ஒரே படத்தில் 29 வேலைகளைப் பார்த்து கின்னஸ் சாதனை செய்யும் இயக்குநர்!



இந்தியாவிலேயே முதன்முறையாக டைனோசரை வைத்து ‘அதிசய உலகம்’ என்கிற 3டி படத்தை இயக்கியவர் சக்தி ஸ்காட். இப்போது அடுத்த சாதனையை செய்ய தயாராகி விட்டார்.

இவர் இயக்கி ஹீரோவாக நடிக்கும் ‘ஜெயிக்கப் போவது யாரு’ படத்தில் மொத்தம் இருபத்து ஒன்பது துறைகளில் பணியாற்றுகிறார். ஒரே ஆள் எப்படி இத்தனை வேலைகளை ஒரே படத்தில் செய்யமுடியும் என்கிற கேள்வியோடு அவர் முன்பாக நின்றோம்.

“எப்படி முடிந்தது?”

“சின்ன வயதிலிருந்தே எனக்கு சினிமா ஆர்வம் அதிகம். எனக்கு ஐந்து வயது இருக்கும்போது ‘ஜுராஸிக் பார்க்’ படம் பார்த்தேன். அப்போதே என்னை சினிமா முழுமையாக ஆக்கிரமித்துவிட்டது. அந்த வயதில் குடும்பத்துடன் பல படங்கள் பார்த்துள்ளேன். ஆனால் அந்தப் படங்கள் பார்க்கும்போது ஒரு பொம்மைபோல் இருந்ததாக ஞாபகம்.

ஆனால் ‘ஜுராஸிக் பார்க்’ மாதிரியான படங்கள் பார்க்கும்போது எனக்குள் பெரும் மனக்கிளர்ச்சி ஏற்பட்டது. ஸ்டீவன் ஸ்பீல்பர்க்கின் மிகப் பெரிய ரசிகனாக மாறினேன். எப்படி அவரால் ஒரு காவியம் படைக்க முடிந்தது என்று எனக்குள் கேள்விகள் எழுந்தது. பெரியவனானதும் நாமும் அப்படி பண்ண வேண்டும் என்ற ஆவல் பிறந்தது.

மூன்றாம் வகுப்பு படிக்கும் போது அனிமேஷன் கற்றுக் கொண்டேன். அதன்பிறகு ஒளிப்பதிவு, எடிட்டிங் என்று டெக்னிக்கலாக பல துறைகளின் சூட்சுமங்களை ஆர்வத்துடன் கற்றுக் கொண்டேன். சினிமாவில் எனக்கு குரு என்று யாரும் இல்லை. நான் ஒரு இண்டிபென்டன்ட் இயக்குநர். ‘அயன்’, ‘எந்திரன்’ போன்ற படங்களில் விஷுவல்ஸ் சைட்ல வேலை பண்ணியிருக்கிறேன்.

ஒரு இயக்குநர் தன் மனதில் இருப்பதை  வெளியே கொண்டு வருவதற்கும் மற்றவர்கள் கொண்டு வருவதற்கும் வித்தியாசங்கள்  இருக்கிறது. எவ்வளவு திறமையான டெக்னீஷியன்கள் வேலை பார்த்தாலும் அதில்  அவர்கள் ஸ்டைல் இருக்கும்.   என் மனசுல இருக்கிற கற்பனையை அப்படியே வெளியே  கொண்டு வர நானே களத்தில் இறங்க முடிவு பண்ணினேன். அதுதான் எளிதாகவும்  இருக்கும் என்று நம்பினேன். மற்றவர்களைச் சார்ந்து இருக்கும்போது நாம்  நினைக்கும் நூறு சதவீத ரிசல்ட் கிடைக்காது.”

