குமுதா இப்பவும் ஹேப்பி அண்ணாச்சி!



“சினிமாவுக்கு வந்து ஆறேழு வருடங்கள் ஆகிவிட்டன. ஏராளமான வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து விட்டேன். ஆனாலும் ரசிகர்கள் இப்போதும் என்னை குமுதாவாக பார்ப்பது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது’’ என்கிறார் நந்திதா ஸ்வேதா. சமீபத்தில் நந்திதா நடித்த ‘தேவி+2’, ‘7’ படங்கள் அடுத்தடுத்து வெளியாகியிருப்பதால் அதிக உற்சாகத்தில் இருக்கிறார்.

“எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளா உங்களைப் பார்க்க முடியலையே?”

“எப்போதும் போல் நான் பிஸியாகத்தான் இருக்கிறேன். தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளிலும் படம் பண்ணுகிறேன். கடந்த ஒரு வருடமாக நிற்கக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறேன். படப்பிடிப்பு இல்லாமல் ஒரு நாளும் சும்மா இருந்ததில்லை.

தெலுங்கில் நிறையப் படம் பண்றேன். கன்னடம், தமிழ், தெலுங்கு என்று எல்லா மொழிகளிலும் படம் இருக்கணும் என்பதற்காக பேலன்ஸ் பண்ணி படம் பண்ணுகிறேன். கடந்த வருடத்தில் மட்டும் 11 படங்கள் பண்ணியிருக்கிறேன்.
ஒரு வருடத்தில் நிறையப் படங்களில் நடித்தாலும் ரிலீஸ் ஆகும்போது தான் அந்த நடிகையைப் பற்றிய ‘டாக்’ இருக்கும். அடுத்து என்னை அதிகம் பார்க்க முடியவில்லை என்றால் படங்களை கவனமாக தேர்வு செய்து பண்ணுகிறேன். அப்படி பண்ணின படம்தான் ‘தேவி+2’. பட ரிலீஸுக்கு அப்புறம் குமுதா ஹேப்பி அண்ணாச்சி!”

“வழக்கத்துக்கு மாறா ‘தேவி+2’வில் மாடர்ன் கேரக்டர்?”

“ரொம்ப நாளாவே கமர்ஷியல் கேரக்டர் பண்ணணும் என்ற ஆசை  இருந்துக்கிட்டே இருந்தது. அப்படி ஹோம்லி ரோலுக்கு விடுதலை கொடுத்து முதன் முறையா மாடர்ன் கேரக்டர் பண்ணுவதற்கு இந்தப் படத்தில்தான் வாய்ப்பு கிடைத்தது. நான் ஏற்று நடித்த சாரா கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கு. கோவை சரளா, பிரபுதேவா, தமன்னா உடன் இணைந்து நடித்தது நல்ல அனுபவம். கதைப்படி பிரபு
தேவாவுக்கு தமன்னா ஜோடியாக இருந்தாலும் இயக்குநர் விஜய் இரண்டு பாடல் உட்பட எனக்கான முக்கியத்துவம் கொடுத்தார்.”

“பிரபுதேவா?”

“ரொம்ப ஜாலியான டைப். பாலிவுட், கோலிவுட் இரண்டிலும் மோஸ்ட் வாண்டட் ஆர்டிஸ்ட்  கம் டைரக்டர். பந்தா இல்லாமல் பழகக்கூடியவர். ‘தேவி+2’ படத்தில் கமிட்டானதும் பிரபு தேவாவுடன் நடிக்கும்போது கடினமாக உழைக்கணும், குறிப்பாக பாடல் காட்சிகளில் கவனமாக இருக்கணும் என்று சொன்னார்கள்.

ஆனால் பிரபு மாஸ்டர் அதற்கு நேர் எதிராக எனக்கு முழுச்  சுதந்திரம் கொடுத்தார். வசனக் காட்சிகளிலும் பாடல் காட்சிகளிலும் எனக்கான ஸ்பேஸ் ஏற்படுத்திக் கொடுத்தார். பாடல் காட்சி எடுக்கும் போது எனக்கு காலில் பிரச்சனை இருந்ததால் நடக்கவே கஷ்டப்பட்டேன். வெளிநாட்டில் படப்பிடிப்பு நடக்கும்போது திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்புவது வழக்கம்.

