பள்ளி பருவத்திலே இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர்



டைட்டில்ஸ் டாக் 69

பள்ளிப் பருவமல்ல; பவழப் பருவம். துள்ளித் திரிந்த அந்தக் காலங்கள் மீண்டும் வராதுதான். ஆனாலும், எத்தனை யுகங்கள் கடந்தாலும் நம் மனசு வகுப்பறையிலேயே வாழுகிறது. மீண்டும் அந்தக் காலம் வராதா என்று கிடந்து தவிக்கிறது.என் வாழ்வில் அதிக மகிழ்ச்சியை நான் அனுபவித்த காலமென்றால் அது பள்ளிக் காலமாகத்தான் இருக்கும். எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் அப்படித்தானே?

இப்போதைய குழந்தைகள் ஸ்கூல் பஸ், ஷேர் ஆட்டோ என்று நெரிசலில் சாண்ட்விச்சாகி பள்ளிக்குப் போவதைக் காணும்போது வேதனையாக இருக்கிறது. நல்லவேளையாக அந்தக் காலத்தில் எங்களுக்கெல்லாம் நடைராஜா சர்வீஸ் இருந்தது. அதாவது கிலோ மீட்டர் கணக்காக நண்பர்களோடு அரட்டை அடித்தபடியே சேமியா ஐஸை உறிஞ்சிக்கொண்டு, புத்தகப்பையைச் சுமந்துகொண்டு பயணிப்போம். பின்னர், சைக்கிள் கிடைத்து என்னை நானே ஹீரோவாக நினைத்து மகிழ முடிந்தது.

பள்ளியில் சேர்க்கும்போது தலையைச் சுற்றிக் காதைத் தொட்டால் போதும். அட்மிஷன் கன்ஃபார்ம். டொனேஷன், பெற்றோர் பட்டதாரியா இல்லையா, என்ட்ரன்ஸ் டெஸ்ட் என்றெல்லாம் இப்போது செய்யும் அலப்பறைகளைப் பார்க்கும்போது பகீரென்கிறது. எனக்கு நுழைவுத்தேர்வே தலையைச் சுற்றிக் காதைத் தொட்டதுதான்.

பச்சைக் கம்பளம் விரித்தது போல பரந்திருக்கும் தஞ்சை மாவட்டத்துக்காரன் நான். அங்கிருக்கும் ஆம்பலாம்பட்டு அரசு ஆரம்பப் பள்ளியில்தான் வாழ்க்கை ஆரம்பித்தது. இயக்குநர் களஞ்சியம் அவர்கள் எனக்கு பள்ளியில் சீனியர். ‘களவாணி’ சற்குணம் என்னோட ஜூனியர்.

எங்களுடைய தலைமையாசிரியர் சாரங்கன் வாத்தியார். ராணுவ வீரர் மாதிரி கம்பீரமாக இருப்பார். கண்டிப்பும் அப்படியே. எங்களுக்கு என்ன கண்டிப்போ, அதேதான் அவரது மகனுக்கும். ஆனாலும், சுதந்திரம் தரவேண்டிய விஷயங்களில் தாராளமாக நடந்து கொள்வார்.

அன்பும் அக்கறையுமான அவருடைய வழிகாட்டுதலே எங்களையெல்லாம் படிப்பில் அக்கறை கொள்ள வைத்தது. ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய ஆசிரியர்களுக்கு வேண்டுமானால், தங்களுடைய மாணவர்களின் முகம் மறக்கலாம். ஆனால், விருப்பமான ஆசிரியர் எவரது முகத்தையும் ஒரு மாணவன் தன் வாழ்நாள் முழுக்க மறப்பதே இல்லை. எங்க சாரங்கன் வாத்தியாரை இன்ஸ்பிரேஷனாக வைத்துத்தான் ‘பள்ளிப் பருவத்திலே’ என்கிற படத்தையே இயக்கினேன்.

பள்ளிப் பருவத்திலேயே எனக்கு சினிமா மீது ஆர்வம் உண்டு. ரேடியோ, வார இதழ்களுக்கு கதை, கவிதை எழுதி அனுப்பினேன். பள்ளியில் பாடம் நடந்துகொண்டிருந்தபோதே கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பேன். கை பாட்டுக்கும் கவிதையோ, கதையோ எழுதிக் கொண்டிருக்கும். வகுப்பறையில் இருந்ததைவிட அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்து நான் எழுதிக் கொண்டிருந்த நேரங்களே அதிகம். நான் ஏதோ பாடம்தான் எழுதுவதாக நினைத்து ஆசிரியர்களும் கண்டுகொள்ளமாட்டார்கள்.

எண்பதுகளில் ஒரு பெரிய புயல் வந்தது. அப்போது எங்கள் ஊரில் இருந்த மிகப்பெரிய மரம் உருக்குலைந்தது. அந்த மரம் என் பாட்டன் காலத்திலிருந்து எங்களுக்கு நிழல் தந்து வந்தது. நான் எப்போதும் அந்த மரத்தடியில்தான் இருப்பேன். கதை எழுதலாம் என்று தோன்றியதுமே, என் கால்கள் அங்கேதான் அழைத்துச் செல்லும். சிதைந்துபோன அந்த மரத்தின் காய்ந்துபோன கிளைகளில் ஏறி அமர்ந்து, கதை யோசிப்பேன்.

