டைட்டில்ஸ் டாக் -103



சகா பிருத்விராஜ்

அரசனோ, ஆண்டியோ, நண்பன் இல்லா யாருமே உலகில் இல்லை.எனினும் -நெருங்கிய நட்பு வட்டம் என்பது எப்போதும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே இருக்கும்.அவ்வகையில் எனக்கு மூன்று பேர் நெருங்கிய சகாக்கள்.அதில் குறிப்பிடத்தக்கவன் ஜோஸ்வா. என்னுடைய உயிர் நண்பன். ஒன்பதாம் வகுப்பு படித்த காலக்கட்டத்திலிருந்து பழக்கம்.
பதினைந்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக எங்கள் நட்பு நீடிக்கிறது.பள்ளி நண்பர்கள் எல்லோரும் இப்போது குடும்பஸ்தர்களாக மாறிவிட்டதால் எங்களுக்கான மீட்டிங் குறைந்துவிட்டது. வாய்ப்பு கிடைக்கும் போது மிஸ் பண்ணமாட்டோம்.

சினிமாவில் எனக்கு ஃப்ரெண்ட்ஸ் மிகக் குறைவுதான். அப்பாவுக்கு பாக்யராஜ் சார் குருநாதர் என்பதால் அடிக்கடி அவர் வீடடுக்கு போவோம். அப்போது சாந்தனு நண்பரானார். சினிமா நட்சத்திரங்கள் விளையாடும் சிசிஎல் கிரிக்கெட் போட்டிதான் எனக்கான நண்பர் வட்டாரத்தை பெரிதாக்கியது. பரத், ஆர்யா, ஷாம், விஷால் என்று பெரிய நட்பு வட்டாரம் கிடைத்தது.

குடும்பத்தாரிடம் பகிர முடியாத விஷயங்களைக் கூட நண்பர்களிடம் பகிரமுடியும் என்பதால், நட்புதான் எனக்கு ஸ்பெஷலான உறவு. அப்படி என் பர்சனல் விஷயங்களை நண்பர்களிடம் ஷேர் பண்ணியிருக்கிறேன். என் பிரச்சினைகளுக்கு சில சமயம் சகாக்கள் எடுக்கும் முடிவுகளாகட்டும், அவர்களது ஆலோசனையாகட்டும், பெரும்பாலும் அது பயனுள்ளதாகவே இருக்கும். சில நேரங்களில் உணர்ச்சி வேகத்தில் வேக வேகமாக முடிவு எடுத்துவிடுவேன். அது சில சமயம் சேதாரத்தை உண்டுபண்ணிவிடும்.

அச்சமயங்களில் நண்பர்களின் உதவிதான் எனக்கு பேருதவியாக இருக்கும்.அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். என் முகத்தைப்பார்த்தே நான் என்ன மாதிரி சூழ்நிலையில் இருக்கிறேன் என்பதை உணர்ந்து கொள்பவகள் என் நண்பர்கள். ஹலோ சொல்லும்போதே நான் என்ன மூடில் இருக்கிறேன் என்பதை கண்டுபிடித்துவிடுவார்கள். என்னுடைய பிளஸ், மைனஸ் அறிந்தவர்கள் அவர்கள்.

சில சமயம் ஆலோசனை சொல்வார்கள். அதே தப்பை நான் திரும்பச் செய்யும் போது ஆலோசனை சொல்வதையே நிறுத்திவிடுவார்கள். அப்போது என் தவறை உணர்ந்து மீண்டும் அவர்களிடம் சரணடைவேன். அப்படி நல்ல புரிதல் உள்ள நண்பர்கள்தான் எனக்கு இருக்கிறார்கள்.

2011ஆம் ஆண்டு என் வாழ்வில் மோசமான சோக நிகழ்வு. சகா ஜோஷ்வாவுக்கு மூளையில் ஒரு பாதிப்பு. லட்சத்தில் ஒருவருக்கு வரக்கூடிய உடல் பிரச்சினையாம் அது. என் நண்பனுக்கு வந்துவிட்டது. அப்போது அவன் ராணுவத்தில் சேருவதற்கான கடுமையான முயற்சிகளில் இருந்தான். அவன் படுக்கையில் இருந்த அந்த நாட்கள்தான் அவனுடனான என்னுடைய நட்பு எவ்வளவு சிறந்தது என்பதை என்னை உணரவைத்தது. அவனுடைய முக்கியத்துவம் புரிந்தது. அவன் இல்லாத உலகத்தை என்னால் எண்ணிப் பார்க்கவே முடியவில்லை.

நல்லவேளையாக அவன் உடல்நலம் தேறினான்.நட்பு விஷயத்தில் அப்பாவிடம்தான் நிறைய கற்றுக் கொண்டேன். இன்றளவும் அவர் தன்னுடைய நட்பு வட்டாரத்தை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அப்படியே தக்க வைத்திருக்கிறார். என் தலைமுறையிலோ நட்பை பேணிக்காப்பது பெரும் சிரமமாக இருக்கிறது. எனக்கு அடுத்த தலைமுறையெல்லாம் நட்பின் மகத்துவத்தை அறியுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

அப்பாவின் நெருங்கிய சகாக்களுள் ஒருவர் சந்திரன், மும்பைக்காரர். சினிமா வட்டாரத்தில் அல்லாத நண்பர் அவர். அவருடைய இழப்பு, அப்பாவுக்கு ஏற்படுத்திய சோகம் அளவில்லாதது. அவருடைய மகன், எனக்கும் சகாவாக தொடர்வது தலைமுறை தாண்டிய குடும்ப நட்பாக அமைந்திருக்கிறது. அவர்கள் குடும்பத்தில் சொல்வார்கள், ‘ப்ரெண்ட்ஷிப்பை எப்படி மெயின்டெயின் பண்ணணும்னு பாண்டியராஜன் குடும்பத்துலேதான் கத்துக்கணும்’ என்று.

