இவரை லவ் பண்ணா பேய் வரும்!



‘அம்மன் கோயில் கிழக்காலே’ காலத்து ராதாவின் ரசிகரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்காகவே அழகியர் தேசத்திலிருந்து (கடவுளரின் தேசத்துக்கு பெயர் மாற்றிவிட்டார்கள்) லேட்டஸ்டாக இறக்குமதி ஆகியிருக்கிறார் ஷ்ரிதா சிவதாஸ்.ராதாவை மாதிரியே திராவிட நிறம். ஏறுநெற்றி. வில் மாதிரி புருவங்கள். செதுக்கின சிற்பம் மாதிரி மூக்கு, உதடு. வலம்புரிச்சங்கு கழுத்து. போதும்.. போதும்..

‘தில்லுக்கு துட்டு-2’ மூலம் தமிழில் தடம் பதித்திருக்கிறார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பே மலையாளத்தில் ‘ஆர்டினரி’ (தமிழில் ‘ஜன்னல் ஓரம்’ என்று ரீமேக் ஆனது) படத்தின் மூலம் அறிமுகமானவர். அங்கே அறிமுகமாகிறவர்கள் அடுத்த படமே தமிழுக்கு வருகிறார்கள் எனும்போது ஷ்ரிதா, கொஞ்சம் லேட்டுதான்.

‘தில்லுக்கு துட்டு-2’ படத்துக்கு தமிழகமெங்கும் பேய் வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், பிரமோஷனுக்காக வந்தவரை மால் ஒன்றில் சந்தித்துப் பேசினோம்.“சேச்சிக்கு எந்த ஊரு?”

“எர்ணாகுளம். படிச்சது மைக்ரோ பயாலஜி. படிக்கிறப்பவே சினிமா வாய்ப்பு வந்தது. அப்போ அதை சீரியஸா எடுத்துக்கலை. டிவி நிகழ்ச்சிகளை தொகுத்துக் கொடுத்துக்கிட்டிருந்தேன். ஃபேமிலி சப்போர்ட் இருந்ததால்தான் சினிமாவுக்கே வரமுடிந்தது. மலையாளத்தில் பத்து படம் பண்ணிட்டேன்.”“தமிழ்நாடு எந்தா உண்டு சேச்சி?”

“நீங்க தமிழிலேயே கேளுங்க சார். உங்க மலையாளம் சகிக்கலை. ஆக்சுவலா, நான் சந்தானம் சாரோட தீவிர ரசிகை. அவர் நடிச்ச படமெல்லாம் நிறைய பார்த்திருக்கேன். தமிழில் காமெடி சேனல்களில் அவரோட காமெடியைப் பார்த்து ரசிக்கிறது என்னோட பொழுதுபோக்கு. அவர் ஹீரோவா நடிக்கிற படத்துக்கு ஆடிஷன்னு கேள்விப்பட்டதுமே ஆர்வமா கலந்துக்கிட்டேன்.

செலக்ட் ஆவேன் என்கிற நம்பிக்கையே இல்லாமதான் இருந்தேன்.படத்தோட கேரக்டர் படி ஒரு மலையாளப் பொண்ணுதான் நடிக்க முடியும். எனக்கு யார் ‘ஐ லவ் யூ’ சொன்னாலும், அவங்களை யட்சின்னு சொல்லுற ஒரு தேவதை சுளுக்கெடுத்துடும் என்பது மாதிரி கேரக்டர். நான் பொருத்தமா இருந்ததால் ஓக்கேன்னு சொன்னாங்க. முதல் படமே எனக்குப் பிடிச்ச சந்தானத்தோட என்றதுமே சந்தோஷத்துக்கு அளவே இல்லை.

கேரளாவில்தான் முதல் ஷெட்யூல் எடுத்தார்கள். சொந்த மாநிலத்தில் படப்பிடிப்பு நடந்ததால் அந்நிய மொழியில் நடிக்கிறோம் என்கிற ஃபீல் கொஞ்சம்கூட இல்லை. படக்குழுவினர் என் மீது காண்பித்த அன்பு பெரியது. பொதுவா அவுட்டோர்ல படப்பிடிப்பு நடக்கும்போது யூனிட்லே குறைவான அளவில்தான் மெம்பர்ஸ் இருப்பாங்க.

