மின்னுவதெல்லாம் பொன்தான்-9பாக்யராஜை நகலெடுத்த யோகராஜ்!

எண்பதுகளில் ‘ஐடியல் ஹஸ்பெண்ட்’ இமேஜில் பாக்யராஜ் தமிழகத்து தாய்மார்களிடம் கோலோச்சிக் கொண்டிருந்த நேரம். ரஜினிகாந்த், கமல்ஹாசன் மாதிரியே வரிசை கட்டி சினிமாவுக்கு வந்தவர்கள் வரிசையில் பாக்யராஜ் மாதிரியே வந்து சேர்ந்தவர் யோகராஜ்.பொன் வைக்கிற இடத்துலே பூ வைக்கிற கணக்காக பாக்யராஜ் தோற்றத்திலேயே அவரது பாணி கதைகளோடு, அதே மாதிரி டைட்டிலோடு களமிறங்கி பரபரப்பை ஏற்படுத்தினார்.

பொதுவாக சூப்பர் ஸ்டார்களுக்குதான் ஜெராக்ஸ் நடிகர்கள் வருவார்கள் என்கிற மரபை உடைத்து, பாக்யராஜ் மாதிரி மாஸும் இல்லாமல், கிளாஸும் இல்லாமல் நடுத்தரமாக நின்ற ஒருவருக்கு ஜெராக்ஸ் நடிகர் வந்தார் என்பது அப்போது அதிசயமாக பார்க்கப்பட்டது.

பல்லாவரத்தில் ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர், சினிமா மீது கொண்ட ஆர்வம் காரணமாக தன்னுடைய இயற்பெயரான பன்னீர்செல்வம் என்பதை யோகராஜ் என்று மாற்றிக்கொண்டு திடீரென களத்தில் குதித்தார்.

தொழிற்சாலையில் அவருடன் பணியாற்றிக் கொண்டிருந்த சக தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் பணத்தைப் போட்டு தங்களில் ஒருவரை ஹீரோவாக சினிமாவுக்கு அனுப்பினார்கள்.அந்தப் படம்தான் ‘ஊமை குயில்’.

பாக்யராஜ் பாணியில் அவரே தயாரித்து, கதை, வசனம், இயக்கத்தோடு ஹீரோவாகவும் நடித்தார். இளவரசி ஹீரோயின். சந்திரபோஸ் இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய ‘என் ராசாத்தி நீ வாழணும்’ என்கிற சோக ஹிட் மெலடி இடம்பெற்ற படம் இது.

அந்தக் காலக்கட்டத்தில் ‘எங்க சின்ன ராசா’வுக்குப் பிறகு பாக்யராஜ் ‘இது நம்ம ஆளு’ படத்தை நீண்டகாலமாக எடுத்துக் கொண்டிருந்தார். பாக்யராஜ் படமே வராத காலக்கட்டத்தில் வந்த யோகராஜின் ‘ஊமைகுயில்’ ஹிட்டாக அதுவே காரணம் ஆயிற்று. சென்னையிலேயே படம் 100 நாட்கள் ஓடி நல்ல வசூலை எடுத்தது. அந்தக் காலக்கட்டத்தில் இந்தப் படத்துக்காக தான் பணிபுரிந்த தொழிற்சாலை சகாக்களிடம் வாங்கிய பணத்தை யோகராஜ் திருப்பிக் கொடுக்க மறுத்தார் என்று பெரிய கலாட்டா கூட ஆனது.

‘ஊமைகுயில்’ படத்தின் வெற்றியை அடுத்து பாக்யராஜின் கால்ஷீட் கிடைக்காதவர்கள் யோகராஜின் வீட்டுக்கு படையெடுத்தார்கள். பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கினார் யோகராஜ். மீடியாக்களும் பாக்யராஜுக்கு போட்டி என்று இவரை உசுப்பேத்தி விட்டன.யோகராஜ் படங்களின் தலைப்புகளே பாக்யராஜுக்கு டஃப் காம்பெடிஷனாக அமைந்தன. உதாரணம், ‘எம் பொண்டாட்டி’.

ஜீவபாலன் இயக்கிய ‘சம்சாரமே சரணம்’ என்கிற படத்தில் யோகராஜ் ஹீரோ. அவருக்கு மனைவி ரஞ்சனி. பாக்யராஜ் மாதிரியே தோளில் ஜோல்னா பை, பைஜாமா உடை, முகத்தில் அவர் மாதிரியே கண்ணாடி அணிந்து அவர் மாதிரியே நடித்தார்.

‘அதுல ஒரு சமாச்சாரம் என்னென்னா’ என்று அவர் மாதிரியே டயலாக் பேசினார். சோப்ளாங்கியான கணவனை எப்படியாவது விவாகரத்து செய்யத் துடிக்கும் மனைவிக்கும், அந்தக் கணவனுக்கும் நடக்கும் பிரச்சினைதான் கதை. இந்தப் படமும் ஓரளவு நன்றாக ஓடி வசூலித்தது.

பாக்யராஜின் ‘முந்தானை முடிச்சு’ பாணியில் ‘முந்தானை சபதம்’ என்றொரு படம். செந்தில்நாதன் இயக்கினார், வி.சி. குகநாதன் தயாரிப்பு. அடுத்து ஜமீன்ராஜ் இயக்கத்தில் ‘காசு தங்க காசு’. இந்தப் படங்கள் எல்லாம் சரியாக ஓடவில்லை. இதற்கிடையே பாக்யராஜின் ‘இது நம்ம ஆளு’ வெளிவந்து பட்டி தொட்டி யெங்கும் சக்கைப்போடு போட்டது. ஒரிஜினலே பிக்கப் ஆகிவிட்ட நிலையில் டூப்ளிகேட்டுக்கு இடமில்லாமல் போனது.

பொதுவாக இப்படி நகல் நடிகர்களாக வருகிறவர்கள், ஒரு கட்டத்திற்குப் பிறகு தங்களுக்கென்று தனி பாணியை கையில் எடுக்காவிட்டால் பிறகு காணாமல் போய்விடுவார்கள் என்பதுதான் கடந்த கால சினிமா வரலாறு.

ஆரம்பத்தில் நடிகர் பிரபு, அவருடைய அப்பா சிவாஜி மாதிரியே நடித்தார். ஒரு கட்டத்தில் அந்தத் தவறை உணர்ந்து தனிப்பாதை அமைத்து வெற்றி கண்டார். சிவாஜி பிரபு என்று வைத்துக் கொண்ட பெயரைக்கூட பின்னாளில் பிரபு என்றே சுருக்கிக் கொண்டார்.

கமல் சாயலில் வந்த மோகன், ரஜினிகாந்த் சாயலில் வந்த விஜயகாந்த் உள்ளிட்ட பலர் தக்க நேரத்தில் தங்களை மாற்றிக் கொண்டு வெற்றி பெற்றார்கள். ஆனால் யோகராஜ் இன்னொரு பாக்யராஜாகவே முயன்றுகொண்டிருந்ததால் தோற்றுப்போய் காணாமல் போனார். அதன் பிறகு அவர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை.

சினிமாவில் ஒவ்வொருவரின் இடமும் தனித்தனியானது. யார் இடத்தையும் யாராலும் நிரப்ப முடியாது. ஒரு அறிமுகத்துக்கு, அடையாளத்துக்கு வேண்டுமானால் முகத் தோற்றம் பயன்படலாமே தவிர அதுவே வெற்றியைத் தந்துவிடாது என்பதற்கு யோகராஜ் ஒரு உதாரணம்.

(மின்னும்)

●பைம்பொழில் மீரான்