ரேஷ்மா என்ன ஆனார்?கிறங்கடிக்கும் கண்கள்.ரோஸ் நிறம். சுண்டினால் சிவப்பார். ஒல்லியான உடல்வாகு அந்த சின்னப் பெண்ணை நெடுநெடுவெனக் காட்டியது. பதினேழு வயது. “ஹேய், பார்க்குறதுக்கு மாலாஸ்ரீ மாதிரி இருக்கேடி” என்று தோழிகள் ஏற்றிவிட்டதால் எந்நேரமும் சினிமா கனவு.பெங்களூர் கல்யாண் நகரைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் உண்மைப் பெயரே அதுதானா என்று இன்றுவரை யாருக்கும் தெரியாது. ஆனால், ‘ரேஷ்மா’ பிரபலமானவர்தான். ஒருவேளை அவரை உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.

ஏனெனில் அவர் ‘நடித்த’ நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் ஒன்றுகூட ‘யூ’ சான்றிதழ் பெற்றதில்லை. அதனால் அவரை நீங்கள் டிவியிலும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் சென்னைக்கு வந்திருந்தால், நகரெங்கும் ஒட்டப்படும் போஸ்டர்களில் ஒருவேளை இவரைப் பார்த்திருக்கலாம். மாநகரத்தின் நுழைவாயிலிலேயே பரங்கிமலையில் ஒரு தியேட்டர் உண்டு.

அப்போதெல்லாம் அந்தத் தியேட்டரில் வாராவாரம் ரேஷ்மா ரசிகர்கள் அலைமோதுவார்கள். அரங்கம் ஹவுஸ்ஃபுல் ஆகி, நின்றுகொண்டே படம் பார்ப்பார்கள். பெரும்பாலும் மலையாளம்தான். சில நேரங்களில் தமிழில் டப்பிங் செய்து போடுவார்கள். இந்தப் படத்துக்கு எல்லாம் மொழியா முக்கியம்? பார்த்தாலே புரியும்.

சினிமா நடிகை ஆகவேண்டும் என்கிற லட்சியம் மட்டும்தான் ரேஷ்மாவுக்கு இருந்தது. ஆவதற்கு என்ன தகுதி வேண்டும், யாரை அணுக வேண்டும் என எதுவுமே தெரியாது.பெங்களூரில் இருந்த பிரபல நடிகர்களின் வீடுகளுக்கு முன்பாக போய் நிற்பார். காரில் போகும்போதும், வரும்போதும் யதேச்சையாகப் பார்த்து, “இந்தப் பெண் அழகாக இருக்கிறாளே, நம்ம படத்தில் ஹீரோயின் ஆக்கிடலாமே!” என்று முடிவெடுப்பார்கள் என நினைப்பு. செக்யூரிட்டிகள், இவரை விரட்டி விரட்டி அடிப்பார்கள்.

அடுத்து சில சினிமா கம்பெனிகளின் முகவரிகளை எப்படியோ பெற்று, ஒவ்வொரு அலுவலகமாக படியேறி இறங்கினார். சினிமாவின் இன்னொரு முகம் தெரிந்தது.யாரோ பரிதாபப்பட்டு சொன்னார்கள்.“இங்கெல்லாம் உனக்கு சான்ஸே கிடைக்காது. நடிக்க வைக்கிறேன்னு சொல்லி, அதைத் தவிர்த்து எல்லாத்துக்கும் யூஸ் பண்ணிப்பானுங்க. மைசூர்லே நிறைய சூட்டிங் நடக்கும். அங்கே போய் ட்ரை பண்ணு; துணை நடிகையாவாவது நடிக்கலாம்.”

மைசூரில்தான் அப்போதெல்லாம் நிறைய தமிழ்ப்படங்களின் படப்பிடிப்புகள் நடந்துகொண்டிருந்தன. படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்குப் போய் வேடிக்கை பார்ப்பார். படப்பிடிப்புக் குழுவில் இருக்கும் யாரைப் பார்த்தாலும், “அண்ணா, நான் நல்லா நடிப்பேன்ணா. உங்க படத்துலே நடிக்க வைங்கண்ணா” என்று கெஞ்சுவார்.

குறைந்தது ஐநூறு பேரிடமாவது கெஞ்சி இருப்பார். சில பேர் திட்டி அனுப்பி விடுவார்கள். சில பேர் ஜொள்ளு விடுவார்கள். சிலர் வேறு நோக்கத்துக்காக அழைப்பார்கள்.ஆனால்-ஒரே ஒரு படத்தில்கூட கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும் வாய்ப்பு கூட ரேஷ்மாவுக்கு கிடைத்ததே இல்லை.ஒருநாள்.... ஏதோ மலையாள சினிமா படப்பிடிப்பு. மலையாளத்தின் பெரிய நடிகர் நடித்துக்கொண்டிருந்தார்.

கக்கத்தில் பையை இடுக்கிக் கொண்டு துணை நடிகர்களை அதிகாரமாக ஆணையிட்டுக் கொண்டிருந்த ஒருவனைப் பார்த்தார் ரேஷ்மா. வழக்கமாக எல்லாரிடமும் கேட்பதைப் போல அவனிடமும் வாய்ப்புக் கேட்டார். ஏற இறங்கப் பார்த்தான்.

கண்களில் திருட்டுத்தனம் டாலடித்தது.“இந்தப் படத்துலே சான்ஸ் இல்லை; ஆனா வேற ஒரு படத்துக்கு ஹீரோயின் தேவைப்படுது. கேரளாவிலே ஷூட்டிங். அஞ்சே அஞ்சு நாள் நடிச்சிக் கொடுத்தா போதும்.”

