சினிமாவுக்காக பிரம்மச்சாரியாகவே வாழும் இயக்குநர்!முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார் காளி ரங்கசாமி. ‘ஒரு குப்பைக் கதை’, ஒட்டுமொத்த விமர்சகர்களின் பாராட்டுகளையும் அள்ளியிருக்கிறது. டான்ஸ் மாஸ்டர் தினேஷ் ஹீரோவாக அறிமுகமான இந்தப் படத்தில், ‘வழக்கு எண்’ மனீஷா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இயக்குநர் அஸ்லாம் தயாரித்த இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரிலீஸ் செய்தது.பாராட்டு மழையில் குளித்துக் கொண்டிருந்த காளிரங்கசாமிக்கு தலை துவட்ட டவல் கொடுத்து ஓரம் கட்டினோம்.

“சினிமாவுக்கு எப்படி வந்தீங்க?”

“நான் பிறந்தது இலங்கையில் கண்டியில். என்னோட முன்னோர் தோட்ட வேலைக்காக இலங்கை சென்றவர்கள். நான் பிறந்தவுடன், எங்க குடும்பம் தமிழ்நாட்டுக்கு திரும்ப வந்துடிச்சி. சத்தியமங்கலம் பக்கத்தில் வீரப்பன் ஊர்தான் என் சொந்த ஊர். அப்பாவுக்கு வன இலாக்காவில் வேலை.

கட்டுப்பாட்டுக்கு பேர் போன அமராவதி சைனிக் ஸ்கூலில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்தேன். கோவையில் பி.எஸ்ஸி பிசிக்ஸ் ஜாயின் பண்ணினேன். சினிமா மோகத்துல பாதியிலேயே மூட்டைகட்டிவிட்டு சினிமாவில் சேரலாம் என்று சென்னைக்கு ரயில் ஏறினேன்.

அடிப்படையில் நான் கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ளவன். சினிமா ஆசையில் சென்னைக்கு  ரயில் ஏறத்தெரிந்த எனக்கு வாய்ப்பு கேட்கத் தெரியலை. அப்படி இப்படின்னு போராடி இயக்குனர் எம்.ஆர்.பாரதியிடம் இணைந்தேன். அதன் பிறகு சேரன் சார் ஆபீஸ்ல மூணு வருஷம் வேலை பார்த்தேன். எழில் சாரிடம் ‘தீபாவளி’ படத்தில் வேலை பார்த்தேன். அஸ்லாம் இயக்கிய ‘பாகன்’ படத்தில் அசோசியேட்டாக வேலை பார்த்தேன். இப்படியாகத்தான் சினிமாவில் அனுபவம் பெற்றேன்.”

“முதல் வாய்ப்பு எப்படி கிடைச்சது?”

“இயக்குநர் அஸ்லாமும் நானும் நெருங்கிய நண்பர்கள். என்னையும் இயக்குநர் ஆக்கி அழகு பார்க்க விரும்பினார். எனக்காக பல தயாரிப்பாளர்களிடம் அவர் பேசினார். ஒரு கட்டத்தில் எனக்காக அவரே தயாரிப்பாளர் ஆகிட்டார். அதுக்காக நிதி ஆதாரங்களைத் திரட்ட ஆரம்பித்தார். அவரோட பங்காக ஒரு கணிசமான தொகை யை ரெடி செய்தார்.

அந்த சமயத்தில் என்னோட பள்ளி நண்பனான ராமதாஸை யதேச்சையா சந்திச்சேன். என்னோட சினிமா முயற்சிகள் எந்தளவில் இருக்குன்னு விசாரிச்சான். நான் சூழ்நிலையை சொன்னவுடனே, அவனும் ஒரு தொகை கொடுத்து தயாரிப்பாளர்களில் ஒருவன் ஆனான். இதேபோல அரவிந்தன் என்கிற நண்பரும் இணைந்தார். இந்த மூன்று பேரும் இணைந்ததால்தான் ‘ஒரு குப்பைக்கதை’ சாத்தியமாச்சி.”

“உதயநிதி ஸ்டாலின்?”