அம்மாதிரி சந்தர்ப்பங்களில் எல்லோரிடமும் நன்கு பரிச்சயத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். அப்படி எல்லோரும்  குடும்பமாகப் பழகியது மறக்க முடியாத அனுபவம். இயக்குநர் ராம்பாலா சாரும் ரொம்பவே ஊக்கம் கொடுத்தார். ஒவ்வொரு காட்சியையும் பொறுமையா சொல்லிக் கொடுத்தார். ஒட்டுமொத்தமா டீம்லே இருந்த அனைவரும் ஆதரவாக இருந்தாங்க. எனக்கு மலையாளப் படம், தமிழ்ப்படம் என வேறுபாடே தெரியலை.”

“சந்தானம்?”
“காமெடி ஸ்டாராக இருந்து ஹீரோவாக உயர முடியும் என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணமாக இருப்பவர். பழகுவதற்கு இனிமையானவர். டவுன் டூ எர்த் எனுமளவுக்கு எளிமையாக பழகக்கூடியவர், அமைதியானவர்  என்று அவருடைய நற்குணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.  இந்த மாதிரி ஒரு ஸ்டாரை நான் பார்த்ததே இல்லை. மிகப்பெரிய ஸ்டாராக இருந்தாலும் சிம்பிளிட்டி சிட்டியை கடைப்பிடிக்கிறார்.

அவரிடம் நடிகையாக கற்றுக் கொள்ள  வேண்டிய விஷயம் ஏராளமாக உள்ளது. தமிழ் சினிமாவில் அவருக்கான முக்கியத்துவம் அதிகமாக இருக்கிறது. ஆனால் எவ்வளவு உயரத்துக்கு போனாலும் தலைக்கனம் இல்லாத அவருடைய குணம்தான் அவரை இவ்வளவு உயர்த்தியுள்ளதாக நினைக்கிறேன்.”
“தமிழில் தொடர்ந்து நடிப்பீர்களா?”

“இதென்ன கேள்வி? கரும்பு தின்ன கூலியும் கொடுக்கறாங்களே!  மொழி எனக்கு எப்போதும் பிரச் சினையாக இருந்தது இல்லை. எனக்கு நல்ல கேரக்டர்ஸ் பண்ணணும். நிறைய படங்கள்ல நடிக்கணும். மற்றபடி மொழிகளை வைத்து வித்தியாசப்படுத்திப் பார்க்கமாட்டேன். தமிழ் சினிமாவில் இப்போது இளம் படைப்பாளிகளின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது. இந்திய அளவில் எடுத்துக் கொள்ளும்போது தமிழ் சினிமாவுக்கான அங்கீகாரம் அதிகமாக உள்ளது. அந்த வகையில் இந்திய சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்துள்ள தமிழ் சினிமாவில் நானும் ஒரு அங்கமா இருப்பதை பெருமையாக நினைக்கிறேன்.”

“விரும்பும் கேரக்டர்?”
“ஹீரோயின் ஓரியண்டடா பண்ணணும்னு ஆசை. ‘பாகுபலி’ அனுஷ்கா, ‘36 வயதினிலே’  ஜோதிகான்னு இப்போ பெண்களை மையப்படுத்தி ஏராளமான கதைகள் வெளிவர ஆரம்பித்துள்ளது ஆரோக்கியமான விஷயம். இம்மாதிரி சப்ஜெக்டுகளில் நடிக்கத்தான் ரொம்ப ஆர்வமா இருக்கேன்.”
“கிளாமர் பண்ணுவீங்களா?”

