ஆண்டனிபயம்தான் மையம்!

போலீஸ் அதிகாரியான நிஷாந்தும், விஷாலியும் காதலிக்கிறார்கள். நிஷாந்தின் அம்மா ரேகா, காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் பதிவுத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள். நிஷாந்தின் அப்பா லால் இந்தத் திருமணத்தை செய்துவைக்க முடிவெடுக்கிறார்.

மணப்பெண்ணான விஷாலி பதிவுத் திருமண அலுவலகத்தில் காத்திருக்க, மணமகன் நிஷாந்த் வரவில்லை. அவர் என்ன ஆனார் என்று அப்பா லால் தேட ஆரம்பிக்கிறார். நிஷாந்துக்கு என்ன ஆனது, காதலியைக் கைப்பிடித்தாரா என்பதே மீதிக் கதை.

ஹீரோ நிஷாந்த், ஹீரோயின் விஷாலி இருவரும் பாத்திரத்தை உணர்ந்து நிறைவாக செய்திருக்கிறார்கள். மகனுக்கு என்ன ஆனதோ என்று பரிதவிக்கும் காட்சிகளில் லால், பிரமாதப்படுத்தியிருக்கிறார். ரேகாவும் தன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா இசையில் குட்டி குட்டியாக வரும் பாடல்கள் இதமாக உள்ளன. பின்னணி இசையில் கவனம் ஈர்க்கிறார். பாலாஜியின் ஒளிப்பதிவு சிறப்பு. ஓரிடத்துக்குள் அடைபட்டிருக்கும்போது வரும் பயத்துக்குப் பெயர் கிளாஸ்ட்ரோஃபோபியா. அதை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் குட்டி குமார்.  மண்ணுக்குள் புதைந்திருக்கும் நிஷாந்த், தப்பிக்க எடுக்கும் முயற்சிகளில் இன்னும் பரபரப்பு காட்டியிருக்கலாம். துணிச்சல் முயற்சி என்ற வகையில் ஆண்டனி கவனம் ஈர்க்கும் படம்.