“அவருக்கு நான் வாழ்நாள் முழுக்க நன்றிக்கடன் பட்டிருக்கேன். படத்தோட வேலைகளை முடிச்சிட்டு ரிலீஸ் பண்ண ஏற்பாடுகள் செய்தோம். நாங்க நினைச்ச மாதிரி அந்த வேலை சுலபமா இல்லை. ரிலீஸே ஆகாதோன்னு தலையிலே கைவைச்சி உட்கார்ந்துட்டேன். என்னை நம்பி மூணு பேர், கிட்டத்தட்ட அவங்க தலையையே அடமானம் வெச்சிருக்காங்க. எப்படி கரை சேரப்போகிறோமோன்னு தவிப்புலே இருந்தப்போ, கலங்கரை விளக்கமாக உதயநிதி சார் வழிகாட்டினார். அவரோட ரெட் ஜெயண்ட் நிறுவனம், எங்க படத்தை வாங்கினதுக்குப் பிறகுதான் நான் இயக்குநர் ஆயிட்டேன் என்கிற நம்பிக்கை எனக்கே வந்தது. படத்தை மிகச்சிறப்பாக ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தார்.”

“முதல் படமே ஏன் பரிசோதனை முயற்சி?”

“எனக்கும் ஷங்கர் சார் மாதிரி பிரம்மாண்டமான கமர்ஷியல் எடுக்கத்தான் ஆசை. முதல் படத்திலேயே அவ்வளவு முதலீட்டை என்னை நம்பி யார் போடுவாங்க. அதுக்காக நான் தயார் பண்ணி வெச்சிருந்த ஸ்கிரிப்ட்டை தூக்கி வருத்தத்தோடு பரணில் போட்டேன். அப்போதான் என்னோட ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிளில் நடந்த ஓர் சம்பவத்தை கேள்விப்பட்டேன். திடீர்னு ஒருத்தரோட மனைவி குழந்தையைத் தூக்கிட்டு வேற ஒருத்தரோட ஓடிட்டாங்க.

அந்தச் சம்பவம் மனசை ரொம்ப பாதிச்சது. இதுமாதிரி தினம் தினம் செய்தித்தாள்களில் எத்தனையோ சம்பவங்கள் படிக்கிறோம். அதுவே நமக்குத் தெரிஞ்சவங்களுக்கு நடக்குதுன்னா ரொம்பவும் மனசு கஷ்டப்படுது. அந்தச் சம்பவத்தை சினிமாவுக்கு கொண்டுவர நினைச்சேன். இதுவரை சொல்லப்படாத கதை என்பதால் எனக்கு நல்ல கவனம் கிடைச்சிருக்கு.”

“ஹீரோவா டான்ஸ் மாஸ்டர்?”

“அப்பாவியான கணவன் பாத்திரத்துக்கு ஏற்ற முகத்தை தேடிக்கிட்டிருந்தேன். எனக்கு டான்ஸ் மாஸ்டர் யாரையாவது நடிக்க வைக்கணும்னு எப்படியோ தோணுச்சி. முதல்லே தர் மாஸ்டரை யோசிச்சேன். அவரு கொஞ்சம் மாடர்ன் லுக்கில் இருந்தார். வேறு சில மாஸ்டர்களை யோசிச்சப்போ, அவங்களெல்லாம் ஏற்கனவே ஹீரோ ஆயிட்டாங்க. தினேஷ் மாஸ்டர்தான் சரிப்பட்டு வந்தார். அவரைப் பார்த்ததுமே இவர்தான் என் படத்தோட ஹீரோன்னு முடிவெடுத்துட்டேன். என்னோட முடிவு சரிதான்னு அவர் நடிப்புலே நிரூபிச்சிருக்காரு.

தினேஷ் மாஸ்டர் கொஞ்சம் உயரம் கம்மி. அவரோட உயரத்துக்கு ஏற்ற ஹீரோயினைத் தேடுவதற்கு சிரமமாயிடிச்சி. அதே நேரம் மனப்பொருத்தம் இல்லாம வாழும் கணவன் - மனைவியின் கதைக்கு உயரப் பொருத்தம் இல்லாத ஜோடி இருந்தா, அதுவும் லாஜிக்கா அமையும்னு அந்தக் கோணத்தில் ஹீரோயினைத் தேடினோம்.

