டூபீஸ் டான்ஸ்! ரெஜினா திருப்தி



‘தீராத விளையாட்டுப் பிள்ளை’, ‘சமர்’, ‘நான் சிகப்பு மனிதன்’ என்று அடுத்தடுத்து படங்களை எடுத்து பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருந்தார் இயக்குநர் திரு. ஒரு சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டு இப்போது மீண்டும் ‘மிஸ்டர் சந்திரமவுலி’ மூலம் களமிறங்கியிருக்கிறார்.

‘மவுன ராகம்’ படத்தில் ரேவதியை கலாய்க்க, அவருடைய அப்பாவை ஸ்டைலாக ‘மிஸ்டர் சந்திரமவுலி’ என்று கார்த்திக் அழைப்பது, தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் காட்சி. அவ்வளவு சீக்கிரமாக சந்திரமவுலியை நம் ரசிகர்கள் மறந்துவிடுவார்களா என்ன? சினிமாவில் மட்டுமின்றி நிஜத்திலும் பிளேபாய் இமேஜோடு கோலோச்சிய கார்த்திக், இந்தப் படத்தில் உணர்ச்சிபூர்வமான அப்பாவாக நடிக்கிறார். அவருடைய நிஜமகனே படத்திலும் மகனாக நடிப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பைத் தூண்டியிருக்கிறது. இயக்குநர் திருவைச் சந்தித்தோம்.

“அப்பா, மகன் கதைன்னதும் கார்த்திக், கவுதம் கார்த்திக்தான் நினைவுக்கு வந்தாங்களா?”

“ரொம்ப நாள் முன்னாடியே நானும் கவுதம் கார்த்திக்கும் சேர்ந்து படம் பண்றது பற்றிப் பேசிட்டோம். அதுக்குப் பிறகு ஒரு நாள் இந்தக் கதையை கவுதம்கிட்ட சொன்னேன்.  படத்துல அப்பா ரோலும் ரொம்ப வெயிட்டானது. அதாவது கவுதம் கேரக்டருக்கு இணையா இருக்கும். அதனால இந்த ரோலும் ஹீரோவா இருக்கிற ஒருத்தர் பண்ணினாத்தான் சரியா இருக்கும்னு நாங்க முடிவு பண்ணினோம். அதுல யாரை நடிக்க வைக்கலாம்னு யோசிச்சப்போ, கார்த்திக் சார் தான் பெர்ஃபெக்டா தெரிஞ்சாரு.”

“அப்பா, மகன் உறவை எந்தக் கோணத்துல சொல்லப் போறீங்க?”

“அப்பாவுக்கான ஒரு வாழ்க்கை, மகனுக்கான ஒரு வாழ்க்கை இந்த இரண்டையும் சேர்க்கிற முக்கிய புள்ளிதான் கதை. 80கள்ல வாழ்ந்த மாதிரியே இப்போவும் வாழ விரும்புற ஜாலியான பேர்வழி மிஸ்டர் சந்திரமவுலி. அதாவது, கார்த்திக் சார். பழைய கடிகாரம், பழைய போன், பழைய கார்னு எல்லாமே 80கள்ல பார்த்ததா அவர்கிட்ட இருக்கும்.

அப்போ எப்படி யங்கா இருந்தாரோ அதே யங் மனசோடுதான் இப்போவும் இருக்கிறார். அவருக்கு நேர் எதிர்மாறானவர் கவுதம். இன்றைய டெக்னாலஜி வேர்ல்டுல வாழுற பையன். படத்துல கார்த்திக் சார் பேங்க் ஊழியர். கவுதம் பாக்ஸர். இந்தப் படத்துக்காக பாங்காக் போயிட்டு முறைப்படி பாக்ஸிங் கத்துக்கிட்டு வந்தாரு. இத்தனைக்கும் இது பாக்ஸிங் பற்றிய படம் கிடையாது. பாக்ஸரோட வாழ்க்கையைச் சொல்ற கதையும் இல்லை. ஆனா, பாக்ஸிங் காட்சி ஒரு குறிப்பிட்ட இடத்துல வரும்.”

“படத்துக்கு ‘சந்திரமவுலி’ன்னு தலைப்பு வைக்கக் காரணம்?”

