எவனும் புத்தனில்லை இயக்குநர் விஜயசேகரன்



டைட்டில்ஸ் டாக் 70

முன்னோர்கள் எப்படி இருந்தார்கள் என்று சற்று யோசித்தோமானால் போதும். இன்று எவனும் புத்தனில்லை என்று சொல்வதற்கான காரணம் புரியும். அந்தக்கால வீடுகளின் அமைப்பு எப்படி இருந்தது. வெளியிலிருந்து வரும் காற்று, உள்ளே வந்து உலவிவிட்டு செல்ல அனுமதித்தார்கள் முன்னோர்கள். இப்போதைய மனிதர்கள் சுவாசித்த காற்றையே மீண்டும் மீண்டும் சுவாசித்து விதவிதமான நோய்களுக்கு உள்ளாகிறார்கள்.

அப்போது மனிதநேயம் ஒவ்வொரு மனிதனிடத்திலும் இருந்தது. வீடுகளுக்கு  திண்ணை வைத்துக்கட்டினார்கள். ஏன்? வழிப்போக்கன் இளைப்பாறட்டும் என்ற நல்லெண்ணம். அன்று ஒவ்வொரு வீட்டிலும் புத்தர்கள் இருந்தார்கள். இளைப்பாற இடம் கொடுத்தான்; களைப்பாற நீர் கொடுத்தான்; பசியாற உணவு கொடுத்தான்.

ஒருவரையொருவர் நம்பினார்கள். வாக்கில் சுத்தம் இருந்தது. செயலில் நேர்மை இருந்தது. பழகுவதில் கண்ணியம் இருந்தது. அதுபோன்ற நல்லொழுக்கங்களால் ஒவ்வொருவனுக்குள்ளும் குட்டி புத்தன் இருந்தான். ஆனால் -இன்று, யாருக்கும் யார்மீதும் நம்பிக்கை இல்லை. கணவனுக்கு மனைவி மீது சந்தேகம்.

மனைவிக்கு கணவன் மீது சந்தேகம். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்பவர்கள் கூட தங்கள் செல்போனை மனைவி பார்க்கவோ, கணவன் பார்க்கவோ அனுமதிப்பதில்லை. குடும்பமோ, ஆபீஸோ சந்தேகங்களுடன்தான் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்கிறோம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டும், இருபதாம் நூற்றாண்டும் மனித இனத்தின் வளர்ச்சியின் உச்சி என்றால், இதே நூற்றாண்டுகள்தான் மனித இனத்திற்கும் மனிதநேய வீழ்ச்சிக்கும் முதல் விதையைத் தூவியது. அதன் தாக்கமே ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு குள்ளநரித்தனம் முளைக்க ஆரம்பித்துவிட்டது.

சரியும் தவறும் நாம் பார்க்கும் பார்வையில்தான் உள்ளது என்றால், உங்களது பார்வைக்கு வைக்கப்படும் அனைத்தும் தவறாகவே இருக்கும் பட்சத்தில் நீங்கள் சரியை எப்படி தரம் பிரிப்பீர்கள்.

 பச்சைப் பிள்ளைகளுக்கு பால் இலவசம் என்ற மனித நேயம் எங்கே? கொழந்தைக்கு பால் வேணும்னா தனி சார்ஜ் ஆகும்மா. பரவால்லியா? என கேட்கும் கார்ப்ரேட் நேயம் எங்கே?

எந்த வியாபாரியாவது தான் விற்கும் பொருட்களில் கலப்படம் எதுவும் இல்லை என்று தனது மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் சொல்லமுடியுமா? எந்த ஹோட்டல்காரனாவது தரமான உணவைதான் நாங்கள் வழங்குகிறோம் என்று சொல்லமுடியுமா? தர சோதனை செய்யும் அதிகாரிகள் உண்மையிலேயே தர சோதனை செய்யப்பட்ட பொருட்களை மட்டும் தான் மக்கள் உபயோகத்திற்கு அனுமதிக்கிறார்களா? மக்களில் ஒருவராக யாராவது குரல் கொடுத்தால் பதில் சொல்லும் பொறுப்பாளி யாரென்றே தெரிவது இல்லை.

 ஜனநாயகம் கிடைத்துவிட்டால் போதும். அனைத்தையும் சாதித்துவிடலாம் என்றோம். நம்மால் 500க்கும் 1000த்திற்கும் நமது ஓட்டுக்களை மட்டுமே விற்க முடிந்தது. எல்லோருக்குள்ளும் இருந்த புத்தன் இறந்துவிட்டான்.கலாச்சாரம், பண்பாடு என்னவென்றே இன்னும் நமக்குத் தெரிந்தபாடில்லை. பிள்ளைகளுக்கு பெரியோரை மதிக்கக் கற்றுத்தரும் பண்பாடு சொல்லித் தரப்படுவதில்லை. காரணம், பெற்றோர்களே யாரையும் மதித்துப் பழகுவதில்லை. எங்கே நடந்தது இந்த முரண்பாட்டுத்தவறு. காகிதங்களை பணம் என்று நம்ப வைக்கப்பட்டோம், அன்றே ஒவ்வொருவருக்குள்ளும் நம்பிக்கையின்மை விதைக்கப்பட்டது. அன்று முதல் புத்தன் பித்தம் பிடித்த பைத்தியக்காரனானான்.   

