பயங்கரமான ஆளாக தயாரிப்பாளரே நடிக்கிறார்!



சித்தர்களை மையமாக வைத்து உருவாகும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் ‘பயங்கரமான ஆளு’.பரிஷ்த்தா பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அரசர் ராஜா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பதோடு, இந்தப் படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகிறார்.
படத்தைப் பற்றி இயக்குநரும், ஹீரோவுமான அரசர் ராஜாவிடம் கேட்டபோது, “நம் இந்தியத் திருநாடு சித்தர்கள், யோகிகள், ஞானிகள் மற்றும் முனிவர்கள் நிறைந்த நாடாக உள்ளது. அவர்கள் அரிய கலைகள், சித்துகள் அறிந்தவர்கள்.

அந்த அரிய கலையை சாமானிய மனிதன் கைக்கொள்ளும்போது, அவன் சந்திக்கக்கூடிய மாபெரும் சம்பவங்கள்தான் இந்தப் படத்தின் கதை.இந்திய மண்ணில் இப்படிப்பட்ட அரிய சக்திகள் குறித்தோ, சித்தர்களின் அரிய ரகசியங்கள் குறித்தோ இதுவரை யாரும் சொன்னதில்லை. பல்வேறு நூல்கள், ஓலைச் சுவடிகள் மற்றும் புராணங்கள் உள்ளிட்ட பலவற்றில் இருந்து கண்டுபிடித்த விஷயங்களை சுவாரஸ்யமான திரைக்கதையோடு, பரபரப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாக்கியுள்ளேன்.

இந்தப் படத்தில் எனக்கு இரட்டை வேடம். ஆரம்பத்தில் பிரபல ஹீரோவை வைத்து இந்தப் படத்தை இயக்க திட்டமிட்டேன். கால்ஷீட் போன்ற பிரச்சினைகளால்  ஹீரோ கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

படக்குழு அளித்த உற்சாகத்தால் நானே ஹீரோவாகக் களமிறங்கினேன்.
நாயகிகளாக ரிஷா, சாரா நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் கஞ்சா கருப்பு, போண்டா மணி உள்பட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
பாடல்களுக்கு சுதிர் அலிகான் இசையமைத்திருக்கிறார்.

சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்பதால் பின்னணி இசை பிரத்யேகமாக இருப்பதோடு, படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் இருக்கவேண்டும் என்பதால், தஷி பின்னணி இசையமைத்துள்ளார். பாடல்கள் தமிழ்க்குமரன். செல்வமணி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சண்டைக்காட்சிகளை கிக்காஸ் காளி வடிவமைத்துள்ளார். சரண் பாஸ்கர் நடனம் அமைத்திருக்கிறார்.

கேரளா, வேலூர், ஆரணி, சென்னை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. வேலூரில் உள்ள பூச்சாண்டி குப்பம் என்ற காட்டுப் பகுதியில் உள்ள பழைய பிரெஞ்சுக் கோட்டை ஒன்றிலும் படமாக்கப்பட்டுள்ளது.

மிகப் பழமையான இந்தக் கோட்டையில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட முதல் படம் ‘பயங்கரமான ஆளு’ தான் என்பது ஹைலைட்டான விஷயம்.இது சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையிலான படமாக இருந்தாலும், காதல், காமெடி என்று பொழுதுபோக்குப் படமாக இருக்கும்’’ என்றார்.

- ராஜா