக்கும் என்பதால் என்னுடைய சினிமா கனவுக்கு பெரிய தடையாக இருந்ததில்லை. சென்னை ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் ஒளிப்பதிவுத் துறையில் தங்க மெடல் வாங்கினேன்.ஒளிப்பதிவு மேதைகள் கே.வி.ஆனந்த் சார், ரவி கே.சந்திரன் ஆகியோரிடம் ஒளிப்பதிவு நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். அரவிந்த் கிருஷ்ணா சாரிடம் இரண்டாவது யூனிட் கேமராமேனாகவும் வேலை செய்துள்ளேன். தெலுங்கு, கன்னடம், தமிழிலும் ஒருசில படங்களுக்கு கேமராமேனாக வேலை செய்துள்ளேன்.

நான் வேலை செய்த கன்னடப் படத்தில் விஜய்சேதுபதி அறிமுகமானார். அவருடன் எனக்கு நட்பு உண்டு.  அவரை வைத்து ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டேன். சில காரணங்களால் அந்த முயற்சிக்கு உயிர் கொடுக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் நானே நடிக்க முடிவாகி தொடங்கிய படம்தான் ‘தொரட்டி’.

நடிகனாவேன் என்று நினைத்ததில்லை. என்னுடைய கனவே ஒளிப்பதிவாளராக வரவேண்டும் என்பதுதான். சினிமா ஃபிலிம் வடிவில் இருந்தவரை அதன் மீதான தாகம் அதிகம் இருந்தது. டிஜிட்டலுக்கு மாறிய பிறகு சினிமா நுட்பம் எளிதாகிவிட்டது. ஃபிலிம் இருந்தவரை என்ன எடுக்கிறோம் என்பது பிரின்ட் போட்டுப் பார்த்தால் மட்டுமே தெரியும். அதுவரை சஸ்பென்ஸாக இருக்கும். ஃபிலிம் கேமரா என்பது எல்லோராலும் கையாள முடியாது. கொஞ்சம் கவனக்குறைவு ஏற்பட்டாலும் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க வேண்டும்.

டிஜிட்டல் அப்படியில்லை. எடுத்தவுடனே கலர் கரெக்‌ஷன் பண்ணிக்கலாம். இப்போது சினிமா எளிதாகிவிட்டது. இப்போது டெக்னாலாஜியைத் தாண்டி யாருக்கு பி.ஆர். ஒர்க் நல்லா பண்ணத் தெரிகிறதோ அவர்கள் கேமராமேனாகவோ, பிற டெக்னீஷியனாகவோ டிராவல் பண்ண முடிகிறது. அவர்களுக்கு தொரட்டி மாதிரி இன்னொருவரின் உதவி தேவையில்லை.

சில காலம் வரை சினிமாவில் சேரவேண்டும், ஒரு படம் எடுக்க வேண்டும் என்று வருபவர்களுக்கு தொரட்டி மோட்தான் இருந்தது. ஏன்னா, அப்போது சினிமாவில் சேருவது சுலபமான விஷயம் கிடையாது. இப்போது அதற்கெல்லாம் பிரச்சனையில்லை.  படம் எடுத்தபிறகு அதைக் கொண்டு போய் சேர்ப்பதற்கான தொரட்டிதான் இங்கில்லை.

என்னுடைய ‘தொரட்டி’ படத்தை எடுத்து முடித்தவுடன் நான் சந்திக்காத நிறுவனங்கள் இல்லை. ஆனால் எனக்கு கதவுகள் திறக்கப்படவில்லை. பிரபல நிறுவனத்தின் கையில் ‘தொரட்டி’  கிடைத்திருந்தால் அதன் ரீச் அதிகமாக இருந்திருக்கும். முன்பு நல்ல படத்தை எடுத்தால் எப்படியாவது மார்க்கெட்டுக்கு கொண்டு வர முடியும். இப்போது எவ்வளவு நல்ல படம் எடுத்தாலும் அதை வெளியிடுவது லேசான காரியமில்லை.

