அழகான காதல்! அபாயகரமான நோய்!!



அறிமுக இயக்குனர் பரத் மோகன் இயக்கும் படம் ‘IGLOO’. லீட் ரோலில் அம்ஜத் கான், அஞ்சு குரியன் நடித்துள்ளார்கள். இவர்களுடன் மேத்யூ வர்கீஸ், லிஸ்ஸி, பக்ஸ் ஆகியோரும் இருக்கிறார்கள். முக்கிய வேடத்தில் இரட்டையர்கள் அனிகா மற்றும் அரோஹி ஆகியோர் நடித்துள்ளார்கள்.படத்தைப் பற்றி இயக்குநர் கூறும்போது, ‘‘வாழ்க்கை எப்போதும் இனிமையாகவே இருப்பது இல்லை.

சில நேரங்களில், அது நம்மை ஆழமான மனச்சோர்வு நிலையில் வைக்கிறது, குறிப்பாக உயிருக்கு ஆபத்தான நோய்களால். அந்த நோய்களை எதிர்த்து சண்டை போட மருத்துவ முன்னேற்றங்கள் வந்து விட்டன. ஆனால் மிகப்பெரிய ஆயுதம் என்பது நம் ‘நேர்மறை’ சிந்தனைகள் தான். எமோஷனல் காதல் கதையான இந்தப் படத்தில் அப்படி ஒரு செய்தியை சொல்லியிருக்கிறேன்.

ஒரு அழகான ஜோடியின் வாழ்க்கை அபாயகரமான ஒரு வியாதியால் பாதிக்கப்படுகிறது, அவர்கள் அதை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதை காட்டும் படம் இது. இதைக் கேட்டுவிட்டு இது ஒரு சோகமான காதல் கதையா எனக் கேட்டால் அதை நீங்கள் திரையில் தான் காண வேண்டும். வாழ்க்கைக்கு அவசியமான ஒரு கருத்தை இந்தப் படத்தின் மூலம் வெளிப்படுத்த முயற்சித்துள்ளேன்.

இது மிக யதார்த்தமான பட வரிசையில் இடம்பெறும் படமாக இருக்கும். சினிமாவுக்கான ரெகுலர் டெம்ப்ளேட்டை தவிர்த்திருக்கிறோம். படத்தில் வரும் எல்லா கதாபாத்திரங்களும் நம் அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் சிலவற்றால் ஈர்க்கப்பட்டு உருவானவைகளாக இருக்கும்.

அனைத்துக் கலைஞர்களும் அவர்கள் கதாபாத்திரங்களின் ஆழத்தை புரிந்துகொண்டு திறம்பட நடித்ததால், இது ஒரு சிறப்பான படமாக வந்துள்ளது. படத்தின் ஆரம்ப 25 நிமிடங்களில் இரட்டை சகோதரிகளின் நடிப்பு எல்லோராலும் பேசப்படும்படியாக இருக்கும்.

இந்தப்படத்துக்கு நடிகர், நடிகையைத் தாண்டி இசையமைப்பாளரின் பங்கு அதிகம். அரோல் கொரேலி இசையமைக்கிறார். அவருடைய இசையில் எப்போதும் ஒருவித இனிமையை உணர முடியும். படத்தில் மூன்று பாடல்கள். மூன்று பாடல்களும் எல்லாத் தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படியாக வந்துள்ளது.

குகன் எஸ். பழனி ஒளிப்பதிபு பண்ணியிருக்கிறார். இந்தப் படத்தில் சிறப்பான நடிகர், நடிகைகளும் திறன் வாய்ந்த டெக்னீஷியன்களும் இணைந்திருக்கிறார்கள். இந்தக் காரணத்திற்காக ரசிகர்களிடம் படம் நல்ல வரவேற்பைப் பெறும் என்று ஒட்டுமொத்த டீமும் நம்பிக்கை வைத்திருக்கிறது’’ என்கிறார்.

- எஸ்