பேய் சீஸனுக்குப் போட்டியாக நாய் சீஸன்?



‘‘தமிழ் சினிமாவில் நாய் போன்ற செல்லப் பிராணிகளை வைத்து எத்தனையோ படங்கள் வெளிவந்திருந்தாலும் ‘பெளவ் பெளவ்’ முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். நாய் போன்ற விலங்குகளை வைத்து படம் எடுக்கும் போது ஒரு டெம்ப்ளேட்டில் திரைக்கதை சிக்கிக்கும். இந்தப் படத்துலே அதையும் தாண்டி நிறைய சுவாரஸ்யங்கள் காத்திருக்கு.

இந்தப் படத்துக்காக தூக்கத்தை தொலைத்து பல வருடங்கள் உழைச்சிருக்கிறேன்’’... நம்பிக்கையுடன் பேசுகிறார் இயக்குநர் எஸ்.பிரதீப் கிளிக்கார். சினிமாவில் நீண்டகால அனுபவம் உள்ள இவருக்கு, இயக்கத்தில் இதுதான் முதல் படம்.
 
“தமிழ் சினிமாவில் கோலோச்சுகிற பேய் சீசனை உடைக்க நாயோடு களமிறங்கி இருக்கீங்களா?”

“அப்படியெல்லாம் இல்லை சார். ‘பெளவ் பெளவ்’ படத்தின் ஒன்லைனை தயாரிப்பாளர் நடராஜன் சாரிடம் சொல்லும்போதே அவர் கண் கலங்கிட்டார். இது எமோஷனலா குடும்ப உறுப்பினர்களிடம் அட்டாச்மெண்ட்டுடன் இருப்பவர்களின் உணர்வுகளை அசைத்துப் பார்க்கக்கூடிய கதை.

என்னுடைய தயாரிப்பாளர் விலங்குகள் மீதும் குடும்பத்தின் மீதும் அட்டாச்மெண்ட் உள்ளவர் என்பதால் ஈஸியா அவரால் இந்தக் கதைக்குள் வர முடிந்தது. என்னிடம் ஏராளமான கதைகள் இருந்தாலும் தயாரிப்பாளரிடம் இந்த ஒரே கதையைத்தான் சொன்னேன். முதல் கதையே அவருக்கு பிடித்திருந்தது.

நான் சினிமாவை இன்ஸ்டிடியூட்டில் கற்றுக் கொள்ளவில்லை. இன்ஸ்டிடியூட்டில் படிக்கும் மாணவர்களிடம் முதல் படமாக நாய், குழந்தைகளை வைத்து எடுக்கக்கூடாது என்று  சொல்வார்களாம். காரணம், இந்த இரண்டு ஜீவன்களையும் ஹேண்டில் பண்ணுவது அவ்வளவு சுலபம் அல்ல.
குழந்தைகளின் மனநிலையால் நேர விரயம், பட்ஜெட் போன்றவை அதிகமாகும் என்பதால் அதை தவிர்க்கச் சொல்லிவிடுவார்கள். ஆனால் நான் இந்த இரண்டு ஜீவன்களை வைத்துதான் என் முதல் படத்தை எடுத்துள்ளேன். நல்லவேளை எனக்கு கிடைத்த குழந்தையும், நாயும் ஸ்மார்ட்டாக இருந்தார்கள்.

மற்றபடி என் முதல் படமாக நாயை மையமாக வைத்து படம் பண்ண வேண்டும் என்று நோக்கம் இருந்ததில்லை. இது பெட் லவ்வர்ஸ் மற்றும் குழந்தைகளுக்கான படம். ‘மைடியர் குட்டிச் சாத்தான்’ படத்துக்குப் பிறகு குழந்தைகளுக்கான முழுமையான படம் இதுவரை வரவில்லை. அந்தக் குறையை இந்தப் படம் தீர்த்து வைக்கும். அந்த வகையில் இந்தப் படத்தை குழந்தைகளுக்கு டெடிகேட் பண்ணுவதில் சந்தோஷப்படுகிறேன். அதுமட்டுமில்ல, பெரியவர்களிடமும் இந்தப் படம் ரீச் ஆகும்.