“படத்துக்கு முதல்ல வச்ச தலைப்பு வேற. இந்தப் படத்தோட நாட் தெரிஞ்ச டைரக்டர் சுசீந்திரன்தான் இந்தத் தலைப்பு நல்லா இருக்கும்னு சொன்னார். ‘மவுன ராகம்’ படத்துல வந்த மாதிரியான செம ரகளை பண்ற ஒரு கேரக்டர்லதான் இதுலேயும் கார்த்திக் சார் வர்றார். ஸோ, அவர் அந்தப் படத்துல யூஸ் பண்ணின அந்தப் பெயரை பட டைட்டிலா வெச்சது இப்போ ரொம்பவே பேசப்படுது.”

“வழக்கமா த்ரில்லர்தான் உங்க பாணி. அதுலேருந்து விலகி இருக்கீங்களே?”

“அப்படிச் சொல்ல முடியாது. ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ ரொமான்ஸ்தானே? ஆனா, அடுத்தடுத்து ‘சமர்’, ‘நான் சிகப்பு மனிதன்’ ரெண்டுமே த்ரில்லர்தான். அதையே தொடரணும்னு நினைக்கல. அதே சமயம் இந்தப் படத்தை நீங்க குறிப்பிட்ட ஒரு ஜானர்ல அடக்க முடியாது. இதுல எமோஷனலுக்கு முக்கியத்துவம் தந்தாலும் எல்லா விஷயமுமே படத்துல இருக்கும். த்ரில்லும் இதுல ஒரு பார்ட்டா இருக்கும். என்னோட படங்கள் எந்த ஜானர்ல இருந்தாலும் அது நூறு சதவீதம் பொழுதுபோக்கு படமாக இருக்கணும்னு நான் பார்ப்பேன். இதுலேயும் அதுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கேன்.”

“தெலுங்குல பார்த்த மாதிரி ரெஜினாவை இங்கேயும் பார்க்க ரசிகர்கள் ஏங்கிட்டு இருந்தாங்க. அந்த எதிர்பார்ப்பை நிறைவேத்தி இருக்கீங்க போல?”
“தாய்லாந்து தீவுல படமான பாடல் காட்சிகளோட போட்டோக்களை வச்சுத்தான் கேட்கிறீங்கன்னு தெரியும். மொபைல் ஆப் ஒண்ணு உருவாக்கி, அது சம்பந்தமாக ரிசர்ச் பண்ணிட்டு இருக்கிற போல்டான ஒரு பெண் கேரக்டர் ரெஜினாவுக்கு. குறிப்பிட்ட அந்தப் பாடலில், இந்த மாதிரி கவர்ச்சி தேவைப்பட்டுச்சு. அதை ரெஜினாகிட்ட சொன்னப்போ, முதல்ல தயங்கினாங்க.

இதை ஸ்கிரீன்ல பார்க்கும்போது சரியா வருமான்னு அவங்களுக்கு சந்தேகம். ஆனா, அந்த மாதிரி எதுவும் இருக்காதுன்னு உறுதி கொடுத்தேன். பிறகு அவங்களும் துணிஞ்சி டூ பீஸ்ல நடிச்சாங்க. அதை மானிட்டர்ல பார்த்த பிறகுதான் அவங்களுக்கு திருப்தி வந்துச்சு. எந்த இடத்துலேயும் வல்கரா அந்தக் காட்சிகள் இருக்காது. பரவாயில்ல. நான் ரொம்பவே பயந்தேன். ஆனா, ரொம்பவே டீஸன்ட்டா வந்திருக்குன்னு ரெஜினாவே சொன்னாங்க. சென்சார்ல கூட இந்தப் பாடல்ல ஒரு சின்ன கட் கூட கொடுக்கல.”

“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நேரத்துக்கு வர்றது, ஷாட் ரெடியானதும் முதல் ஆளா வந்து நிக்கிறது, கால்ஷீட் சொதப்பாதது... இதுல கார்த்திக் - கவுதம் ரெண்டு பேர்ல யார் பர்ஃபெக்ட்?”

