கதை சொல்லுங்க சார்!



இந்திய சினிமாவில் கடந்த சில காலமாக எவ்வளவு பெரிய சூப்பர்ஸ்டார் நடித்திருந்தாலும், கதை சரியில்லாத படங்களை ரசிகர்கள் அதிரடியாக புறக்கணிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். பெரிய ஸ்டார் இமேஜ் இருப்பவர்கள், தாங்கள் எதைக் கொடுத்தாலும் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்று கருதிக் கொண்டிருந்த நிலைக்கு மரண அடி கொடுத்து வருகிறார்கள்.

இந்தியில் ‘கான் சாம்ராஜ்யமே’ ஆட்டம் கண்டு போயிருக்கிறது. Content சரியில்லை என்று முதன்முதலாக தமிழின் முன்னணி இயக்குநர் பாலா இயக்கிய ‘வர்மா’ படத்தையே, அதன் தயாரிப்பாளர்கள் தயாரிப்புச்செலவை கருத்தில் கொள்ளாமல் தூக்கியெறிந்துவிட்டு புதிதாக வேறு இயக்குநரை வைத்து எடுக்கப் போகிறோம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது.

தொழில்நுட்பரீதியாக ஹாலிவுட் லெவல், ஓப்பனிங்கில் இண்டஸ்ட்ரி ரெக்கார்டு போன்ற ட்விட்டர் ட்ரெண்டிங் பம்மாத்துகள் எல்லாம் இனி வேலைக்கு ஆகாது.இந்தியாவில் சினிமாவைப் பொறுத்தவரை இருவகை.ஒன்று, காலா பூர்வமான சினிமா. ஒரு படைப்பாளி இதில் பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ளலாம். கதையென்று ஒன்று இதற்கு இருக்க வேண்டிய அவசியம் கிடையாது.

கலைக்கு கதையே தேவை கிடையாது. எப்படி வேண்டுமானாலும் கலை சினிமாக்கள் வரலாம். ஆனால், இம்மாதிரி முயற்சிகளில் வணிக லாபத்தை படத்தை தயாரிப்பவர்கள் எதிர்பார்க்கவே கூடாது. ஒருவேளையில் ரசிகர்களுக்கும் பிடித்து, அரங்குகளில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடி பெரும் லாபம் கிடைத்தால், ‘எதிர்பாராமல் கிடைத்த போனஸ்’ என்றே கருதவேண்டும்.

அடுத்தது, வணிக சினிமா. இதுவே இந்திய சினிமாவில் 97 சதவிகிதம். முதலீடு போடும் தயாரிப்பாளரில் தொடங்கி, தியேட்டர் வாசலில் வேர்க்கடலை விற்கும் வியாபாரி வரை அத்தனை பேருக்குமே லாபத்தை நிச்சயம் கொடுத்தாக வேண்டிய கடமை வணிக சினிமாக்களுக்கு உண்டு. இவ்வகை சினிமா என்பது மக்கள், பொழுதுபோக்குவதற்கான ஊடகம்தானே தவிர, பிசினஸ் என்கிறவகையில் மிகவும் சீரியஸானது.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக சினிமாவை மட்டுமே தொழிலாக எடுத்துக் கொண்டவர்கள்தான் இத்துறையில் புழங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் சமீபமாக வெவ்வேறு துறையில் ஈடுபடுபவர்களும் பங்களிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ‘பார்ட் டைம்’ தொழிலாக சினிமாவையும் சேர்த்துக் கொள்கிறார்கள். லாபம் ஈட்டக்கூடிய, சம்பாதிப்பதற்கு தகுதியான தொழிற்துறையாக தமிழ் சினிமா வளர்ந்திருப்பதான நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாகவே இந்த போக்கை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் -சமீப சில வருடங்களாக படங்கள் சரியாக ஓடாததால் பல நூறு கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட இழப்பை சினிமா சந்தித்திருக்கிறது. தியேட்டர் வசூல் படுமோசம். வெளிவராமல் முடங்கிக் கிடக்கும் சினிமாக்களின் எண்ணிக்கையும் அச்சமூட்டுகிறது. புற்றீசல் மாதிரி எண்ணிக்கையில் அதிகமாக படங்கள் வெளியாவதால் எந்தவொரு படத்துக்கும் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்க வகையில்லாமல் வசூல் பரவலாகி, அனைவருமே இழப்பை சந்திக்க நேர்கிறது.

