இசைக்குழு நடத்தியவர் இசையமைப்பாளர் ஆனார்!இயக்குநர் கேயாரின் அசோசியேட் எம்.ஜெயப்பிரகாஷ் இயக்கும் படம் ‘வானரப்படை’. குழந்தைகளை மையமாக வைத்து உருவாகும் இதில் முக்கியமான வேடத்தில் அவந்திகா நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் கமலக்கண்ணன். அவரிடம் முதல் இசைப் பயண அனுபவத்தைப் பற்றிக் கேட்டோம்.

‘‘எனக்கு சொந்த ஊர் காஞ்சிபுரம். சின்ன வயதிலிருந்தே இசை ஆர்வம் அதிகம். சுற்று வட்டாரத்தில் கோயில் திருவிழா, அரசியல் நிகழ்ச்சிகளில் இசைக் கச்சேரி நடந்தால் முதல் ஆளாக சீட் பிடித்து கச்சேரியை ரசிப்பேன்.‘வானரப்படை’ இயக்குநர் எம்.ஜெயப்பிரகாஷ் என்னுடைய பால்ய கால நண்பர். என்னுடைய இசை ஆர்வத்தைப் பார்த்துவிட்டு அவர்தான் முறைப்படி இசை கற்றுக்கொள்ள ஐடியா கொடுத்ததோடு இசைப் பள்ளியிலும் சேர்த்துவிட்டார்.

இப்போது அவரே ‘வானரப் படை’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்துகிறார். எல்லோருக்கும் இப்படியொரு நட்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. எனக்கு அப்படியொரு நட்பு கிடைத்திருப்பதை பாக்கியமாகப் பார்க்கிறேன்.

இசைத்துறையில் என்னுடைய மானசீக குரு இளையராஜா. ஆனால் நான் இசையமைப்பாளனாக உருவாக இன்ஸ்பிரேஷனாக இருந்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆர்க்கெஸ்ட்ராப்ளேயராக இருந்தேன் நான். ரஹ்மானின் நுட்பமான இசைத்திறன் எனக்குள் இசையமைக்கும் ஆர்வத்தைத் தூண்டியது.

‘வானரப்படை’  படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள். ஸ்டார் இமேஜ் உள்ள நடிகர்களுக்கு ஒர்க் பண்ணுவதற்கும் குழந்தைகள் நடிக்கும் படத்துக்கு ஒர்க் பண்ணுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு.‘அஞ்சலி… அஞ்சலி…’ ஸ்டைலில் உருவாகியுள்ள ‘வானரப்படைகள்’ என்ற பாடல் சிறியவர்கள் மட்டுமில்லாமல் பெரியவர்கள் மத்தியிலும் வரவேற்பு பெறும் வகையில் பிரமாதமாக வந்திருக்கு.

‘ஆனந்த யாழை மீட்டுகிறாள்’ ஸ்டைலில் அப்பா - மகள் பாசத்தை வெளிப்படுத்தக்கூடிய பாடலும் தனித்துவமாக வந்திருக்கு. ‘சொடக்கு மேல’ அந்தோணி உட்பட முன்னணி பாடகர்கள் பாடியிருக்கிறார்கள்.

ஒரு படத்துக்கு இசை முன்னோட்டம் மாதிரி. அந்த வகையில் ஒரு படத்தோட இசையில் இசையமைப்பாளரின் பங்கும் எவ்வளவு முக்கியமோ அதேயளவுக்கு இயக்குநருக்கும் பொறுப்பு இருக்கு. ஏன்னா, பாடல்களை தேர்வு செய்வதில் இயக்குநர்களுக்கு அதிக பங்கு உண்டு. அடிப்படையில் இசை ரசிகர்களாக இருக்கும் இயக்குநர்களின் படங்களில் இசை நன்றாக வந்திருப்பதைக் கவனிக்கலாம்.

அந்த வகையில் என்னுடைய இயக்குநர் ஜெயப்பிரகாஷ் மிக அழகாக என்னிடம் வேலை வாங்கினார். ஒரு டியூன் பிடிக்கவில்லை என்றால் அதை நாசூக்காகச் சொல்லி அடுத்த டியூன் கேட்பார். அப்படி விடிய விடிய கண் விழித்துதான் இந்தப் படத்துக்கான டியூனை ஃபைனல் பண்ணினோம்.

இது டிஜிட்டல் காலம். பாடுவது, எழுதுவது என்று எல்லாமே வாட்ஸ் அப், ஸ்கைப் என்று நெட்டோடு முடிந்துவிடுகிறது. நான் ஆர்க்கெஸ்ட்ரா பின்னணியில் இருந்து வந்ததால் அனைத்துப் பாடல்களையும் லைவ்வாக ரிக்கார்டிங் பண்ணினோம். படத்தில் இடம்பெறும் அனைத்துப் பாடல்களையும் நானே எழுதியுள்ளேன்.

பாட்டுக்கு மெட்டா அல்லது மெட்டுக்கு பாட்டா என்று கேட்டால் பாட்டுக்கு மெட்டு அமைக்கும்போது மொழி வளத்தை நன்றாகப் பயன்படுத்தமுடியும். மெட்டுக்கு பாட்டெழுதும் போது மொழி ஆளுமை குறைவாகவே இருக்கும்’’ என்று சொல்லும் கமலக்கண்ணன் தன்னுடைய ‘ஆனந்த ராகங்கள்’ இசைக்குழு மூலம் இதுவரை 1000த்துக்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளாராம். சமீபத்தில் டிராஃபிக் விதிகளை வலியுறுத்தும் விழிப்புணர்வு பாடலுக்கு இசையமைத்ததன் மூலம் காவல் துறையிடமிருந்து பாராட்டு கிடைத்ததாம்.

- எஸ்