நண்பனே! எனது உயிர் நண்பனே!!



ஏகத்துக்கும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் இளையராஜா. சமீபத்தில் நடந்து முடிந்த அவரது பவளவிழாவைத் தொடர்ந்து ‘இசை கொண்டாடும் இசை ’ தொடர் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்.சென்னையில் தொடங்கிய இந்த நிகழ்வில் தன் இசைவாழ்வு குறித்து ஏராளமான சம்பவங்களையும், மறக்கவே முடியாத மனிதர்களைப் பற்றியும் பேசினார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தோடு இணைந்து இளையராஜாவை மேடையில் பார்த்த ரசிகர்களின் கரகோஷம் அடங்க வெகுநேரமானது. ரமண மகரிஷி படத்தை ராஜாவுக்கு பரிசளித்து அணைத்துக் கொண்டார் எஸ்.பி.பி. இருவரும் இடையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்ததும், அதன் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகளின் கசப்பும் முற்றிலுமாக மறைந்துபோனது. கே.ஜே.யேசுதாஸ், பாம்பே ஜெய, உஷா உதூப், மனோ, பவதாரிணி ஆகியோரும் நிகழ்வில் பங்குபெற்று பாடல்கள் பாடினர்.

எஸ்.பி.பி.யும், கே.ஜே.யேசுதாசும் இணைந்து ‘காட்டுக்குயிலு மனசுக்குள்ளே’ பாடலைப் பாட அரங்கமே அதிர்ந்தது. பார்வையாளராக இளையராஜாவை வாழ்த்த வந்திருந்தார் கமல். திடீரென அவரும் மேடையில் மைக்கைப் பிடித்து ‘உன்னைவிட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணுமில்லே’ பாடலைப் பாடியது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் போனஸ்.

இந்த இசை நிகழ்ச்சியின் மூலம் பெறப்பட்ட வருமானம் அனைத்தையும் சினிமா இசையமைப்பாளர் சங்க உறுப்பினர்களின் நலனுக்காக வழங்கினார் இளையராஜா. மேலும் நிதி திரட்டும் விதமாக பல இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். சங்க உறுப்பினர்களின் நலனுக்காக அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக இளையராஜா ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

அதன்படி தன் சொந்த செலவில் இசைக் கலைஞர்கள் சங்கத்திற்கு கட்டடம் கட்டும் பொறுப்பை ஏற்கிறேன் என்ற உறுதிமொழியை மேடையில் அனைத்து ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் முன்னிலையில்  உறுதி அளித்தார். கட்டப்போகும் அந்தக் கட்டடத்தின் மாதிரி நகலை தினா, ஹம்சலேகா, தேவி ஸ்ரீபிரசாத், ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட சக இசையமைப்பாளர்களிடம் ஒப்படைத்தார் இளையராஜா.

- ஆர்.சந்திரசேகர்