என்னை ஊர் முழுக்க தேடும். என்னுடைய அம்மா கடைசியாக அங்கே வந்துதான் கண்டுபிடித்து செல்லமாக நாலு போடு போட்டு இழுத்துச் செல்வார்.எட்டாவது படித்தபோது வீட்டுக்குத் தெரியாமல் எங்கள் ஊரில் இருந்த ஒரு டிராமா குழுவில் உதவி இயக்குநராகச் சேர்ந்து விட்டேன். விடிய விடிய டிராமா ரிகர்ஸல் நடக்கும்.  

ஒரு முறை ‘இது நம்ம ஆளு’ படத்துல வரும் ‘அம்மாடி இதுதான் காதலா’ என்ற பாடலை தெரு நாடகத்தில் நடித்துக் காண்பித்தோம். அதில் எனக்கு செட் பிராப்பர்ட்டி பார்த்துக் கொள்ளும் வேலை ஒதுக்கப்பட்டது.  ஒரு தென்னை மட்டையை நான் ஆட்ட வேண்டும். ஸ்டேஜில் என் முகம் தெரிய வேண்டும் என்று என் முகத்தை கொஞ்சம் கொஞ்சமாகக் காண்பிக்க ஆரம்பித்தேன். உடனே டைரக்டர் தலையில் ஒரு கொட்டு கொட்டி ‘ஒழுங்கா மட்டையை மட்டும் ஆட்டு’ என்று சொன்னார். அந்த கொட்டெல்லாம் சேர்த்துதான் என்னை பிற்காலத்தில் இயக்குநராக மாற்றியது.

பள்ளிப் பருவத்தில் குறும்புத்தனத்துக்கு பஞ்சமிருக்காது. வீட்டில் அடிக்கடி பஞ்சாயத்து நடக்கும். சினிமா, ஃப்ரெண்ட்ஸ் என்று இருந்ததால் படிப்புல கவனம் சிதறியது. பத்தாம் வகுப்புல பெயிலானவுடன் வீட்டில் ஒரு மாடு வாங்கி என் கையில் கொடுத்துட்டாங்க. மாடு மாய்க்கும் வேலையில் என் மனசு நிலைக்கலை.  சினிமா ஆசையால் தில்லுமுல்லு பண்ண ஆரம்பித்தேன். சொந்தக்காரப் பையனிடம் காசு கொடுத்து, அவனை பினாமியாக மாடு மேய்க்க அனுப்பிவிட்டு நான் கதை எழதுவேன்.

அந்த மாடு ஒருமுறை இயக்குநர் சற்குணம் (எங்கள் குடும்பமும் சற்குணம் குடும்பமும் பக்கத்து பக்கத்து தெருவில் இருந்தது) வீட்டு காட்டில் போய் மேய்ந்து விட்டது. அதைத் தேடிப் பிடித்து கொட்டகையில் அடைப்பதற்குள் தாவூ தீர்ந்துவிட்டது. இதுமாதிரி அடிக்கடி தகராறு வருவதால், என்னுடைய பித்தலாட்டத்தை வீட்டில் கண்டு பிடித்து விட்டார்கள். ‘மாடு மேய்க்கவும் நீ லாயக்கில்லை’ என்று என் போக்கிற்கே தண்ணீர் தெளித்து விட்டுவிட்டார்கள்.

பத்தாம் வகுப்புடன் என்னுடைய பள்ளி வாசம் முடிந்துவிட்டது. அதன்பிறகு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் முதுகலை சேர்ந்து குடும்ப மானத்தைக் காப்பாற்றினேன்.  பள்ளிப் பருவத்தில் நல்ல ஆசான்கள், நல்ல குடும்பம் கிடைத்தும் என் எண்ணங்கள் சினிமாவை நோக்கி மட்டுமே இருந்தது.

எப்படியாவது சென்னைக்குப் போய் சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ்.ரவிக்குமார் போன்ற பெரிய இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்துவிட வேண்டும் என்று ஆசை இருந்தது.  எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களிடம் உதவியாளராகச் சேர முடியவில்லை. முன்வைத்த காலை பின் வைக்காததால் ஒரு கட்டத்தில் அருண் விஜய் நடித்த ‘வேதா’ படத்தை தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பள்ளி நாட்களில் எனக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். எங்கு சென்றாலும் ஒருவர் தோள் மீது ஒருவர் கைபோட்டுக் கொண்டு ஒன்றாக நடப்போம், இன்று தோளில் கைபோட்டு நடக்க நண்பர்கள் அருகில் இல்லை. வேலை, பிசினஸ் காரணமாக பிரிந்து இருக்கிறோம். அந்த இழப்பு ஏக்கமாக இருந்து கொண்டேயிருக்கிறது. ஒருவேளை அதுதான் பள்ளி நினைவுகளின் மாறாத வலி போலும்.

எனக்கு மட்டுமில்ல, ஒவ்வொருத்தருக்கும் பள்ளிப் பருவ நினைவுகள் பசுமையானதாக இருக்கும் என்று நம்புகிறேன். ஒரு இயக்குநராக என்னுடைய கற்பனைச் சுரங்கம் பள்ளிப் பருவத்தில்தான் ஆரம்பித்தது. அதற்கு முடிவு இல்லை.

தொகுப்பு: சுரேஷ்ராஜா

(தொடரும்)