ரஜினியின் முதல் ரசிகை!ரஜினி, ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் நடித்த அனுபவங்களை பல்வேறு பேச்சுகளிலும், எழுத்துகளிலும் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து பாலச்சந்தர் அவரை எப்படி நடிகராக மெருகேற்றினார் என்பதை பலமுறை பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். அவரை ஒரு பத்திரிகைக்காக பாலச்சந்தர் எடுத்த பேட்டியிலுமே கூட அந்த அபூர்வ நாட்களை துல்லியமாக நினைவுகூர்ந்தார். அவற்றைத் தொகுத்துத் தருகிறோம். ரஜினி குரலிலேயே வாசியுங்கள்.

“எனக்கு அப்போ கேமரா பயமில்லை. பாலச்சந்தர்னாதான் பயம். அவ்வளவு பெரிய டைரக்டர் முன்னாடி நல்லபடியா நடிச்சி பேரு வாங்கணுமேன்னுதான் பயந்தேன். ‘அபூர்வ ராகங்கள்’ நடிச்சி முடிச்சபிறகு என்னோட நண்பர்கள், குடும்பத்தினர் எல்லாருமே ‘பாலச்சந்தருக்கு உன் நடிப்பு திருப்தியா?’ன்னுதான் விசாரிச்சாங்க.

படம் பற்றிய பத்திரிகை விமர்சனங்களில் ஒரு பத்திரிகை மட்டும் என்னைக் குறிப்பிட்டிருந்தது. அதுவும், ‘இன்னும் நல்லா நடிச்சிருக்கலாம்’னு சொல்லியிருந்தது. நல்லா நடிச்சிருக்கேன்னு சொல்லுறதைவிட, இன்னும் நல்லா நடிச்சிருக்கலாம்னு சொல்லுறதுதான் அன்னைலேயிருந்து எனக்குப் பிடிக்கும்.

ஆரம்பக் காலத்திலே பாலச்சந்தர் சார்கிட்டே நான் திட்டு வாங்காத நாளே இல்லை. நான் இன்னும் நல்லா நடிக்கணும், நிறைய புகழ் பெறணும்னு விரும்பினாரு. அதனாலேதான் திட்டிக்கிட்டே இருந்தாரு. ஒருநாள் கனவுலே ‘மூன்று முடிச்சு’ படப்பிடிப்பு வந்தது. படத்துலே நடிச்சவங்க எல்லாருமே வந்தாங்க. கனவுலேகூட பாலச்சந்தர் சார் என்னை திட்டினாருன்னா பார்த்துக்கங்களேன். என்னோட ஆரம்ப நாட்களில் கமல், சிவகுமார், விஜயகுமார், ஸ்ரீவித்யா, ஸ்ரீபிரியா போன்றவர்கள் என்னோடு சகஜமாக பேசினாங்க.

‘அபூர்வ ராகங்கள்’ படத்தை சென்னை தி.நகர் கிருஷ்ணவேணி தியேட்டரில்தான் முதல் நாள் பார்த்தேன். டிக்கெட் கிடைக்கலை. பிளாக்கில் வாங்கித்தான் பார்த்தேன். படம் பார்த்தவங்க என்னை அடையாளம் கண்டுக்கலை. நான் அப்போ நிறைய தாடி வெச்சிருந்தேன். இடைவேளையிலே ஒரு சின்னப் பொண்ணு என்னைப் பார்த்து, ‘மாமா நீங்களும் இந்தப் படத்தில் ஆக்ட் பண்ணுறேள் இல்லையா?’ன்னு கேட்டா. அவளோட ஃபேமிலிக்கும் என்னை அறிமுகப்படுத்தினா. என்னோட முதல் ரசிகை, அந்த குட்டிப் பொண்ணுதான்.”

- யுவா