இந்தப்  படத்தை உலகத் திரைப்படவிழாக்களில் திரையிடும்போது ஒரு ஷோவுக்கு 500க்கும் மேற்பட்டவர்கள் படம் பார்த்தார்கள். ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் படம் பார்த்தார்கள். பெற்றோர்கள் என்னிடம் பகிர்ந்து கொண்ட விஷயம்... ‘எங்க குழந்தைக்கு உங்க படத்தின் மூலம் நிறைய சொல்லிக்கொடுத்துள்ளீர்கள்’ என்றார்கள்.

வழக்கமா விலங்குகள் படம் என்றால் சாகசம், கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கும். இந்தப் படத்தில் சாகசக் காட்சிகள், கிராபிக்ஸ் காட்சிகள் கிடையாது. எல்லாமே லைவ்வாக இருக்கும். நாய் சாகசம் பண்ணாமல் பெர்ஃபாமன்ஸ் பண்ணியுள்ளது. படத்துல வர்ற சிறுவன் அழுதால் நாயும் அழணும். சிறுவன் சிரித்தால் நாயும் சிரிக்கணும். இது சிறுவனுக்கும் நாய்க்குமிடையே உள்ள எமோஷனல் டிராமா.”

“நடிகர், நடிகைகள்?”

“படத்துல மிக முக்கியமான கதாபாத்திரம் சிறுவனுடைய பாத்திரம். அந்தப் பாத்திரத்தில் அஹான் பண்ணியிருக்கிறார். சிறுவனுக்காக ஆடிஷன் பெரிசா பண்ணவில்லை. ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள், தெரிந்தவர்களின் வாட்ஸ் அப் எண்ணில் ஆடிஷனுக்கு விளம்பரம் கொடுத்தோம். அப்படி ஒளிப்பதிவாளரின் உறவினர் பெங்களூருவில் இருந்து அஹானின் போட்டோவை அனுப்பினார்.

கூடவே டப் மாஷ் வீடியோ ஒன்றையும் அனுப்பினார். கதைக்கு பொருத்தமாக இருந்ததால் பெங்களூரு போய் சிறுவனைச் சந்தித்தேன். பொதுவா குழந்தைகள் சீக்கிரத்தில் ஒட்டமாட்டார்கள். அஹான் சில நிமிடங்களில் என்னுடன் ஒட்டிக்கொண்டான். அப்போதே அஹானை வைத்து வேலை வாங்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது. படப்பிடிப்பிலும் நான் நினைத்த மாதிரி ஸ்மார்ட்டா இருந்தான்.

முக்கிய வேடத்தில் சிவா, தேஜஸ்வி, ராஜேஷ் தம்பி சத்யன், ஷர்மிளா, ஆரோக்யராஜ், , புலிக்குட்டி, ராம் பாபு, ஜேன் ஆகியோர் நடித்துள்ளார்கள். இவர்களுடன் ரோவர், லக்கி, சுல்தான் ஆகிய கேரக்டர்களில் லேப்ரடார், பீகில், தெரு நாய் வகையைச் சேர்ந்த நாய்கள் நடித்துள்ளன.”  

“சிறுவனையும் நாயையும் எப்படி சமாளித்தீர்கள்?”

“நாயைப் பொறுத்தவரை அந்த பிரச்சனையை டாக் டிரைனர்ஸ் பாஸ்கர், வரமணி ஆகியோர் பார்த்துக் கொண்டார்கள். நாய் டிரைனிங்கைப் பொறுத்தவரை பந்து எடுத்து வருவது, வெடிகுண்டை வாயில் சுமந்து வருவது போன்ற வேலைகளை சொன்னால் செய்யும்.

இந்தப் படத்தைப் பொறுத்தவரை எமோஷனலா கதையுடன் பயணிக்கும் நாய் தேவைப்பட்டது. நாயிடம் வேலை வாங்குவது கடினம். எமோஷனல் காட்சிகளில் காதுகிட்ட பேசி வேலை வாங்கினோம். விலங்குகள், குழந்தைகளை வைத்து படம் எடுக்கும் போது பிரசன்ஸ் ஆஃப் மைண்ட் முக்கியம். ஏன்னா, குழந்தையும் நாயும் ஒரே மாதிரி. எப்போது தூங்குவாங்கனு தெரியாது, எப்போ விழிப்பாங்கன்னு தெரியாது. எப்போது ஆக்டிவ்வாக இருக்கிறார்களோ அப்போது படம்பிடிக்க ரெடியாக இருக்க வேண்டும்.