தினேஷ் மாஸ்டர் ஹீரோன்னதுமே சில ஹீரோயின்கள் ஆர்வமா நடிக்க முன்வந்தாங்க. ஆனா, கேரக்டரை சொன்னதுமே தயங்கினாங்க. கதையைக் கேட்டுட்டு உடனே சம்மதம் சொன்னவர் ‘வழக்கு எண்’ மனீஷாதான். இதுவரை மாடர்ன் கேரக்டர்களில் வலம் வந்த அவர், இந்தக் கேரக்டருக்காக கூவம் ஆற்றோரம் வாழ்ந்தே காட்டினார்.”

“அடுத்த படமும் இதேபோல வித்தியாசமா இருக்குமா?”

“எனக்கு சின்ன வயசுலே இருந்தே கமர்ஷியல் படங்களைவிட, ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துற சீரியஸ்ரக படங்கள்தான் பிடிக்கும். ‘முள்ளும் மலரும்’, ‘உதிரிப் பூக்கள்’ மாதிரி படங்களை இன்னும் ரசிகர்கள் நினைவில் வெச்சிருக்காங்க. அந்தக் காலத்தில் இந்தப் படங்களைவிட மகத்தான வெற்றி பெற்ற கமர்ஷியல் படங்களோட டைட்டிலைக் கூட இப்போ மறந்துட்டாங்க. எனினும் எனக்குன்னு ஒரு பாணியெல்லாம் வெச்சுக்க விரும்பலை. ஆக்‌ஷன், லவ், த்ரில்லர்னு பல ஜானர்களில் படம் இயக்க விரும்புறேன். இப்பவே எட்டு கதை ரெடி பண்ணி வெச்சிருக்கேன்.”

“யாரெல்லாம் பாராட்டினாங்க?”

“படம் பார்த்த எல்லாருமேதான் பாராட்டுறாங்க. எனக்கு முதன்முதலா உதயநிதி சாரோட பாராட்டுதான் காம்ப்ளான் குடிச்ச தெம்பை கொடுத்தது. அப்புறம் இயக்குநர் இமயம் பாரதிராஜா, அமீர், கரு.பழனியப்பன் மாதிரி இயக்கத்தில் முத்திரை பதிச்ச இயக்குநர்களும் தோளைத் தட்டிக் கொடுத்தாங்க. என்னோட குருநாதர் எழில் சார் என்ன சொல்லப் போறாரோன்னு பதட்டமா இருந்தேன். ஒரே வார்த்தையில், ‘ஜெயிச்சிட்டே’ன்னு சொன்னாரு.”

“சினிமாவுக்காக கல்யாணமே பண்ணிக்காம இருக்கீங்களாமே?”

“படம் இயக்கிய பிறகுதான் திருமணம் என்று சபதமே எடுத்திருந்தேன். ஏன்னா, ஒரு உதவி இயக்குநர் மூணு வேளை திருப்தியா சாப்பிடறதுக்கே வழியில்லாத பொருளாதார நிலைமைதான் நம்ம இண்டஸ்ட்ரியில் இருக்கு. அதுலே குடும்பம்னு ஆயிட்டு, லட்சியத்துக்காக குடும்பத்தைப் பட்டினி போடுறது எல்லாம் பாவமில்லையா?

இப்போ இயக்குநர் ஆயிட்டேன். ஆனா, என்னோட வயசும் நாற்பத்தியெட்டு ஆயிடிச்சி. இன்னும்கூட பொருளாதார ரீதியா நான் வளம் அடையலை. ஆனா, என்னோட உடன்பிறப்புகள் தீவிரமா பெண் தேடிக்கிட்டிருக்காங்க. என்ன நடக்குதோ, நடக்கட்டும். எல்லாம் அவன் செயல்.”

- சுரேஷ்ராஜா