பாட்டாலே புத்தி சொன்னார்!



பிலிமாயணம் 44

தமிழ் சினிமாவில் மின்னும் நட்சத்திரங்களைத்தான் நமக்கு அதிகம் தெரியும். அடுத்து இயக்குநர், இசையமைப்பாளர், கேமராமேன் என்றெல்லாம் கொஞ்சம் பேர் புகழ்பெற்று முகம் பார்த்தால் மக்கள் மத்தியில் அடையாளம் காணப்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள். எனினும், பாடலாசிரியர்கள் மக்கள் மத்தியில் பெரிய நட்சத்திரங்களாக உருவெடுப்பது என்பது கொஞ்சம் அரிதிலும் அரிதாகத்தான் நடக்கிறது.

ஆயிரக்கணக்கான பாடலாசிரியர்கள் தமிழ்த் திரைப்படங்களுக்கு பங்களித்திருக்கிறார்கள். நமக்கு எத்தனை பாடலாசிரியர்களின் முகம் தெரியும்?

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கண்ணதாசன் ஆகியோருக்கு முன்பு வரை பாடலாசியர்கள் சினிமாவில் கவனிக்கப்படாமலேதான் இருந்தார்கள். படித்த இலக்கிய வட்டத்துக்குள்தான் அவர்கள் அறியப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் காலத்துக்கு முந்தைய பாடலாசிரியர்கள் இப்போது கொண்டாடப்படுவதைப்போன்று அப்போது கொண்டாடப்படவில்லை என்பது உண்மை.

பாடலாசிரியர்களுக்கு முதன்முதலாக நட்சத்திர அந்தஸ்தை உண்டாக்கியவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். அவரது பாடல்களுக்கு படங்கள் காத்துக் கிடந்தன. கண்ணதாசன்தான் பாடல் வரிகளைப் பணமாக்கியவர். முதல் கமர்ஷியல் பாடலாசிரியர் என்று அவரைக் குறிப்பிடலாம். அதன் பிறகு வாலி, வைரமுத்து தொடங்கி இன்றைக்கு இருக்கிற மதன் கார்க்கி வரை பட்டியல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு வெற்றி பெற்ற ஹீரோவுக்குப் பின்னால் ஆயிரம் தோல்வி ஹீரோக்கள் இருக்கிறார்கள் என்பதைப் போல ஒரு வெற்றி பெற்ற பாடலாசிரியருக்குப் பின்னால் தோற்ற ஆயிரம் பாடலாசிரியர்கள் இருக்கிறார்கள். ஒரு பாடல், அல்லது ஒரு படத்தின் பாடலோடு விலகியவர்கள். கடைசி வரை போராடி, கவிதைப் புத்தங்கள் எழுதி சினிமாவைக் கடந்து போனவர்கள்.

ஒரு கட்டத்தில் சினிமாவை வெறுத்து அதைத் தாக்கி எழுதத் தொடங்கியவர்கள், புகழ்பெற்ற பாடலாசிரியர்களுக்கு உதவியாளராகப் போனவர்கள் என தோற்ற பாடலாசிரியர்களின் கிளைக்கதைகள் ஏராளமாக இருக்கின்றன.படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் ஒரு இடத்தில் அமர்ந்து கதையைப் பற்றி விவாதித்து பாடல்் எழுதி, வரியைப் பற்றி விவாதித்து மெட்டுபோட்டு, மீட்டருக்குள் அடங்காத வார்த்தைக்கு மாற்று வார்த்தை போட்டு ஒரு கூட்டுச் சமையல் போன்று பாடல் பிறந்த காலம் இப்போது இல்லை. ஆளுக்கு ஒரு திசையில் இருந்து கொண்டு இணையதளத்தின் மூலம் இப்போது பாடல்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

பாடலாசிரியரின் வரிகளை அவரின் அனுமதியின்றி இயக்குநரே மாற்றிக் கொள்வார். சில நேரம் இசையமைப்பாளரேகூட மாற்றிக் கொள்வார். அதற்காக பாடலாசிரியர் கோபம் கொள்ள மாட்டார். அவருக்குத் தேவை பணம், அது கிடைத்து விட்டால் பாடலையே மாற்றினாலும் கவலை இல்லை என்கிற நிலைதான் இப்போது. பிரம்மாண்ட ரிக்கார்டிங் ஸ்டூடியோக்கள் மறைந்து, வடபழனி ஓட்டல்களில் ஒரு டபுள் ரூமை புக் பண்ணி அதையே ரிக்கார்டிங் தியேட்டர்களாக பயன்படுத்துகிற நிலை இன்றைக்கு.....