நம்முடைய வேகத்துக்கு வேலை செய்யாமல் அவங்க வேகத்துக்கு வேலை செய்யணும். படப்பிடிப்பில் 300 பேர் இருப்பார்கள். மைண்ட் திசை மாறும். ஆனால் சிறுவன் என் பேச்சை மட்டும் கேட்டதால் எளிதாக படமாக்க முடிந்தது. அநாவசியமா அழமாட்டான். ஆனால் அவனை காரணம் இல்லாமல் சீண்டினால் பழி வாங்குவான்.

அப்போது அவனை சமாதானப்படுத்த வேண்டும். ஆஹானுக்கு டயனோசர் பொம்மை பிடிக்கும். அவனிடம் எல்லா கலெக்‌ஷனும் இருக்கு. சில சமயம் ஆஹான் மூட் அவுட்டாகியிருந்தால் டயனோசர் பொம்மை வாங்கித் தருகிறேன் என்று சொல்லி வேலை வாங்குவேன்.”

“தொழில்நுட்பக் கலைஞர்கள்?”

“அருண் பிரசாத் ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். இந்தப் படத்தின் காட்சிகள் ஒரே இடத்தில் நிலையாக இருக்காது. ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அழகியலுடன் படம் பண்ணுவது கடினம். சிறுவன், நாயோட மூட் பொறுத்து வேலை வாங்கணும். இதுபோன்ற காரணங்களால் பிஸி கேமராமேனை வைத்து பண்ண முடியாது.

அதுமட்டுமில்ல, இது கேமரா வித்தைகள் தேவைப்படாத கதை. ஆனாலும் படத்துல மூணு டோன் யூஸ் பண்ணியிருக்கிறோம். பிரசண்ட் டல் டோனிலும் ஃப்ளாஷ்பேக் கலர்ஃபுல்லாகவும் நாய்க்கு ஒரு டோனையும் பயன்படுத்தியுள்ளோம்.

படத்துல மொத்தம் ஐந்து பாடல்கள். மூன்று பாடல்களை மார்க் டி மியூஸ் பண்ணியிருக்கிறார். இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் புரோகிராமர். இரண்டு பாடல் களையும் பின்னணி இசையையும் டென்னிஸ் வல்லபன் பண்ணியிருக்கிறார். கோபால்-ஆனந்த் எடிட்டிங் பண்ணியிருக்கிறார்கள். கோபால் பிலிம் இன்ஸ்டிடியூட்ல கோல்ட் மெடல் வாங்கியவர். கலை பழனிவேல்.

நடனம் அபிநயா கார்த்திக். சவுண்ட் லக்ஷ்மிநாராயணன். எஃபெக்ட் சேது.பாடல்களை முத்தமிழ், ராகுல் காந்தி எழுதியிருக்கிறார்கள். மதுபாலகிருஷ்ணன், ஹரிச்சரண், ராகுல் நம்பியார், மாஸ்டர் ஜெப்ரி பாடியிருக்கிறார்கள். தயாரிப்பாளர் நடராஜன் சினிமா பின்னணியுள்ளவர். அவருடைய குடும்பம் ஜெயந்தி மூவி சார்பில் ஏராளமான படங்களை விநியோகித்தும் தயாரித்தும் உள்ளது. லண்டன் டாக்கீஸ் பேனரில் அவருக்கு இதுதான் முதல் படம்.”

“உங்கள் படம் உலக அரங்கில் பெரிய வரவேற்பைப் பெற்றது பற்றி?”

“இந்தப் படம் இண்டர்நேஷனல் போட்டிகளில் ஜெயிக்கும் என்று நம்பிக்கை இருந்தது. லாஸ் ஏஞ்சல்ஸ் பட விழாவில்  சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநருக்கான விருது கிடைத்தது. அமெரிக்கா, பொலிவியா, இத்தாலி, சவுத் கொரியா, துருக்கி உட்பட 12 உலகப் பட விழாக்களில் வரவேற்பு பெற்றது.”

