காசுக்காக ப்ளூஃப்லிமா எடுக்குறது? இயக்குநர் ஆவேசம்!தமிழகத்தையே உலுக்கிய கொலைச் சம்பவம் அது. அந்தக் கதையைத் தழுவி, கொஞ்சம் மசாலா தூவி ‘நுங்கம்பாக்கம்’ என்கிற பெயரில் படமெடுத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் எஸ்.டி.ரமேஷ். விஜயகாந்த் நடித்த ‘உளவுத்துறை’, ‘ஜனனம்’, ‘கலவரம்’ போன்ற படங்களை ஏற்கனவே இயக்கியவர்.

“ரொம்ப பரபரப்பான ஒரு சம்பவத்தை படமா எடுக்கறீங்களே?”

“ஆமாம். எனக்குத் தெரிஞ்சு வழக்கு நடந்துக்கிட்டிருக்கப்பவே ஓர் உண்மைச் சம்பவத்தைப் படமா எடுக்கிறது இதுதான் முதல் தடவை. எனவே ரொம்பவே கவனத்தோடு எடுத்துக்கிட்டிருக்கோம். ‘ஸ்வாதி கொலை வழக்கு’ன்னுதான் படத்துக்கு நேரடியாவே டைட்டில் வெச்சோம். ஆனா, அதுக்கு ஏகப்பட்ட பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியதாயிடிச்சி. இருந்தாலும் எங்க படத்துக்கு நல்ல கவனம் கிடைச்சிருக்கு. களேபரங்களுக்கு மத்தியில்தான் இருபது லட்சம் பேர் எங்க டிரைலரை பார்த்திருக்காங்க.

சம்பந்தப்பட்ட குடும்பத்தார், சென்ஸார்னு நிறைய ஆட்சேபணைகளை எதிர்கொண்டதாலே நிறைய காட்சிகளை ரீஷூட் பண்ண வேண்டியிருந்தது. தலைப்பையும் ‘நுங்கம்பாக்கம்’ என்று மாற்ற வேண்டியதாயிடிச்சி.”“துணிச்சல் கொஞ்சம் ஜாஸ்திதான்”“முன்னெப்போதையும் விட இப்போ தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர் சங்கமெல்லாம் படைப்பாளிகளுக்கு பக்கபலமா இருக்காங்க. எனக்கு எப்பவுமே சமூக விழிப்புணர்வு படங்கள் பண்ணணும்னுதான் ஆசை.

‘ஜனனம்’ படத்தில் வேலை வாய்ப்பு பிரச்சினையைத் தொட்டிருப்பேன். ‘கலவரம்’ படத்தில் தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தைச் சொன்னேன். ‘வஜ்ரம்’ படத்தில் கல்வி சம்பந்தப்பட்ட விஷயத்தை எடுத்தேன். அந்த வரிசையில் என்னுடைய ஒவ்வொரு படமும் மக்களுடைய வாழ்வியலைச் சுற்றியதாக இருக்கும்.

‘நுங்கம்பாக்கம்’ படத்தில் சமூகக் குற்றங்களை எவ்விதம் தவிர்க்கலாம் என்பதைச் சொல்லியுள்ளேன். ஒரு குற்றம் நடக்கும்போது பொதுமக்கள் முடிந்தளவுக்கு உதவ முன்வரவேண்டும். அப்படி வரமுடியாத பட்சத்தில் காவல் துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அப்படி ஸ்டெப் எடுக்காத வரைக்கும் குற்றங்கள் குறையாது. அதைத்தான் இதில் மையப்படுத்தியுள்ளேன்.

ஒரு பெண் பட்டப் பகலில் கொலை செய்யப்படுகிறார். ஆனால் அந்த நிகழ்வை ஒருவரும் ‘பார்க்கவில்லை’ என்கிறார்கள். ஆனால் அவர்களால் அந்த நிகழ்வை ஃபேஸ்புக், டிவிட்டரில் ஃபார்வர்ட் செய்ய முடிகிறது. அதுமட்டுமில்ல, அந்த சடலத்தின் மீது ஒரு போர்வையை மூடுவதற்குக் கூட யாரும் முன்வரவில்லை. நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களும் கண்டும் காணாமல் இருந்திருக்கிறார்கள்.