நவீன தொழில்நுட்பம், சமீபமாக இத்துறைக்கு கிடைத்து வரும் ஏராளமான மனிதவளம், தொழிலாக அங்கீகரித்து சினிமாவில் கொட்டப்படும் கோடிக்கணக்கான முதலீடு போன்ற அம்சங்கள்தான் திரைப் படங்களின் திடீர் எண்ணிக்கை அதிகரிப்புக்கு பிரதானமான காரணங்களாக இருக்கின்றன. இது ஆரோக்கியமான திசைக்கு தமிழ் சினிமாவை அழைத்துச் செல்லாமல், எதிர்த்திசையில் படுவேகமாக ஓடி அழித்துக் கொண்டிருக்கிறது என்கிற முரண்தான் வேதனையான விஷயம்.

வெள்ளிக்கிழமை காலையில் படம் வெளியிடப்படுகிறது. அன்று மாலையே வெற்றி பெற்றுவிட்டதாக அறிவித்து ‘சக்சஸ் மீட்’ நடத்துகிறார்கள். அடுத்த இரண்டு நாட்களுக்கு எப்படி வெற்றியடைந்தோம் என்று படக்குழுவினர், பாரபட்சமின்றி எல்லா சேனல்களிலுமே பேட்டி கொடுக்கிறார்கள். திங்கள் காலை வரலாறு காணாத வெற்றியென்று போஸ்டர் ஒட்டுகிறார்கள். சினிமாக்காரர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்களா அல்லது மக்களை ஏமாற்றுகிறார்களா என்று புரியவில்லை.

சினிமாத் தொழிலின் அடுத்த வடிவம், எதிர்காலத்தில் செய்யவேண்டிய மாற்றங்கள் பற்றிய விவாதம், அத்தொழிலோடு அவ்வளவாக நேரடித் தொடர்பில்லாத மாற்று சினிமா ஆர்வலர்களால் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகிறது. சினிமாவை கலையாக முன்னெடுப்பதுதான் இவர்களது முதன்மைத் தெரிவு. திரைப்படங்களின் உள்ளடக்க ரீதியாகத்தான் இவர்களது அக்கறை இருக்கிறது.

ஆனால் -சினிமாவை வணிகமாகவும் பார்க்கவேண்டிய கட்டாயம் திரைத்துறை சங்கங்களுக்கு உண்டு. ஏனெனில், இதுதான் திரைத்துறை சார்ந்த பல்லாயிரம் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம். திரையரங்க கட்டமைப்புகளை உருவாக்கி, நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு தெரிந்த ஒரே தொழில்.

எனினும் -2019ன் தொடக்கம், தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்திய சினிமாவுக்குமே விடியலைக் காட்டியிருக்கிறது. இது தொடருமா என்பதை அடுத்தடுத்த மாதங்களில்தான் கவனித்து தெரிந்துகொள்ள முடியும்.தமிழில் ரஜினியின் ‘பேட்ட’, அஜித்தின் ‘விஸ்வாசம்’, தெலுங்கில் வெங்கடேஷின் ‘ஃபன் & ஃப்ரஸ்ட்ரேஷன் (F2)’, மலையாளத்தில் பிருத்விராஜின் ‘9’, கன்னடத்தில் புனீத் ராஜ்குமாரின் ‘நடசார்வபொம்மா’, இந்தியில் ‘யூரி :  தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ என்று பெரும் வெற்றி பெற்ற படங்களுக்கெல்லாம் ஓர் ஒற்றுமை உண்டு.

பெரிய நடிகர்கள், வலுவான டெக்னிக்கல் டீம் என்பதெல்லாம் தாண்டி, அனைத்துப் படங்களிலுமே வலுவான கதையம்சம் இருக்கிறது.சினிமா என்பது கதை.அதை உருப்படியாக சொன்னாலே, தியேட்டருக்கு ரசிகர்கள் வருவார்கள் என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. இன்றைய சூப்பர் ஸ்டார்கள், நேற்றைய கதையம்சமுள்ள படங்களில் நடித்துதான் இந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள்.

ஒரு ஹீரோவின் கால்ஷீட் கிடைத்துவிட்டது என்பதாலேயே கதை மாதிரி எதையோ ஒப்பேத்தி பாட்டு, ஃபைட்டு, டெக்னிக்கல் வெயிட்டு என்று பணத்தைக் கொட்டும் போக்கு நிச்சயம் மாறியாக வேண்டும்.

கதைக்கு எந்த குறிப்பிட்ட இலக்கண வரையறைகளும் கிடையாது. ரசிகர்களின் பல்ஸ் உணர்ந்து, அவர்கள் விரும்பத்தக்க கதைகளை எழுதவேண்டும் என்பது மட்டுமே சினிமாவைப் பொறுத்தவரை அடிப்படை இலக்கணம். ரசிகர்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பும் ‘கதை’யாகத்தான் இருக்கிறது. அவர்கள் கேட்பதைக் கொடுப்பதில் இவர்களுக்கு என்ன தயக்கம் என்றுதான் புரியவில்லை.

- யுவகிருஷ்ணா