இன்றைய தொலைத்தொடர்புப் புரட்சியின் விளைவு அனைவரது கைகளிலும் ஸ்மார்ட் ஃபோன். உள்ளங்கையில் வைத்து உலகத்தின் ரகசியங்களைப் பரிமாறிக்கொள்ளும் முறை. ஆண் பெண் அந்தரங்கம் இங்கே அந்தரத்தில் தொங்கவிடப்படுகிறது. புத்தன் இங்கே கண்களை மூடிக்கொள்கிறான். சமயங்களில் யாருக்கும் தெரியாமல் அதை ஒற்றைக் கண்ணில் ரசிக்கவும் ஆரம்பித்துவிட்டான்.

ஆக்கபூர்வமான செயலுக்கான நோக்கம்தான் இத்தகைய படைப்புகள் என்றாலும் ஆக்கபூர்வம் என்பது என்னவென்றே தெரியாததால் வந்த வினையே இந்த முரண்பாடு. அரசாங்க அனுமதியோடு வரும் விளம்பரங்களே விபரம் அறியாதவர்களையும் இந்த நவீன யுக வாழ்க்கைக்கு அடிமைப்படுத்துகிறது. மேலும் மேலும் ஒருவனது மனதுக்குள் ஒவ்வாமை திணிக்கப்படும் போது அவனிடமிருந்து அதுவே மற்றவர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. செல்
ஃபோனால் ஏற்படும் விபரீதத்தைப் பார்த்து புத்தன் மௌனம் சாதிக்கிறான், அங்கே அவனது சுயம் வியாபாரம் ஆகிக்கொண்டிருக்கிறது என்று தெரியாமல்.

 ஒரு வக்கீல், கோர்ட்டுக்கு செல்வதற்கு முன் தெய்வத்திடம் தொடர்ந்து தனக்கு நிறைய வழக்குகளைத் தருமாறு கேட்கிறார். கார், வீடு, ஸ்கூல் பீஸ் என தனது தேவையை பட்டியல் போடுகிறார். மறைமுகமாகக் கடவுளிடம் சமுதாயத்தில் நிறைய குற்றங்கள் நடக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் அந்த வேண்டுதலுடைய நோக்கம்.   

ஒரு டாக்டர் மருத்துவமனைக்கு செல்லும்போது தெய்வத்திடம், ‘இன்னிக்கி நெறைய நோயாளிகள் கிளினிக்கிற்கு வரணும்’ என்று கேட்கிறார். இதன் நோக்கம், மக்களிடையே நிறைய நோய்கள் பெருக வேண்டும் என்பதே, அனைவரும் நோயாளிகள் ஆகவேண்டுமென்பதே. இப்படி ஒவ்வொரு துறையினரும் தனக்கு சாதகமாக கேட்கப்படும் கோரிக்கையே சமுதாயத்திடம் திணிக்கப்படுகிறது.

இயல்பாகவே இங்கே குற்றங்களும் குற்றவாளிகளும் உருவாவதில்லை; உருவாக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை. இங்கே புத்தனை நாம் பாடையிலே கிடத்திவிட்டோம். ஒரு குற்றம் உருவாகாமல் தடுப்பது காவல்துறையின் வேலை என்றில்லாமல், ஒருவனைக் குற்றவாளி ஆக்காமல் தடுக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு குடும்பத்துக்கும் இருக்கிறது. அப்படி நல்வழியில் வளரும் பிள்ளைகள் குற்றம் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போகும். காவல் துறையும் உங்கள் நண்பனாக நட்பு பேசும்.

ஆசையை வெளியேற்ற முடியவில்லை; தேவையற்ற தேவைகளை வெளியேற்ற முடியவில்லை. பிறக்காத ஒருவனுக்காக பொருள் சேர்க்கும் எண்ணம் குறையவில்லை. பேராசையும் சுயநலமும் மனித இனத்தை மொத்தமாக ஆட்கொண்ட பிறகு தனக்கான இடம் இல்லாமல் புத்தன் மொத்தமாக வெளியேறிவிட்டான். அதனால்தான் சொல்கிறேன் இங்கு எவனும் புத்தனில்லை. நான் இயக்கியுள்ள ‘எவனும் புத்தனில்லை’ என்ற படம் பேசும் உண்மை எல்லோருக்குள்ளும் மீண்டும் புத்தனைக் கொண்டுவரும் முயற்சியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

தொகுப்பு: சுரேஷ்ராஜா

(தொடரும்)