“இந்த விஷயத்துல நான் கவுதமை விட்டுத்தர மாட்டேன். கார்த்திக் சார் பற்றி நிறைய சொல்வாங்க. ஆனா அது எதுவும் உண்மை கிடையாதுன்னு இந்தப் படத்துல அவர் உறுதிப்படுத்தினாரு. ஆனாலும் எனக்கு முழு ஷூட்டிங்லேயும் பக்காவா டைரக்டரோட ஆக்டர்னு ஃபிட் ஆனவர் கவுதம்னு சொல்லலாம். காரணம், 8 மணிக்கு ஷூட்டிங்னா 6 மணிக்கே வந்துடுவார்.

என்ன கவுதம் இவ்வளவு சீக்கிரமான்னு கேட்டா, இருக்கட்டும் பிரதர். இந்த டயலாக்கை மெமரில ஏத்திக்கிறேன், இந்த சீனுக்கு முன்கூட்டியே தயாராகுறேன்னு சொல்வார். ஏன் கவுதம், 8 மணி ஷூட்டிங்னா அட்லீஸ்ட் 7 மணிக்கு வரலாமேன்னு சொல்லுவேன். என்னையே தர்மசங்கடத்துல ஆக்குவாரு. ஆனா, அந்த ஈடுபாடுதான் படத்தை திட்டமிட்ட மாதிரி முடிக்க உதவியா இருந்துச்சு. அதே மாதிரி வரலட்சுமி, ரெஜினா எல்லோருமே நேரத்துக்கு ஏற்ப கரெக்டா ஸ்பாட்ல இருப்பாங்க. அவங்களோட ஒத்துழைப்பும் அதிகம்.”

“ஸ்பாட்ல கார்த்திக் - கவுதம் எப்படி இருப்பாங்க?”

“அப்பா - மகன் மாதிரிதான் இருப்பாங்க. தொழில்னு வந்துட்டா, நடிகர்கள் மாதிரி இருப்பாங்கன்னு எல்லாம் பொய் சொல்லமாட்டேன். ஸ்பாட்ல ஜாலியாக பேசிட்டு இருப்பாங்க. மத்தவங்ககூட சேர்ந்து ஜோக் அடிச்சிட்டு இருப்பாங்க. கேமரா ரெடின்னா அப்படியே சீரியஸ் ஆயிடுவாங்க. கார்த்திக் சாரோட சீன் வந்தா, அப்பாவைக் கை பிடிச்சி கொண்டு வந்து கவுதமே நிறுத்துவாரு. சீன் முடிஞ்சதும் அழைச்சிட்டு போயி உட்கார வைப்பாரு. அவருக்கு எந்த நேரத்துல என்ன தேவைன்னு தெரிஞ்சி வச்சிருக்கார். அதையெல்லாம் பார்த்து நான் ரொம்பவே ஆச்சரியப்பட்டேன், இந்தக் காலத்துல இப்படியொரு புள்ளையான்னு.

அதே மாதிரி கவுதமோட சீன் வந்தா, கேரவனுக்கு போகாம, அங்கேயே உட்கார்ந்து பையன் நடிக்கிறதை கார்த்திக் சார் பார்ப்பார். அதை ரசிப்பார். இது ஒரு பாக்கியம்னு அவர் சொல்வார். ஏன்னா, நான் நடிக்க வந்தப்போ, அப்பா முத்துராமன் உயிரோடு இல்லைன்னு சொல்லுவார். முத்துராமன் சாரைப் பற்றி அவர் பேசாத நாளே கிடையாதுன்னு சொல்லலாம். அந்த அளவுக்கு அவரைப் பற்றி நிறைய விஷயங்களைச் சொல்லிட்டு இருப்பார். இது அப்பா, மகன் கதைங்கிறதாலேயும் அவருக்கு அவரோட அப்பா அதிகமாக ஞாபகத்துக்கு வந்திருக்கலாம்னு நினைக்கிறேன்.”

“வரலட்சுமிக்கு என்ன ரோல்?”

“ரொம்பவே சர்ப்ரைஸ் கேரக்டர் அவருடையது. அதை இப்போ சொல்லிட முடியாது. படம் பார்த்துட்டு வெளியே வரும்போது அவரோட கேரக்டரைப்பற்றி கண்டிப்பா ஆடியன்ஸ் பேசுவாங்க. அதே மாதிரி வில்லன் கேரக்டர்ல மகேந்திரன் சார் வர்றார். அவரும் அசத்தியிருக்கார்.”

- ஜியா