விவரம் புரியாத ரேஷ்மா, “ரொம்ப தேங்க்ஸ் அண்ணா” என்று நன்றியுணர்ச்சியில் நா தழுதழுத்தார்.“இனிமே அண்ணான்னு கூப்பிடாத.... மாமான்னு கூப்பிடணும். நைட்டு வந்து பாரு” சொன்னவன், தான் தங்கியிருந்த லாட்ஜ் முகவரியை எழுதிக் கொடுத்தான்.ரேஷ்மா, மீள முடியாத புதைகுழியில் விழுந்த நாள் அதுதான்.

அவன் சொன்ன படத்துக்காக கேரளா போனார். ஐந்து நாட்கள் கால்ஷீட். ஆனால், மூன்றே நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் நடத்தி முடித்துவிட்டார்கள். கேமராமேன், டைரக்டர் என்றெல்லாம் ஒரு படத்துக்குத் தேவையான அத்தனை பேரும் இருந்தார்கள். ஆனால் காஸ்ட்யூமருக்கு மட்டும் வேலையே இல்லை.

முதல் நாள் நடிக்கும்போது ரேஷ்மாவுக்கு அழுகையாக வந்தது. மறுநாளில் இருந்து சகஜமானார். முழுக்க நனைந்தபிறகு முக்காடு போடுவது முட்டாள்தனம் அல்லவா?தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் பரமதிருப்தி. சம்பளத்தைக் கவரில் கொடுத்தார்கள். பிரித்துப் பார்த்தார். ஒரு லட்ச ரூபாய். இதுவரை ரேஷ்மா, கனவில் கூட நினைத்துப் பார்த்திராத தொகை. “சினிமாவில் நடிச்சா நிறைய காசு கிடைக்கும்னு தெரியும். இவ்வளவு காசா?” என்று வாய் பிளந்தார்.

“ஷகிலா மாதிரி பெரிய நடிகையா வருவேம்மா.... மாசத்துக்கு ரெண்டு படமாவது எடுப்பேன். ஷூட்டிங் இருந்தா போன் பண்றேன். வந்துடு” என்று ஆசீர்வதித்தார் தயாரிப்பாளர்.அன்றிலிருந்து அடுத்த சில வருடங்களுக்கு ரேஷ்மா, படப்பிடிப்பிலேயே பிஸியாக இருந்தார்.

ஷகிலாவோடு இணைந்து இவர் நடித்த பல படங்கள் வசூலில் சக்கைப்போடு போட்டன. ஷகிலா, சிந்து, ஜோதிஸ்ரீ என்று இத்துறையில் முன்னணியில் இருந்த நடிகைகளோடு இணைந்து ரேஷ்மா நடித்த ‘சிலகம்மா’ ப்ளாக்பஸ்டர் ஹிட். ஆனால், தான் நடித்த ஒரு படத்தைக் கூட ரேஷ்மா தியேட்டருக்கு போய் பார்த்ததே இல்லை.

திடீரென்று ஒரு நாள் ரேஷ்மாவுக்கு படப்பிடிப்பே இல்லை. மறுநாள் போன் வரும் என்று காத்திருந்தவருக்கு ஏமாற்றம். அதன்பிறகு அவரை நடிக்க யாருமே கூப்பிடவில்லை. மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்கள், ‘இந்த’ மாதிரி படங்களால், தாங்கள் நடிக்கும் படங்கள் ஓடுவதில்லை என்று பிரச்சினை செய்ததால், ‘அந்த’ மாதிரி படங்கள் எடுப்பது முற்றிலுமாக நின்றுவிட்டன.

ஆறேழு ஆண்டுகள் கழிந்தன. 2007ஆம் ஆண்டு. கொச்சின் புறநகர்ப் பகுதியான காக்கநாட்டில் இருந்த ஓர் அப்பார்ட்மென்டில் ரேஷ்மாவும், கூட சிலரும் கைது செய்யப்பட்டார்கள். பொது இடத்தில் பாலுறவுக்கு வற்புறுத்தி மற்றவர்களை அழைத்தது உள்ளிட்ட பிரிவுகளில் ரேஷ்மா மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன.

அப்போது அவர் மீது நடந்த காவல்துறை விசாரணையே மிக அசிங்கமாக இருந்ததாக, ஒரு வீடியோ இணையத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. கோர்ட்டில் பெயில் வாங்கிக் கொண்டு பெங்களூருக்குப் போனவர்தான்.

இன்றுவரை ரேஷ்மா எங்கிருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது. அவர் தலைமறைவான போது அவருக்கு வயது இருபத்தைந்துக்குள்தான் இருக்கும். அவரை துபாயில் பார்த்தேன்; சிங்கப்பூரில் பார்த்தேன் என்றெல்லாம் அவ்வப்போது யாராவது சொல்கிறார்கள். எனினும், இதுவரை அவர் எங்கிருக்கிறார் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

கலைத்துறையில் ஈடுபடவேண்டும் என்கிற ஆசை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆனால்- முறையான பயிற்சியோ, சரியான வழிகாட்டுதலோ, போதுமான பாதுகாப்புப் பின்னணியோ இல்லாதவர்கள் என்ன ஆவார்கள் என்பதற்கு ரேஷ்மாவின் வாழ்க்கையே பாடம்.

- யுவகிருஷ்ணா