சென்னையின் பழைய தியேட்டர் சினிமா படமாகிறது!“ஒளிப்பதிவாளராக 12 படங்கள் வேலை பார்த்தேன். ஒரு படம் தயாரித்தேன். ஆனால், எந்தப் படமும் ஓடவில்லை. இப்போது நான் இயக்கும் ‘கபாலி டாக்கீஸ்’ ஓடும் என்ற நம்பிக்கை இருக்கு’’ என்று யதார்த்தமாகப் பேசுகிறார் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ரவி சீனிவாஸ். இவர் இயக்குநர் வேலுபிரபாகரனிடம் சினிமா பயின்றவர். டப்பிங் பணியில்  இருந்தவரிடம் பேசினோம்.

“உங்க சினிமா டிராவல் பற்றி சொல்லுங்களேன்?”

“எனக்கு சொந்த ஊர் சென்னை. சின்ன வயசுலேர்ந்து சினிமா, இசைன்னா ரொம்பப் பிடிக்கும். ஏன்னா நான் இருந்த ஏரியா அப்படி. எங்க வீட்ல இருந்து கூப்பிடும் தூரத்தில் ‘கபாலி டாக்கீஸ்’ இருந்தது. அப்பா அரசியல்வாதி. அண்ணன் தியேட்டர் ஆபரேட்டர். இதுதான் என்னுடைய பின்னணி. எட்டாவது வரைதான் படித்தேன்.

அதுக்கு மேல படிக்கலாம்னா ஸ்கூல்ல துரத்திட்டாங்க. அவங்க மேல தப்பில்லை. தண்ணி அடிக்கிற பையனை யார்தான் சேர்த்துப்பாங்க. சினிமா மீதுள்ள காதலால் தபேலா, ட்ரிபிள் காங்கோ, மிருதங்கம் போன்ற இசைக் கருவிகளைப் பயன்படுத்த இசைக் கல்லூரியில் சேர்ந்து கற்றுக் கொண்டேன். பானுமதி அம்மாதான் பிரின்ஸ்பலாக இருந்தார்.

அப்போது ரமேஷ் என்ற நண்பர் ஸ்டில்ஸ் எடுக்க கற்றுக் கொடுத்தார். அவர் வேலு பிரபாகரன் சாரிடம் சேர்த்துவிட்டார். ‘நாளைய மனிதன்’, ‘கடவுள்’ போன்ற படங்களில் ஸ்டில்போட்டோகிராபராக பணிபுரிந்தேன்.”

“ஒளிப்பதிவாளராக எப்படி மாறினீர்கள்?”

“அருண்பாண்டியன், நெப்போலியன் நடித்த படம் ‘சிவன்’. அந்தப் படத்துக்கு வேலுபிரபாகரன் சார் ஒளிப்பதிவு. அவர் படப்பிடிப்புக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் என்னிடம் கேமரா நுணுக்கங்களைப் பற்றி சில கேள்விகள் கேட்டார்.

என்னுடைய பதில் அவருக்கு திருப்தியளிக்கவே இந்தப் படத்துக்கு நீயே கேமரா பண்ணு என்று புரொமோஷன் கொடுத்து அனுப்பி வைத்தார். அப்படித்தான் கேமராமேனாக மாறினேன். தொடர்ந்து ‘நெருப்பு’, ‘ஆண்டிப்பட்டி அரசம்பட்டி’, ‘சகா’, ‘மகுடி’ உட்பட ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு பண்ணினேன்.”

“முதல் டைரக்‌ஷன் அனுபவம் எப்படி இருந்தது?”

“ஒளிப்பதிவாளர் என்பவர் பாதி இயக்குநர் மாதிரி. அப்படி என் மனதில் நீண்ட நாட்களாக நிழலாடிய விஷயங்களை படமாக பதிவு பண்ண நினைத்தேன். அதுதான் இப்போ ‘கபாலி டாக்கீஸா’க உருவாகியுள்ளது. ‘உன் நண்பன் யார் என்று சொல், நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’ என்று சொல்வார்கள். நாம் யாருடன் பழகுகிறோமோ அதுமாதிரிதான் நம்  வாழ்க்கையும் அமையும்.

அந்த வகையில் என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைத்தான் சினிமாவா பண்ணியிருக்கிறேன். ‘கபாலி டாக்கீஸ்’ என்பது மத்தவங்களைப் பொறுத்தவரை ஒரு தியேட்டர். ஆனால் எனக்கு அதுதான் போதிமரம். தலைவர் படம், சூப்பர் ஸ்டார் படம் என்று ஒரு படமும் மிஸ் பண்ணாமல் பார்ப்பேன்.

அப்போது நான் சந்தித்த மனிதர்கள், நிகழ்வுகளைத்தான் கலகலப்பான கமர்ஷியல் சினிமாவாக எடுத்துள்ளேன். அதுமட்டுமில்ல, ப்ளாக் அண்ட் ஒயிட் காலத்திலிருந்து இப்போ இருக்கும் சினிமாவரை சினிமாவின் பரிமாண வளர்ச்சியையும் சொல்லியுள்ளேன்.”

“ஷூட்டிங்கை எங்க எடுத்தீங்க?”

“கபாலி டாக்கீஸ் இருந்த இடத்துலே இப்போ அப்பார்ட்மென்ட் வந்துடுச்சி. சென்னையில் உள்ள பழங்கால தியேட்டரை வாடகைக்கு எடுத்து ஷூட் பண்ணினோம். தியேட்டர் ஓனரின் மனநிலை, நிர்வாகம் எப்படி அந்தத் தியேட்டரோடு கலந்து இருக்கிறது என்பதை உணர்வுபூர்வமாகக் காட்சிப்படுத்தியுள்ளேன்.”