இப்போது 100 படங்கள் வெளியாகிறது என்றால் அதில் 10 படங்கள்தான் வெற்றி என்ற அந்தஸ்தைத் தொடுகிறது. மற்ற படங்கள் வெற்றி என்று மட்டுமே அறிவிக்கப்படுகிறது.என்னைப் போன்ற புதியவர்கள் கிளாசிக்கல் படம் எடுக்கும்போது படப்பிடிப்பபின் ஆரம்பத்திலேயே சிக்கல்களைச் சந்திக்கிறார்கள். ‘தொரட்டி’யில் துபாய்க்காரர் என்ற கேரக்டர் வரும். அந்தக் கேரக்டரில் நடிக்க பிரபல இயக்குநரிடம் கேட்டோம். அவர் ‘எனக்கு நடிக்க விருப்பமில்லை’ என்றார். கொஞ்ச நாளில் அந்த இயக்குநர் பிரபல நடிகரின் சமீபத்திய படத்தில் நடித்தார்.

அதேபோன்று படத்துக்கு ஒரு ப்ராப்பர்ட்டி தேவை என்றால் பிரபல இயக்குநர் படம் என்றால் உடனே கிடைத்துவிடு கிறது. என்னைப்போன்ற புதியவர்கள் கேட்டால் தயங்குகிறார்கள். என்னுடைய படத்தில் பழங்காலத்து விலையுயர்ந்த கார் ஒன்று தேவைப்பட்டது. கார் உரிமையாளர் கொடுக்கவில்லை. கடைசியில் பழைய அம்பாசிடர் காரைப் பயன்படுத்தினோம்.

பெரிய நிறுவனங்களுக்கு சாத்தியமாகும் விஷயங்கள் என்னைப்போன்ற புதியவர்களுக்கு சாத்தியமாக வாய்ப்பே இல்லை. ஆனால் அவுட்புட் எங்களுக்கும் அவர்களுக்கும் எந்தவிதத்திலும் குறைவு இருக்காது. அவர்களுக்கு ஃபோன் காலில் எல்லாமே நடக்கும். எங்களுக்கு அப்படி நடக்காது.
இப்போது நல்ல படம் என்பதைத் தாண்டி பிராண்டிங் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

சினிமாவில் நடிக்க வருபவர்களுக்கு எந்த பிரச்சனையுமில்லை. அவர்கள் தோல்வி அல்லது கசப்பான அனுபவங்களைப் பெறுகிறார்கள் என்றால் அவர்கள் இந்தத் தொழிலுக்கு புதியவர்கள். ஆனால் படம் எடுக்க வருபவர்கள் அப்படியில்லை. ஒரு படத்தை ஒரு இயக்குநர் எடுக்கிறார் என்றால் அவர் சினிமாவுக்கு புதியவர் இல்லை. இதே துறையில் சில ஆண்டுகளாவது அனுபவம் பெற்றிருப்பார்.

ஒரு புதிய தயாரிப்பாளருக்கு பெயர் வாங்கித் தரமுடியும். லாபம் என்பது கஷ்டம். அதை மனதில் வைத்து படம் எடுக்க வேண்டும். ‘தொரட்டி’ என்னுடைய மன திருப்திக்காக எடுத்தது. எங்களுக்கு சேட்டிலைட் உரிமை, வெளிநாட்டு வியாபாரம் என்று சில நன்மைகள் கிடைத்தன. இதேபோன்று எல்லா படங்களுக்கும் கிடைக்குமா என்பது சந்தேகமே.சினிமாவைப் புரிந்து படம் எடுத்தால் லாபகரமாக இருக்கும். இங்கு உங்களுக்கு யாரும் தொரட்டியாக இருக்கமாட்டார்கள். உங்களுக்கு நீங்களேதான் தொரட்டி.

தொகுப்பு: சுரேஷ்ராஜா

(தொடரும்)