தனக்கு நேரிடும்போது மட்டுமே சென்சிடிவ்வாக எடுத்துக் கொள்கிறார்கள். மற்றவர்களுக்கு நேரிடும்போது வேடிக்கை மட்டுமே பார்க்கத் தயாராக இருக்கிறார்கள். அந்த மாதிரி இருக்கக்கூடாது என்ற கருத்தை அழுத்தமாகச் சொல்லியுள்ளேன்.”

“பொதுவா நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படங்கள் சமீபமாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலையே?”

“உண்மைதான். கமர்ஷியல் எலிமென்ட்ஸ் உள்ள படங்கள்தான் ஜெயிக்குது. ‘குற்றப்பத்திரிகை’ மாதிரியான படங்கள், ஈழத் தமிழர்களைப் பற்றிய படங்கள் எடுத்தால் ரிலீஸ் பண்ணுவதற்கு பெரிய போராட்டங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. அதையும் தாண்டி அந்தப் படங்களை வெளியே கொண்டு வருவது தயாரிப்பாளர், இயக்குநரின் கடமை.

வியாபாரம் மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் அந்த மாதிரி படங்களை மக்களுக்கும் ஏதோ ஒரு விதத்தில் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்துக்காக எடுக்கிறோம். என் படங்களைக் குறித்து ஆயிரம் விளக்கம் கொடுத்தாலும் இனிப்பான படங்கள் உடனே ரீச் ஆகிவிடும். கசப்பு ரீச்ஆவதற்கு கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படும். ஆனால் கசப்பு எப்போதும் நிலைக்கும். ஆனால் இனிப்பு மாதிரியான படங்களின் வெற்றி என்பது தற்காலிகமானது. ‘ஜனனம்’ படத்தை டிவியில் 125வது முறையாக ஒளிபரப்பு செய்ததாக சமீபத்தில் அந்த டிவி அறிவித்தது. அதுதான் இனிப்புக்கும் கசப்புக்கும் உள்ள வித்தியாசம்.

சினிமாவை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதலாவது, பணத்துக்காக பொழுதுபோக்குப் படங்களை எடுப்பது. இரண்டாவது, சமூகம் சார்ந்த படங்கள். நான் பிலிம் இன்ஸ்டிடியூட்ல கோல்ட் மெடலிஸ்ட். என்னுடைய படங்களில் 50 சதவீதமாவது மெசேஜ் இருக்கணும் என்று நினைப்பேன். சிலர் மொக்கை இயக்குநர் என்று சொல்லலாம். ஆனால் காலத்துக்கும் என் படைப்புகள் பேசப்படும். பாதிப்புகளை மக்கள் மத்தியில் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.‘நுங்கம்பாக்கம்’ படத்துக்கு மார்க்கெட்ல நல்ல டிமாண்ட் உருவாகியிருப்பது சந்தோஷமாக இருக்கிறது.”

“உங்க ‘நுங்கம்பாக்கம்’ என்னென்ன மாதிரி சர்ச்சைகளை எதிர்கொள்ளுது?”

“கொலையான பெண்ணின் அப்பா ‘மன உளைச்சலுக்கு ஆளாவோம்’ என்று புகார் தெரிவித்தார். போலீஸ் விசாரணையில் என் முந்தைய படங்களைப் பற்றி சொன்னேன். குறிப்பிட்ட சம்பவத்தை படமாக்கி பணம் பண்ணுவது என் நோக்கம் இல்லை என்றும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துக்காக மட்டுமே இந்தப் படத்தை எடுத்துள்ளேன் என்றும் என் தரப்பு நியாயங்களை எடுத்துச் சொன்னேன். இப்போது அனைத்து சர்ச்சைகளும் நீங்கி விட்டது. போலீஸ் உயரதிகாரிகளிடம் விளக்கம் அளித்த பிறகே ரிலீஸ் வேலையை ஆரம்பித்துள்ளேன்.”