“ஹீரோ?”

“இந்தக் கதையை முதலில் என் பால்ய கால நண்பர் நட்டியிடம்தான் எடுத்துச் சென்றேன். ஏன்னா, நானும் நட்டியும் ஒரே ஏரியாக்காரங்க. நட்டிக்கும் கபாலி டாக்கீஸ் அனுபவம் இருக்கு. அவர் இந்தப் படத்தை பண்ணினால் கரெக்ட்டா இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அவருடைய லெவல் இப்போது உயரத்தில் இருக்கிறது. நான் இன்னும் என்னை ப்ரூவ் பண்ணவில்லை.

இந்தப் படம் பண்ணினால் இரண்டுபேருக்குமிடையே சங்கடம் வரும் என்பதை நட்டி நாசூக்காக உணர்த்தியதால் அந்தத் திட்டம் நிறைவேறவில்லை. அடுத்து பிரபல ஹீரோ ஒருவரிடம் கதையை எடுத்துச் சென்றேன். அவருக்கு கதை பிடித்திருந்தது. ஆனால் தயாரிப்பு நிர்வாகம் மீது அவருக்கு நம்பிக்கை இல்லாததால் பேக் அடித்துவிட்டார். அடுத்து பிரபல காமெடி நடிகர் மகனிடம் கதை சொன்னேன்.

வளர்ந்தும் வளராத அவரும் பிகு பண்ணினார். கடைசியாக இந்தப் படத்துக்கு வசனம் எழுதிய முருகானந்தம் நடித்தா நல்லா இருக்கும் என்ற ஐடியா வந்தது. முருகானந்தம் சமீபத்தில் வந்த ‘கதாநாயகன்’ படத்தின் இயக்குநர். ஏராளமான படங்களில் காமெடி வேடத்தில் நடித்துள்ளார்.அவரிடம் நடிக்க சொல்லிக் கேட்டேன். ‘நான் அவ்வளவு ஒர்த் இல்லை பாஸ்’ என்று அவரும் ஜகா வாங்கினார். ஒரு வழியாக அவரை காம்ப்ரமைஸ் பண்ணி நடிக்க வைத்துள்ளேன்.

முருகானந்தம் அடிப்படையில் இயக்குநர். ஆனால் எந்த இடத்திலும் என்னை தொந்தரவு பண்ணவில்லை. அவர் நடித்ததால் நான்தான் ஆதாயம் அடைந்துள்ளேன். வேறு யார் நடித்திருந்தாலும் எனக்கு முழு திருப்தி இருந்திருக்காது. அவ்வளவு பிரமாதமாகப் பண்ணிக் கொடுத்தார்.”

“ஹீரோயின்?”

“ஹீரோயின் கேரக்டர் பெயர் கோலமாவு கோமளா. இந்தக் கேரக்டருக்கு முதிர்ச்சியும் இல்லாத, குழந்தைத்தனமும் இல்லாத முகம் தேவைப்பட்டது. நீண்ட தேடலுக்குப் பிறகு கேரளாவைச் சேர்ந்த மேக்னா கிடைத்தார். ஏற்கனவே ‘உறுதி கொள்’ என்ற படம் பண்ணியவர். நடிப்புல எந்த குறையும் வைக்காம அசத்தினார்.

இன்னொரு நாயகியாக வர்ணிகா பண்றார். இது தவிர முக்கிய வேடத்தில் சார்லி, மதன்பாப், ஜி,எம்.குமார், பி.எல்.தேனப்பன், இமான் அண்ணாச்சின்னு பெரிய பட்ஜெட் படத்துல இருக்கிற அனைவரும் இருக்காங்க. எல்லோரும் என்மீதுள்ள அபிப்பிராயம் காரணமாக நடித்தார்கள்.”

“உங்க படத்துல கானா பாடல் கலக்கலா வந்துள்ளதாமே?”

“அதுக்கு சபேஷ்-முரளி சாருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். சின்ன வயதிலிருந்து சபேஷ் சார் பழக்கம். அவரும் மந்தைவெளிக்காரர். படத்துல மொத்தம் ஐந்து பாடல். எல்லாமே சூப்பர் ஹிட் டைப். பாடல்களை சினேகன், மதுரகவி, விஜய் சாகர் எழுதியுள்ளார்கள்.

‘ஆனா ஆத்துமா… ஆகாகாட்டி பாத்துமா… ஏறுனா ரயிலு… இறங்கினா ஜெயிலு…” என்ற பாடலை சபேஷ் பாடியுள்ளார். ‘கொத்தவால் சாவடி லேடி’ மாதிரி ஹிட்டடிக்கும்.

இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு ரொம்ப முக்கியம். பெரிய கேமராமேன்களை வைத்து ஒர்க் பண்ணினால் பட்ஜெட் தாங்காது என்பதால் நானே கேமரா பண்ணியிருக்கிறேன். அதேபோல் ஆர்ட் டைரக்‌டரின் பங்கும் பெரிதாக இருக்கும். பாலுமகேந்திரா படங்களில் வேலை பார்த்த எடிட்டர் ராஜேஷ் சிறப்பாகப் பண்ணிக் கொடுத்தார்.

சந்திரமெளலி தயாரித்துள்ளார். படத்தோட டீசரைப் பார்த்துட்டு டாக்டர் பாலா தன்னையும் தயாரிப்பாளராக இணைத்துக்கொண்டார். நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒத்துழைப்பால் ‘கபாலி டாக்கீஸ்’ பெரிய படமா வந்திருக்கு. படம் கொடுக்கிற நம்பிக்கையில் இப்படி பேசமுடிகிறது.”

- சுரேஷ்ராஜா