நீ நீயாக இரு!ரஜினி பேசுகிறார்!



vannathirai Exclusive

மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள். ஆனால், ரஜினி மாறவே இல்லை. கண்டக்டராக இருந்தபோது எப்படி இருந்தாரோ, அப்படியேதான் சூப்பர் ஸ்டாராக ஆனபிறகும் இருக்கிறார் என்கிறார்கள் அவரது நண்பர்கள். 2018, அவரது வாழ்வில் முக்கியமான வருடமாக அமைந்துவிட்டது. அடுத்தடுத்து படங்கள், அரசியல் என்ட்ரி என்று பிஸியாக இருக்கிறார்.

எழுபது வயதை நெருங்கும் ரஜினி, கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் வணிகத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறார். கடந்த காலங்களில் ‘வண்ணத்திரை’ இதழுக்கு அவர் கொடுத்திருக்கும் ஏராளமான பேட்டிகளில் இருந்து முக்கியமான சில பகுதிகளை தொகுத்துத் தருகிறோம். இவற்றை வாசிக்கும்போது அன்றைய ரஜினியை மட்டுமல்ல, இன்றைய ரஜினியையும் புரிந்துகொள்ள முடிகிறது.

“தனிமை?”

“ஷூட்டிங் முடிஞ்சு வீட்டுக்குப் போனா நான் யாரையும் பார்க்கிறதில்லை. நண்பர்கள், உறவினர்கள் யாரையும் சந்திக்கிறதில்லை. தனியா போய் என் அறைக்குள் ரிலாக்ஸ் பண்ணிக்கிறேன். எனக்கு தனிமை பிடிச்சிருக்கு.
பேட்டி கொடுக்குறதில்லை என்பதால் பத்திரிகைகளை தவிர்ப்பதாக அர்த்தமில்லை. எந்தவொரு நிலையிலும் பத்திரிகைகள், நடிகனுக்கு தேவைதான். என்னோட கருத்துகளை பத்திரிகைகள் மாற்றிப் போட்டுடும் என்கிற பயமெல்லாம் எனக்கு இல்லை. புதுசா சொல்லுறதுக்கு எதுவுமில்லை. எல்லாத்தையும் நான் சொல்லிட்டேன். நான் ஒரு திறந்த புத்தகம்.”

“ஓய்வு?”

“சினிமாவிலிருந்து ரிட்டயர்மென்ட் பற்றி நான் எப்பவும் பேசினதே இல்லை. படங்களை லிமிட் பண்ணியிருக்கேன். நடிப்பை விட்டு எப்படி என்னால் விலக முடியும்? எனக்கு வேறு என்ன தொழில் தெரியும்?”

“அமைதி?”

“நான் சென்னைக்கு வந்தப்போ எனக்கு அழகு இருந்ததா? பணம் இருந்ததா? இல்லை இந்த ஊர் மொழிதான் தெரியுமா? கண்டக்டர் வேலையிலே மாசம் 400 ரூபாய் கிடைச்சுக்கிட்டு இருந்தது. சென்னையிலே எனக்கு யார் அந்த 400 ரூபாயை மாசாமாசம் தந்திருக்க முடியும்? ஏதோ ஒரு தைரியத்துலே இங்கே வந்துட்டேன்.

எப்படியாவது முன்னுக்கு வரணும், சினிமாவில் நிலையான ஓரிடத்தைப் பெறணும், எப்படியாவது பணம் சேர்க்கணும் என்றெல்லாம் வேகம் இருந்துச்சி. நினைச்சது எல்லாம் நடந்ததுக்கு அப்புறமா இந்த அமைதி கிடைச்சிருக்கு. வயசாகுதுல்லே?”

“பரிசோதனை முயற்சிகள்?”

“நூற்றுக்கு 90 பேர் ரஜினி, ரஜினியா திரையில் வருவதைத்தான் விரும்புறாங்க. மீதி இருக்கிறவங்கதான் நான் வித்தியாசமான மேக்கப், வித்தியாசமான கேரக்டர்களில் வரணும்னு நினைக்கிறாங்க. வாழ்க்கையில் நான் எப்படி இருக்கணுமோ, அப்படியே என்னை திரையில் காண்பதில்தான் ரசிகர்களும் மகிழ்ச்சி அடையுறாங்க (கையில் வைத்திருக்கும் ரமண மகரிஷியின் ‘Be as you are’ என்கிற நூலை எடுத்துக் காட்டுகிறார்).

தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கணும். வினியோகஸ்தர்கள் சம்பாதிக்கணும். ரசிகர்கள் சந்தோஷமா இருக்கணும். எல்லோரும் மகிழ்ச்சியா வாழணும். கமர்ஷியல் படங்கள்தான் என்னோட ஆர்ட். நான் நிறைய வறுமையைப் பார்த்தவன். பணத்தோட அருமை எனக்கு நல்லாவே தெரியும்.”

“ஒரு படத்தை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்?”

“ஒரு படம் பண்ண எனக்கு பேனர் முக்கியம். அப்புறம் கதை. இதுக்கெல்லாம் பிறகுதான் பணம். வேற எதைப் பத்தியும் நான் கவலைப்படறதில்லை. வேறு விஷயங்களில் நான் தலையிடறதும் இல்லை. நடிப்பதற்கு மட்டும்தான் சம்பளம் வாங்குறேன். மற்ற பிசினஸில் தலையிடுறதில்லை. நடிப்பு தவிர்த்த வேறு எந்த வேலையையும் ஏத்துக்கிறதும் இல்லை.”

“டைரக்‌ஷன்?”

“எம்.ஜி.ஆர் மாதிரி நான் ஏன் டைரக்‌ஷனெல்லாம் பண்ணலைன்னு கேட்குறாங்க. எம்.ஜி.ஆர் ஈஸ் எம்.ஜி.ஆர், ரஜினி ஈஸ் ரஜினி. அவரோட பாதை வேற; என்னோட பாதை வேற. நான் யாரோட பாதையிலும் போக விரும்பலை. எதிர்காலத்திலும் டைரக்‌ஷன் பண்ணமாட்டேன்.”

“ரசிகர்கள்?”

“ஆக்சுவலா ‘மூன்று முடிச்சு’, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ படங்களுக்குப் பிறகு ரசிகர் மன்றங்கள் ஆரம்பமாச்சி. அவங்களை நான் ஆரம்பிக்கச் சொல்லலை. மன்றங்களுக்கு பணம் கொடுக்குறதும் இல்லை.

உண்மையைச் சொல்லப்போனா மன்றங்களை நான் என்கரேஜ் பண்றதில்லை. அதே நேரம் யாரையும் விரட்டியது மில்லை. மற்றபடி ரசிகர்களுக்கு முடிந்த உதவிகளை எப்பவுமே செய்யுறேன். அவங்களுக்கு நிறைய அட்வைஸ் பண்றேன். ‘உன் தொழிலை கவனி, உன் குடும்பத்தை கவனி’ என்பதுதான் என்னோட முக்கியமான அட்வைஸ்.”

“கோபம்?”

“முன்னாடியெல்லாம் ரொம்ப வரும். கைநீட்டி அடிச்சிடுவேன். அதெல்லாம் இப்போ அடங்கிடிச்சி. ஆஃப் பண்ணப்புறம் சவுண்டில்லாமே ஃபேன் கொஞ்ச நேரம் ஓடுமே, அந்தமாதிரி இப்போ அமைதியா வாழ்க்கை ஓடிக்கிட்டிருக்கு.”

“கிசுகிசு?”

“நிறைய வந்திருக்கு. எதையும் நான் படிக்கிறதில்லை.”
“மறக்க முடியாத நபர்?”
“இயக்குநர் கே.பாலச்சந்தர்.”
“பிடித்த நடிகர், நடிகை?”
“கமல்ஹாசன், விஜயகுமார், சுஜாதா.”
“தவிர்க்க விரும்புபவர்கள்?”
“ஜால்ரா போடுபவர்களை.....”
“மறக்க விரும்பாதது?”
“சாதாரண மனிதன் சிவாஜிராவ், நடிகன் ரஜினிகாந்தாக மாறிய தருணங்களை.....”
“எதற்கு பயப்படுவீர்கள்?”
“யாருடைய மனசையாவது தெரியாமல் கூட புண்படுத்திவிடக்கூடாதே என்று பயப்படுவேன்.”

தொகுப்பு : யுவகிருஷ்ணா