ஆனால் எனக்காக இந்தியாவில் எடுத்துக்கலாம் என்றார். ஆனால் எனக்குதான் மனசு கேட்கவில்லை. எனக்காக டீம்ல இருக்கிறவங்க பாதிப்படையக்கூடாது என்று வலியை பொருட்படுத்தாமல் இங்கேயே ஷூட் பண்ணலாம் என்றேன். ஏன்னா அந்தப் பாடலை தனிப்பட்ட விதத்தில் என் கேரியரின் வளர்ச்சியாகப் பார்த்தேன். கடைசியில் என்னுடைய உடல்நிலையை கருத்தில் கொண்டு நடன அசைவுகளை மாற்றி எடுத்தார்கள்.”

“இப்ப வேற என்ன படம் பண்ணுகிறீர்கள்?”

“வைபவ் ஜோடியாக ‘டானா’. சமீபத்தில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ‘நெஞ்சம் மறப்பதில்லை’, அரவிந்தசாமியுடன் ‘வணங்காமுடி', ‘ஐ.பி.சி 376’. எனக்கு ரொம்ப நாளா ஆக்‌ஷன் படம் பண்ணலையே என்ற குறை இருந்தது. அந்தக் குறையை ‘ஐ.பி.சி.376’ நிறைவேற்றியுள்ளது. படத்துல எனக்கு ஃபைட் சீனெல்லாம் இருக்கு.

இது நாயகிக்கான படம். முன் ஆயத்தம் இல்லாமல் இந்தப் படத்தில் நடிக்க முடியாது. போட்டோ ஷூட் எடுக்கும்போதே அந்த மெனக்கெடல் ஆரம்பித்துவிட்டது. கணிசமான அளவுக்கு உடல் எடையை குறைத்தேன். படத்துல போலீஸ் கேரக்டர் பண்ணியிருக்கிறேன். போலீஸ் டிரஸ்ல என்னைப் பார்த்தவர்கள் எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள். கடின உழைப்புக்கு என்றும் மக்கள் வரவேற்பு கொடுப்பதற்கு தவறுவதில்லை. அந்த வரவேற்பு இந்தப் படத்தில் அதிகம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.”

“ரசிகர்கள் குமுதா கேரக்டரை மறந்த மாதிரி தெரியவில்லையே?”

“ரொம்ப சந்தோஷமா இருக்கு. குமுதா மாதிரி கேரக்டர் சிலருக்கு நீண்ட காலத்துக்குப் பிறகு கிடைக்கும். எனக்கு துவக்கத்திலேயே கிடைத்தது. தொடர்ந்து குமுதா மாதிரி கேரக்டரை எதிர்பார்க்க முடியாது. ரசிகர்கள் பொண்ணுன்னா குமுதா மாதிரி இருக்கணும் என்று சொல்வதை என்னுடைய நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்கிறேன்.”

“சினிமா தவிர?”

“சினிமா தவிர எனக்கு பிடிச்சது படிப்பு. இப்போ எம்.பி.ஏ. நிறைவு செய்துவிட்டேன். கற்றலுக்கு அளவு இல்லை என்பதால் தொடர்ந்து படிக்கும் ஐடியா இருக்கு.”

“எதிர்கால ஆசை?”

“தென்னிந்திய மொழிகளில் மலையாளத்தில் தான் இன்னும் படம் பண்ணவில்லை. அது கூடிய சீக்கிரத்துல நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கு. இப்போ என்னைத் தேடி சில மலையாளப் பட வாய்ப்புகள் வந்துள்ளன.”

“நாயகிகளுக்கான கதைகளில் நீங்கள் இருப்பதைப் பற்றி?”

“ஆரம்பத்தில் அப்படி இல்லை. ‘உப்புக் கருவாடு’ படத்துக்குப் பிறகுதான் என்னைத் தேடி நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் வர ஆரம்பித்தது. இயக்குநர்கள் என்மீது நம்பிக்கை வைத்து ஸ்கிப்ரிட் பண்ணுவது சந்தோஷமான விஷயம்.”

“போட்டியை எப்படி சமாளிக்கிறீர்கள்?”