பல இசையமைப்பாளர்களின் வீட்டு வாசலில் இப்போது வளர்ந்து வரும் பல பாடலாசிரியர்கள் வேலைக்காரர்கள் போல நின்று கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். காரணம் பாடல் வாய்ப்புகளுக்கு இப்போது திறமை இரண்டாம் பட்சம்தான். இசையமைப்பாளரை இம்ப்ரஸ் பண்ணத் தெரிந்திருக்க வேண்டும். இலக்கியத்துக்கும், பாடலுக்கும் தொடர்பே இல்லாத இயக்குனர்கள், அது அப்படி இருக்கக் கூடாது, இந்த வரி இப்படி இருக்க வேண்டும், இன்னும் கொஞ்சம் அழுத்தம் வேணும், புதிய வார்த்தைகளைப் போட்டு எழுதிட்டு வாங்க என்று சொல்வதெல்லாம் இப்போது சகஜம்.

ஒரு பாட்டுக்கு குறைந்த பட்சம் 20 பாட்டாவது எழுத வைக்கிறார்கள். போட்டிகள் நிறைந்த உலகத்தில் பாடலாசிரியர்கள் மட்டும் விதிவிலக்கல்ல.
ஒரு நேர்காணலுக்காக பூவை செங்குட்டுவனைச் சந்திக்க சென்றிருந்தேன்.

பழம்பெரும் பாடலாசியர் அவர். ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா... திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்’ என பக்திப் பாடல் தொடங்கி, ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை, இது ஊரறிந்த உண்மை’ என்று எம்.ஜி.ஆருக்கு ஹீரோயிஸ பாட்டெழுதி, ‘ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே...’ என காதல் ரசத்திலும் உருக ைவத்தவர்.

நல்ல பங்களா மாதிரி வீட்டில் வசிப்பார் என்று கருதித்தான் சென்றேன்.ஆனால் -தேனாம்பேட்டையில் ஒரு பழைய வீட்டின் மொட்டை மாடியில் ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழ் ஒரு குடிசையில்தான் இருந்தார். இந்த ஏழ்மை குறித்து தான் கவலைப்படவில்லை என்றும், எழுத்தாளனின் இன்னொரு பெயர் ஏழ்மைதான் என்றும் அந்த நேர்காணலில் குறிப்பிட்டார்.

அந்தப் பேட்டி வெளியான மறுநாள் கவிஞர் எனக்கு போன் பண்ணினார்.“தம்பி நீங்க எழுதியிருக்கிறதெல்லாம் சரிதான். ஆனால் மானமே போச்சுன்னு என் பிள்ளைங்க என்னைத் திட்டுறாங்க. ஏதாவது மறுப்பு போடமுடியுமா?” என்றார்.“அய்யா, நீங்க சொல்லாத ஒன்றை நான் எழுதியிருந்தால்தான் மறுப்பு போடுவார்கள். நீங்கள் சொன்னதைத்தான் எழுதியிருக்கிறேன். கொஞ்சம் காத்திருங்கள், ஏதாவது செய்ய முயற்சிக்கிறேன்” என்றேன்.

சில நாட்களுக்குப் பிறகு அவர் திருக்குறளின் 133 அதிகாரத்துக்கு, அதிகாரத்துக்கு ஒரு பாடல் வீதம் எழுதி அதற்கு 4 இசையமைப்பாளர்கள் இசையமைத்து ‘குறள் தரும் பொருள்’ என்ற தலைப்பில் ஒரு ஆல்பம் வெளியிட்டதை செய்தியாக வெளியிட்டோம். அந்தச் செய்தி அவர் வசதியாக இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

எம்.ஜி.ஆருக்குப் பிடித்த பாடலாசிரியர், தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவர் முத்துலிங்கம். இன்றைக்கும் சென்னை நகர டவுன் பஸ்களில் ஒரு பையைக் கக்கத்தில் வைத்துக் கொண்டு பயணித்துக் கொண்டிருக்கிறார். பாடலாசிரியர்கள் எப்போதுமே தனி ரகம்தான்.

(பிலிம் ஓட்டுவோம்)

பைம்பொழில் மீரான்