“யாரெல்லாம் நடிக்கிறார்கள்?”

“அஜ்மல் லீட் ரோல் பண்ணியிருக்கிறார். அவர் பண்ணிய படங்களிலேயே இந்தப் படம் வித்தியாசமாக இருக்கும். அஜ்மலை பட்ஜெட் படங்களின் நாயகன் என்றும் சொல்லலாம். அப்படி ஒரு ஒத்துழைப்பு கொடுத்தார். புதுமுகம் ஆயிரா நாயகி. இன்னொரு லீட் ரோல்ல மனோ வர்றார். இவர்களுடன் ஏ.வெங்கடேஷ், ஆர்.என்.மனோகர், சிவசக்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.”

“புதுமுகங்களை நடிக்க வைக்க என்ன காரணம்?”

“பொதுவாக நான் நடிகர்களைத் தேடிப் போனதில்லை. ‘உளவுத் துறை’ படத்தோட கதையைக்கூட கேப்டனிடம் சொல்லாமல் தயாரிப்பாளரிடம்தான் சொல்லி ஓக்கே பண்ணினேன். நிஜக் கதைகளில் நடிக்க சில சமயம் பெரிய நடிகர்கள் தயங்குவதுண்டு. புதுமுகங்களை வைத்து சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதை இந்தப் படத்தில் 100 சதவீதம் நிருபித்துள்ளேன்.”

“உங்க படக்குழு?”

“ஜோன்ஸ் ஆனந்த் ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். எடிட்டிங் மாரி. ‘பெரியண்ணா’ படம் எடுத்த எஸ்.கே. சுப்பையா தயாரிப்பாளர். ‘சில்லுன்னு ஒரு சந்திப்பு’, ‘தற்காப்பு’ போன்ற படங்களை இயக்கிய ஆர்.பி.ரவி கதை, வசனம் எழுதியிருக்கிறார்.”

“இப்போதைய சினிமா எப்படி இருக்கு?”

“நல்லாதான் இருக்கு. ஆனா, மக்களுக்கு விழிப்புணர்வு தரக்கூடிய சப்ஜெக்ட் நிறைய வரணும். கமர்ஷியல் என்கிற பெயரில் சினிமாவை வெறும் பொழுதுபோக்கு மீடியமாக்கிடக் கூடாது. இப்போவெல்லாம் பாலியல் படங்கள் அதிகரிக்குது. முதலீட்டை தயாரிப்பாளர் எடுக்கணும்தான். அதுக்குன்னு ப்ளூ ஃப்லிமா எடுக்குறது?

பாலியல் படங்கள் முன்னாடியும் வந்தது உண்டு. தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களே ரொம்ப ஜாக்கிரதையா ஹேண்டில் பண்ணி மெச்சூரிட்டியா எடுத்திருக்காங்க. இப்போ பாருங்க. டபுள் மீனிங் கூட இல்லை, டைரக்ட் மீனிங்தான். சினிமாவுக்கு நல்ல திறமைசாலிகள் வந்திருக்காங்க. அவங்க திறமை வீணடிக்கப்படக் கூடாது என்பதே என் அக்கறை. படைப்பாளி என்பவனுக்கு சமூகம் குறித்த பொறுப்புணர்ச்சி இருக்கணும்.”

“நெக்ஸ்ட்?”

“இந்திய அளவில் பேசப்படக்கூடிய ஒரு புராஜெக்ட். ஸ்க்ரிப்ட்டெல்லாம் முடிச்சிட்டேன். ‘நுங்கம்பாக்கம்’ ரிலீஸானதுமே அறிவிப்பு வெளியிடுவேன்.”

- சுரேஷ்ராஜா