“படத்துலே என்ன மெசேஜ் சொல்லப்போறீங்க?”

“படத்துல மேசேஜ்னு தனியா எதுவும் இருக்காது. பட்டும் படாமல்தான் கருத்து இருக்கும். வாழ்க்கையில் லவ், கேர், சென்டிமெண்ட் முக்கியம். நாம் இழந்த இந்த குணங்கள் இப்போது யாரிடம் இருக்கிறது என்றால் குழந்தைகளிடமும் விலங்குகளிடமும் தான்.

பெரியவர்களிடம் எப்போதும் சண்டை, சச்சரவு, இருக்கு. குழந்தைகள் வளரும் போது அவர்களுடைய நல்ல குணமும் அவர்களைவிட்டு காணாமல் போய்விடும். அதை இழக்காதபடிக்கு பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்பதை உணர்வுபூர்வமாக சொல்லியுள்ளோம். இந்தப் படம் பெற்றோர்களிடமும் விலங்குகளை எதிர்ப்பவர்களிடமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.”

“உங்களைப் பற்றி?”

“சினிமாவுக்கு நான் வந்தது என்னுடைய விதி. மெக்கானிக்கல் முடித்துவிட்டு வேலைக்கு முயற்சி செய்தேன். அப்போது என்னுடைய கைக்கு அப்துல் கலாம் ஐயாவின் ‘அக்னிச் சிறகுகள்’ புத்தகம் கிடைத்தது. அதில் ஒரு பகுதியில் ‘நாம் யார் என்று தெரிந்து அதில் பயணிக்கணும்’ என்று சொல்லியிருப்பார்.

அப்படி நான் யார் என்று பார்க்கும்போது நான் சின்ன வயதில் ஆர்ட், கிராப்ட் விஷயங்களில் பின்னியெடுப்பேன். எனக்குள் இருந்த ஆர்டிஸ்ட்டை வாழ்க்கை பரபரப்பில் மறந்துட்டேன். மதிப்பும் கொடுக்கவில்லை. இது எனக்கு மட்டுமில்ல, இந்தியாவில் உள்ள பலருக்கு இதுபோன்ற தவறுகள் நடக்கும்.

படித்தது ஒன்று வேலை செய்வது ஒன்றாக இருக்கும். வாழ்க்கையைப்பற்றிய விஷன் இருக்காது.  நாம் யார் என்று தெரிந்தால் வெற்றியுள்ள வாழ்க்கையை வாழ முடியும். அப்படி யோசிக்கும் போது என் மனதில் சினிமா தோன்றியது. சினிமாவுக்கு வந்தபோது சினிமாவை விட்டு போகக்கூடாது என்ற முடிவுடன் வந்தேன்.

எனக்கான இடம் இருக்கு என்று நினைத்து உழைத்தேன். அருள்மூர்த்தி, சசி, ஆர்த்தி குமார், தெலுங்கு இயக்குநர் கருணாகரன் ஆகியோரிடம் வேலை பார்த்துள்ளேன். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விஷயத்தை கற்றுக் கொள்ள முடிந்தது.என்னுடைய இயக்குநர் கனவு லேட்டானாலும் நல்லபடியாக நடந்தது. முதல் பட இயக்குநர்களுக்கு கமர்ஷியல் படம் பண்ணணும் என்ற எண்ணம் இருக்கும்.

நான் இதில் எனக்குப் பிடித்த கதையை பண்ணியிருக்கிறேன். சமீபத்தில் படம் பார்த்த தயாரிப்பாளர் நாம் ஜெயித்துவிட்டோம் என்று சொன்னார். இந்த நிமிஷம் வரை எனக்கு பாசிடிவ் எனர்ஜி தருகிறார்.

நான் உதவி இயக்குநராக இருந்தபோது ரகுவரன் சார் என்னை உற்சாகப்படுத்துவார். தமிழ் சினிமாவின் வளர்ச்சியை மனதில் வைத்து படம் பண்ணு என்றார். சார் இருந்திருந்தால் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு சந்தோஷமடைந்திருப்பார். அதுக்காகவே தேங்க்ஸ் கார்டுல சார் பேரை சேர்த்திருக்கிறேன்.”

- சுரேஷ்ராஜா