காலா



நிலமும் நீலமும் எமது இரு கண்கள்!

மும்பையின் இதயமான தாராவியில் வாழும் ஏழை மக்களின் வாழ்வாதாரமான நிலத்தை அபகரிக்க முயலும் அதிகார வர்க்கத்துக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்கள் ஓங்கி ஒலிக்கும் போராட்ட கோஷம்தான் ‘காலா’.தாராவியின் முடிசூடா மன்னனாக கம்பீரமாக வலம் வருகிறார் கரிகாலன் என்கிற காலா. கருப்புச்சட்டை சீருடை, ரஜினியின் அறை மேசையில் இராவண காவிய நூல், காட்சிகளின் பின்னணியில் அம்பேத்கர், புத்தர், பெரியார், இரட்டைமலை சீனிவாசன், ஜோதிராவ் புலே என்று காட்டிய இயக்குநர் ரஞ்சித்தின் வீரத்துக்கு ஒரு சலாம்.

நானா படேகர் மற்றும் மந்திரி சாயாஜி ஷிண்டே ஆகியோரிடம் நெஞ்சு நிமிர்த்திப் பேசும் ரஜினி, மனைவி ஈஸ்வரி ராவ் முன்பாக பெட்டிப் பாம்பாக அடங்குவது சிறப்பு. ஊருக்கெல்லாம் புலியாக இருந்தாலும் வீட்டில் எலியாக வாழ்வதுதான் இல்லறத்தின் நல்லறம் என்பதை தன் ரசிகர்களுக்கு பாடமெடுத்திருக்கிறார் ரஜினி.

“முன்னோரோட சொல் எனக்கு ஆணை”, “நிலம் உனக்கு அதிகாரம், எங்களுக்கு அதுதான் வாழ்க்கை”, “என்னோட நிலத்தைப் பறிக்கிறதுதான் உன் கடவுளோட வேலைன்னா, உன் கடவுளையும் விடமாட்டேன்” என்றெல்லாம் அனல் கக்க ரஜினி பேசும் பஞ்ச் வசனங்களுக்கு கைதட்டல் காதைக் கிழிக்கிறது. முன்னாள் காதலியிடம் அவர் காட்டும் நாகரீகம், அதை உடல்மொழியில் வெளிப்படுத்தும் லாவகம் என்று ‘காலா’ முழுக்கவே ரஜினி ராஜ்ஜியம்.

ரஜினியின் மனைவி செல்வியாக வரும் ஈஸ்வரிராவ், கச்சிதமான தேர்வு. தோற்றத்திலும், டயலாக் டெலிவரியிலும் சூப்பர் ஸ்டாருக்கு இணையாக கைதட்டல்களை அள்ளுகிறார். திருநெல்வேலி மண்ணின் பாசத்தையும், பண்பையும், கோபத்தையும் திரையில் துல்லியமாகக் கொண்டு வருகிறார். “நீங்க மட்டும்தான் முன்னாள் காதலியைப் பார்க்கப் போவீங்களா? நானும் திருநெல்வேலி போறேன்.

என்னையும்தான் ஒருத்தன் லவ் பண்ணான்” என்று ஊடலில் காதல் செய்யும்போது ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். “ஒரு ‘ஐ லவ் யூ’ சொன்னாதான் என்னவாம்?” என்று ரஜினியிடம் காதலைக் கேட்டு வாங்கும் காட்சியில் குதூகலிக்க வைக்கிறார்.

முன்னாள் காதலி சரீனாவாக கொடுத்த வேலையை சரியாகச் செய்திருக்கிறார் பாலிவுட் நாயகி ஹூமா குரேஷி. ரஜினியுடனான ஓட்டல் சந்திப்பில் கண்களால் அவர் பேசுவது இலக்கியத்தரம். “நான், நீ முன்னாடி பார்த்த சரீனா இல்ல, உனக்கு உன் நினைவுகள்ல இருக்குற சரீனா போதும்” என ஹூமா விலகும் காட்சி முன்னாள் காதலர்களை உருக வைக்கும். “கைகொடுத்துப் பழகுங்க, அதுதான் ஈக்குவாலிட்டி; கால்ல விழவைக்காதீங்க” என்று ரஜினிக்கு இணையாக பஞ்ச் டயலாக் அடித்து இவரும் கவர்கிறார்.