“போட்டி மைண்ட் செட்லே நான் இல்லை. நடிப்பு எனக்கு பிடிக்கும். அதே சமயம் வரிசையா படம் பண்ணணும் என்று எந்த கட்டாயமும் எனக்கு இல்லை. அதுமட்டுமில்ல, ஒரு நடிகையின் வளர்ச்சி, மார்க்கெட் நிலவரம், சம்பளம், போட்டி போன்றவைகளை சார்ந்துள்ளது. அந்த வகையில் எனக்கு வரும் வாய்ப்புகளில் நான் திருப்தியடைகிறேன்.

நான் சினிமாவுக்கு வந்து   ஆறேழு வருங்கள் ஆகிவிட்டது. என்னுடன் அறிமுகமானவர்களில் சிலரை இரண்டு மூன்று படங்களுக்குப் பிறகு காணவில்லை. சிலர் லைம் லைட்டுக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களுடன் ஒப்பிடும்போது நான் இன்னும் ஃபீல்டுல இருக்கிறேன். அந்த வகையில் நான் ஆசீர்வதிக்கப்பட்டவள்.”

“சினிமாவில் உங்களுடைய நெருங்கிய தோழி?”

“ஐஸ்வர்யா ராஜேஷ். எங்களுடைய நட்பு ‘கனா‘வில் தொடங்கியது. அன்று முதல் எங்களுக்குள் ஒளிவு மறைவு இல்லாமல் நிறைய விஷயங்களை உடன் பிறவா சகோதரி போல் பகிர்ந்து கொள்ள முடிகிறது. இந்த நட்பு எப்போதும் தொடர வேண்டும் என்பது தான் என்னுடைய பிரார்த்தனை.”

“இயக்குநர் ரஞ்சித்துடன் தொடர்பில் இருக்கிறீர்களா?”

“ரஞ்சித் இயக்கிய ரஜினி படங்களில் ஏன் நடிக்கவில்லை என்று மறைமுகமாகக் கேட்கிறீர்கள். உண்மைதான். அவர் அறிமுகப்படுத்திய நடிகர், நடிகைகளில் நிறையப் பேர் ‘கபாலி’, ‘காலா’ படங்களில் நடித்துள்ளார்கள். நான் மட்டும் நடிக்கவில்லை. சொல்லப் போனால் எனக்கு அந்தப் படங்களில் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. ரஞ்சித் என்னை அறிமுகப்படுத்தியவர்.

இந்தியோ, தமிழோ எனக்கான வாய்ப்பு இருக்கும் போது சரியான நேரத்துல கொடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கு. மற்றபடி ரஞ்சித்தை நான் முதல் நாள் பார்த்த மாதிரியேதான் இப்போதும் இருக்கிறார். சூப்பர் ஸ்டாரை இயக்கிய பிறகும் அவரிடம் அதே எளிமையைப் பார்க்க முடிகிறது. அவரிடம்  மாற்றம் எதுவும் இல்லை.”

“லவ் சீன்லே பின்னியெடுக்கிறீங்க. அதன் ரகசியம் என்ன?”

“ரொம்ப சிம்பிள். ஹீரோவைப் பார்த்து வெட்கப்படமாட்டேன். கேமராவைப் பார்த்துதான்  வெட்கப்படுவேன். திரையில் பார்க்கும் போது ஹீரோவைப் பார்த்து வெட்கப்படுவது போல் தெரியும்.”

“நிஜத்துல உங்களுக்கு லவ் அனுபவம் இருக்கா?”

“ஒரு பையன் என்னை ரிஜக்ட் பண்ணியிருக்கிறான். அது எப்போது நடந்தது என்று சொல்லமாட்டேன்.”

“உங்கள் விஷ் லிஸ்ட்டில் இருக்கும் நடிகர்கள்?”

“குறிப்பாக யாரும் இல்லை. இதுவரை நான் ஜோடி சேர்ந்து நடித்தவர்கள் எல்லாருமே முன்னணி நடிகர்கள். அவர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தது நானே எதிர்பார்க்காத விஷயம். ஒருவேளை குறிப்பிட்ட நடிகருடன் டூயட் பாட ஆசைப்பட்டால் அந்தப் படத்தை நானே இயக்கி தயாரிக்க வேண்டும்.”

- சுரேஷ்ராஜா