என்னுடைய நண்பர்களில் மிகவும் ஸ்பெஷல் மோகன்லால் சார். அவர் என் அப்பாவுடைய தலைமுறை ஆள். இருந்தாலும் அந்த இடைவெளி இல்லாமல் என்னுடனும் பழகுகிறார். அவருடைய மனிதாபிமானம்தான், அவரை நோக்கி அத்தனை பேரையும் ஈர்க்கிறது.

கன்னட நடிகர் சுதீப் சாரும் எனக்கு நண்பர்தான். சிசிஎல் கிரிக்கெட் நடக்கும்போது தமிழ் நட்சத்திரங்களும், கன்னட நட்சத்திரங்களும் இந்தியா - பாகிஸ்தான் மாதிரி மோதிக் கொள்வோம். மற்ற சமயங்களில் சுதீப் சார், அவ்வளவு அன்பானவர். பெங்களூருவின் மொத்த அழகையும் எனக்கு சுற்றிக் காட்டியவர் அவர்தான். விருந்து உபசரிப்பில் அவர் முதல்தரம்.இவர்களெல்லாம் சிசிஎல் கிரிக்கெட் மூலம் கிடைத்த நண்பர்கள். சல்மான்கான், சிரஞ்சீவி என்கிற மிகப்பெரிய ஆளுமைகளின் நட்பு கிடைப்பதற்கும் அதுவே காரணம்.

ஒரு படத்தின் ஆடிஷனுக்குப் போயிருந்தேன். ‘உன் அப்பா அளவுக்கு உனக்கு நடிப்பு வரலையே’ என்று முகத்துக்கு நேராகச் சொல்லி அவமானப்படுத்தினார்கள். அப்பா மீதுதான் உடனடியாக கோபம் வந்தது. அவருடைய புகழே, சில சந்தர்ப்பங்களில் எனக்கு எதிராக அமைந்துவிடுகிறது. முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு வீட்டுக்கு கவலையோடு வந்தேன். என்ன நடந்தது என்று அப்பா விசாரித்தார். பதில் சொல்ல முடியாமல் எனக்கு கண்ணீர் வந்துவிட்டது.

அப்பாவாக இல்லாமல் நல்ல சகாவாக அப்போதும் நடந்து கொண்டார்.“ஒரு விஷயத்துக்காக நீ கண்ணீர் விடறேன்னா, அது நல்ல விஷயம்தான். அந்த விஷயத்தை நீ மனசார நேசிக்கறேன்னு அர்த்தம். அதை நீ எப்படியும் அடைந்தே தீருவே. தைரியமா இரு” என்று தட்டிக் கொடுத்தார்.
அப்பாவிடம் அடிக்கடி சண்டை போடுவேன். ஆனா, அதெல்லாம் செல்ல சண்டைதான். உடனே அவரிடம் சமாதானமாகி விடுவேன்.

அப்பாவைவிட அம்மா எனக்கு ஒரு படி மேல். வீட்டிலே பெண் பிள்ளை இருந்தா, அது அப்பா மூலமா அத்தனை காரியங்களையும் சாதிச்சுக்கும். ஆண் பிள்ளைகளுக்கு அம்மாதான். எனக்கு என்ன வேணுமோ, அதையெல்லாம் அம்மாதான் அப்பா கிட்டே சிபாரிசு பண்ணி வாங்கிக் கொடுப்பாங்க. அப்பாவிடம் ஷேர் செய்யமுடியாத விஷயங்களைக் கூட நான் அம்மாவிடம் பகிர்ந்துப்பேன்.

என்னோட அண்ணன், அதிகம் பேசமாட்டார். ஆனா, ரொம்ப ஃப்ரெண்ட்லியா பழகுவார்.என்னோட நடிப்பில் லேட்டஸ்ட்டா வந்த படம் ‘சகா’. இந்தப் படத்தில் என்னைவிட வயது குறைந்தவர்களோடு இணைந்து நடிச்சேன். ரொம்ப புது அனுபவமா இருந்தது. அவங்க அத்தனை பேரும் நல்ல நண்பர்கள் ஆனார்கள்.

தோள் கொடுப்பான் தோழன் என்பார்கள். என்னுடைய கேரியரைப் பொறுத்தவரை நண்பர்கள் உதவி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கமாட்டேன். அந்த க்ளியாரிட்டி இருந்தால் நட்பை மெயின்டெயின் பண்ண முடியும். எதிர்பார்ப்பு இல்லாததுதான் நட்பு. பிரச்சனை என்று வரும்போது நண்பனை எதிர்பார்க்கலாம். ஆனால் வணிக ரீதியாக நண்பனிடம் எதிர்பார்ப்பதை தவிர்த்துவிடுவது நல்லது. நண்பர்களே, உண்மையான நட்பை இனம் கண்டு நட்புக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

தொகுப்பு : சுரேஷ்ராஜா

(தொடரும்)