“முன்னாடியெல்லாம் இப்படி கேட்டா நடிகைகள் வெட்கப்படுவாங்க. பாஸ், நாம 2019லே இருக்கோம். எனக்கு கம்ஃபர்ட்டா இருந்தா கிளாமர் ஓக்கேதான். அதுக்குன்னு வாய்ப்புக்காக சீப்பான வேடங்களை ஏத்துக்க மாட்டேன். எல்லாரும் நினைக்கிற மாதிரி கிளாமர், ஈஸி கிடையாது. அதுக்குன்னு ஸ்பெஷலா பாடியை மெயின்டெயின் பண்ணணும். கஷ்டப்பட்டு எக்சர்சைஸ் ரெகுலரா செய்யணும். அர்ப்பணிப்போடு செய்யும்போதுதான் கிளாமர் எடுபடும்.”

“பார்க்குறதுக்கு ராதா மாதிரி இருக்கீங்க. உங்களுக்குப் பிடிச்ச நடிகை?”

“ரொம்ப தேங்க்ஸ். ராதா சேச்சி, ரொம்ப சீனியர். திறமைசாலி. அவங்களை மாதிரி இருக்கேன்னு சொன்னதுக்கு திரும்பவும் தேங்க்ஸ். சில ரசிகர்கள் என்னை சினேகா ஜாடையில் இருப்பதாகவும் சொல்கிறார்கள். எனக்கு சினிமாவில் முத்திரை பதிச்ச எல்லா ஆக்ட்ரஸுமே பிடிக்கும் என்றாலும், சிம்ரன் மேடம் ஸ்பெஷல். லேட்டஸ்டா ‘பேட்ட’யில்கூட அவ்வளவு அழகா இருந்தாங்க. ஹாலிவுட்டில் எப்படி ஏஞ்சலினா ஜோலியோ அதுமாதிரி நமக்கு சிம்ரன்.”

“ரஜினி, கமல் மாதிரி சீனியர்களோடு நடிப்பீங்களா?”

“அதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் பண்ணியிருக்கணும். மலையாளத்தில் மோகன்லால் சாரோட ‘கூதாரா’ படத்தில் நானும் இருந்தேன். ஆனா, அவருக்கு ஜோடியா நடிக்கலை. தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என்று எல்லோருடனும் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இப்போதான் தமிழ் சினிமாவுக்கு வந்துள்ளேன். இனிவரும் காலங்களில் இந்த ஆசைகள் எல்லாமே நிறைவேறும் என்கிற நம்பிக்கையை ‘தில்லுக்கு துட்டு-2’ படத்தின் வெற்றி ஏற்படுத்தி இருக்கிறது.”

“நிஜத்தில் ஷ்ரிதாவோட கேரக்டர் எப்படி?”

“அநாவசியமா அடுத்தவர்களின்  விஷயத்தில் மூக்கை நுழைக்கமாட்டேன். மற்றப்படி பழக ஆரம்பித்தால் சகஜமாகப் பேசுவேன். என்னைப் பொறுத்த்வரை உண்மையான நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்.”

“சினிமாவில் பெண்களின் பாதுகாப்பு எப்படியிருக்கிறது?”

“பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எல்லா இடங்களிலும் இருக்கிறது. சினிமாவைப் பொறுத்தவரை எனக்கு நல்ல மரியாதை கிடைத்துள்ளது. இதுவரை ஃப்ரெண்ட்லி டீமுடன் வேலை செய்துள்ளதால் கடவுள் புண்ணியத்தில் எனக்கு மோசமான அனுபவங்கள் ஏற்பட்டதில்லை. இன்னொரு விஷயம், எல்லா இடங்களிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள்.

கெட்டவர்களும் இருக்கிறார்கள். நாம்தான் சரியான நபர்களை தேர்வு செய்து வேலை செய்யவேண்டும். தனிப்பட்ட விதத்தில் சொல்வதாக இருந்தால் பெண்களுக்கு சுய மரியாதை முக்கியம். பெரிய கனவுடன் போராட வேண்டும். குடும்பம் போன்ற கட்டமைப்புக்குள் போனாலும் தனித்துவத்தை இழக்கக் கூடாது. அதுவே பெண்களுக்கான தீர்வாக அமையும்.”

- சுரேஷ்ராஜா