ஹரிதேவ் என்கிற ஹரிதாதாவாக அனுபவ நடிகர் நானா படேகர் வருகிறார். வசனமே தேவையில்லாமல் பார்வையிலேயே நடுங்க வைக்கிறார். நானா, தன்னை தேசபக்தர் எனச் சொல்லிக்கொள்கிறார்.

“தூய்மையான மும்பையே என் கனவு” என அறிவிக்கிறார். “என் திட்டத்தை எதிர்ப்பவர்கள் தேசத்துரோகிகள்” எனக் குற்றம் சாட்டுகிறார். “கறுப்பு என் கண்ணை உறுத்துது” என சலித்துக்கொள்கிறார். இப்படி நேரிடையாகவே போட்டுத் தாக்குபவர்கள், சென்ஸாரின் கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிவிட்டுத்தான் சான்றிதழ் வாங்கியிருப்பார்கள் போலிருக்கிறது.

ரஜினியின் குடிகார மச்சானாக சமுத்திரக்கனி கலகலப்பு. காமெடியிலும் தன்னால் முத்திரை பதிக்க முடியுமென்று போதை கதாபாத்திரத்தில் செமையாக சலம்பியிருக்கிறார். “ஏய் காக்கி டவுசரு, ஓடிப் போயிரு” என்று அவர் சொல்லும் இடத்தில் விசில் சப்தம் விண்ணைப் பிளக்கிறது.

தாராவியைக் காக்கும் மதுரைவீரனாக, காலாவின் தளபதியாக நடித்திருக்கிறார் ‘தீக்குச்சி’ திலீபன். சிகப்புச் சட்டை லெனினாக வரும் மணிகண்டனின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. அஞ்சலி பாட்டீல், சம்பத், அருள்தாஸ், ஷாயாஜி ஷிண்டே, அருந்ததி, ஆறுமுகவேல் என படத்தின் அத்தனை கதாபாத்திரங்களும் தங்களது பங்களிப்பை பாராட்டும் விதத்தில் கொடுத்திருக்கிறார்கள்.

ஆசியாவின் மிகப்பெரிய சேரி என்று சொல்லப்படும் தாராவியை, அதன் யதார்த்தத்துடன் கண் முன்பாக நிறுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் முரளி. கலை இயக்குநர் ராமலிங்கத்துக்கு, இந்தப் படத்திற்காக தேசிய விருது வழங்கப்படுவதே நியாயம். எது உண்மையான தாராவியில் படமாக்கப்பட்டது, எது சென்னையில் போடப்பட்ட செட்டில் படமாக்கப்பட்டது என்றே பிரித்துணர முடியவில்லை.

ஸ்ரீகர் பிரசாத்தின் கத்திரி இன்னும் கொஞ்சம் துல்லியமாக வேலை பார்த்திருந்தால், கச்சிதமான எடிட்டிங்கில் காலா மேலும் மிளிர்ந்திருப்பார். ‘தங்கச்சிலை’ பாடல், தீம் மியூசிக், பின்னணி இசை என்று ரஜினி படத்துக்குரிய பிரும்மாண்டத்தை இசையில் கொண்டு வந்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

தாராவியிலேயே பிறந்து வளர்ந்த மகிழ்நன், இடதுசாரி புரட்சி எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா இருவரோடு இயக்குநர் ரஞ்சித்தும் இணைந்து எழுதியிருக்கும் வசனங்கள் தீபறக்கின்றன. தான் சொல்ல வந்த கருத்தை, எந்தவித சமரத்துக்கும் உள்ளாகாமல் நெத்தியடியாக சொல்லியிருக்கிறார் இரஞ்சித். எனினும் படத்தின் நீளத்தை சற்று குறைத்திருந்தால், இன்னும் வேகம் கூடியிருக்குமே என்கிற ஆதங்கத்தை மட்டும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.