2.0



I am a Birdman!

இந்த உலகத்தில் மனிதர்களைவிட பறவைகள் அதிகம். பறவைகளைவிட பூச்சிகள் அதிகம். மனிதர்களின் பேராசையால் பறவைகள் அழிகின்றன. பறவைகளின் உணவு, பூச்சிகள். பறவைகள் அழியும் நிலையில் பூச்சிகள் பெருகினால் அது  மனித இன அழிவுக்கு காரணமாகிவிடும் என்கிற அழுத்தமான கருத்தை கிராபிக்ஸ் துணையோடு வித்தை காட்டியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

சென்னை மாநகரத்தில் செல்போன் உபயோகிப்பவர்கள் அத்தனை பேரின் போனும் ஒரே நேரத்தில் மேஜிக் மாதிரி வானத்தில் பறந்து செல்கின்றன. பீதியடைந்த மக்கள் கமிஷனர் அலுவலகத்தில் கூடி சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. இந்த களேபரத்தில் செல்போன் விற்பனையாளர், நெட் ஒர்க் அதிபர், அமைச்சர் என்று அடுத்தடுத்து மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள்.

மாயமான செல்போன்களைக் கடத்துபவர் யார், கொலைகளை நிகழ்த்தும் மர்ம மனிதன் யார் என்று புரியாமல் அரசாங்கம் குழம்புகிறது. ‘சிட்டி’ என்கிற ரோபோவை உருவாக்கிய விஞ்ஞானி ரஜினிடம் உதவி கேட்கிறது. நிலைமையை சமாளிக்க சிட்டி ரோபோவால்தான் முடியும் என்கிறார் ரஜினி. ஏற்கனவே சிட்டி ரோபோவை தடை செய்து வைத்திருக்கும் அரசு அனுமதி மறுக்கிறது.

அரசுக்குத் தெரியாமல் சிட்டியை உயிர்ப்பிக்கிறார் விஞ்ஞானி. செல்போனுக்கு எதிராகவும், மனிதர்களுக்கு அச்சுறுத்தலாகவும் நடக்கும் இந்த மாயப் போராட்டத்தை நடத்தும் மர்ம மனிதனை சிட்டி எப்படி புரட்டிப் போடுகிறது என்பதே மீதிக்கதை.விஞ்ஞானி வசீகரன், சிட்டி, சிட்டி 2.0 மற்றும் 3.0 குட்டி ஆகிய வித்தியாசமான தோற்றங்களில் வருகிறார் ரஜினி. இதில் சிட்டி வெர்ஷன் 2.0 என்று அவர் அதிரடி காட்டும்போது அரங்கம் அதிர்கிறது.

நாயகி எமிக்கு ஓர் அழகான வேடம். அவரும் ரோபோதான். அவருடைய மொத்த அழகையும் எந்திரங்களால் மூடி மறைத்தாலும் ரஜினிக்கு இணையாக ஸ்டைல் காட்டுவதும், ‘லேப்டாப்புக்கு எதுக்கு நன்றி’ என்று ரஜினியையே தடுமாறவைக்கும் காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன. எமியையும், ரஜினியையும் தொடர்புபடுத்தி ஐஸ்வர்யாராய் (போன் வாய்ஸ் மட்டும்தான்) சந்தேகப்படுவதும், அதை ரஜினி அழகாக ஹேண்டில் செய்வதும் கவித்துவமான காட்சிகள்.

இந்தியாவின் பறவை மனிதர் சலீம் அலியை நினைவுபடுத்துகிறார் பட்சிராஜா வேடத்தில் நடித்திருக்கும் அக்‌ஷய்குமார். நரைமுடி, தள்ளாடிய நடை, நிதானமான வாய்ஸ் டெலிவரி என்று சகல விதத்திலும் மிரட்டியிருக்கிறார். ஆக்ரோஷமாக அலறுகிற காட்சிகளில் தொழில்நுட்பங்களைத் தாண்டி பிரமாதப்படுத்துகிறார். டப்பிங் கொடுத்திருக்கும் ஜெயப்பிரகாஷுக்கும் சபாஷ் போடலாம். ஐசரி கணேஷ், மயில்சாமி ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரகுமானின் இசையில் நா. முத்துக்குமாரின் ‘புல்லினங்காள்’ பாடல் மயங்கவைக்கிறது. மதன் கார்க்கியின் ‘இந்திர லோகத்து சுந்தரியே’ தாளம் போட வைக்கிறது.நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு படத்தைத் தாங்கிப்பிடித்துள்ளது. கலை இயக்குநர் முத்துராஜ், சவுண்ட் என்ஜினியர் ரசூல் பூக்குட்டி என்று அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பும் சிறப்பு.

அவசரத் தேவைக்காக இருந்த செல்போன் பிறகு ஆடம்பரமாக மாறியது. இப்போது இன்றியமையாத வஸ்துவாக மாறியுள்ள நிலையில் செல்போன்களால் சுற்றுச்சூழல் மாசுபடுவதைப் பற்றிப் பேசியிருப்பதோடு முப்பது கிராம் எடையுள்ள குருவியை வாழவிடாத குறுகிய மனம் படைத்தவர்களாக மனிதர்கள் மாறிப்போனதை படம் பிடித்துக் காண்பித்து மனிதர்களைத் தலைகுனிய வைக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

உலகம் மானிடர்களுக்கு மட்டுமன்று, சகல ஜீவராசிகளுக்குமானது என்கிற புகழ்பெற்ற சுற்றுச்சூழல் மொழியை உலகம் வியக்கும் விதத்தில் பிரமாண்ட சினிமாவாக கொடுத்துள்ள ஷங்கர் உலகத்தமிழர்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.3D வடிவில் இந்திய சினிமாவை ஹாலிவுட் தரத்துக்கு உயர்த்தியிருக்கும் ஷங்கரை எப்படி பாராட்டினாலும் தகும்.