“ஏற்கனவே ஜாக்கிசான் இதுபோல பதினைந்து துறைகளில் பணியாற்றியதே கின்னஸ் சாதனையில் இடம் பெற்றிருக்கு...”“ஆமாம். ஆனால், என்னுடைய முதல் படமான ‘அதிசய உலகம்’ படத்திலேயே இருபதுக்கும் மேற்பட்ட துறைகளில் ஒர்க் பண்ணினேன். டைட்டில் கார்டில் கிரெடிட் போடும்போது, எதுக்கு இத்தனை இடங்களில் நம் பெயர் வர வேண்டும் என்று தன்னடக்கத்துடன் டைரக்டர் உள்பட குறைவான துறைகளுக்குத்தான் என் பெயரை போட்டேன். அதே ஆண்டுதான் ஜாக்கிசானுடைய படம் கின்னஸ் சாதனை நடந்தது.

ஹாலிவுட் டைரக்டர் ராபர்ட் ரொட்ரீக்ஸ் கேமரா, எடிட்டிங் உள்பட டெக்னிக்கல் துறைகளில் சாதனை படைத்தி ருக்கிறார். அவரைப் பார்த்துதான் ‘அதிசய உலகம்’ படத்தில் இருபத்தி நான்கு துறைகளில் வேலை பார்த்தேன். கின்னஸில் பேர் வரவேண்டுமென்றால், நம் அனைத்து வேலைகளையும் ஆதாரமாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். எனக்கு அப்போது கின்னஸ் சாதனை பற்றிய ஐடியா இல்லை என்பதால் விட்டுவிட்டேன்.

ஆனால் -இப்போது ‘ஜெயிக்கப்போவது யாரு’ படம் கின்னஸ் சாதனைக்காகவே எடுக்கப்பட்ட படம். இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, பாடல்கள், கலை, விஷுவல் எபெக்ட்ஸ், என சினிமாவுக்கான இருபத்தி ஒன்பது துறைகளையும் ஒரே ஒரு தனி மனிதனாக செய்து கின்னஸ் சாதனைக்காக ஆதாரங்களோடு அனுப்பியிருக்கிறேன்.”

“சாதனைக்கு எடுக்கப்பட்ட படம் என்பதால் கதை சுமாரா இருக்குமோ?”

“நோ வே. ஐந்து நண்பர்கள் பல்வேறு காரணங்களுக்காகவும், தேவைகளுக்காகவும் கார் பந்தயத்தில் கலந்துகொள்கிறார்கள். ஐந்து பேருக்கும் தனித்தனியே  ஒரு கதை இருக்கும். அவர்கள் என்ன காரணத்துக்காகக் கலந்து கொள்கிறார்கள், அதில் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? கார் பந்தயத்தில் கலந்து கொள்வதால் அவர்கள் லைஃப் எப்படி மாறுகிறது என்பதை  அவுட் அண்ட் அவுட் காமெடி கலந்து சொல்லியுள்ளேன். காமெடி ஜானரில் இதுவரை வெளிவராத புது ஸ்டைலில் திரைக்கதை இருக்கும். ஏ சென்டர் மட்டுமில்லாமல், ஃபேமிலியுடன் பார்க்கும்படியாக ஆல் கிளாஸ் படமாக இருக்கும்.”

“நட்சத்திரங்கள்?”

“மெயின் லீட் நான் பண்ணியிருக்கிறேன். பாய் நெக்ஸ்ட் டோர் கேரக்டர் என்பதால் பெரிதாக மெனக்கெடல் தேவைப்படவில்லை. கார் ரேஸ் கதை என்பதால் துணிச்சலான பெண்ணைத் தேடினோம். அப்படி எங்கள் தேடுதல் வேட்டையில் கிடைத்தவர்தான் வந்தனா. பெங்களூரு பொண்ணு.

மாடலிங் துறையில் அனுபவம் இருப்பதால் நடிப்புல பின்னியெடுக்கிறார். தமிழ் தெரியலைன்னாலும் கொஞ்ச நாளில் நன்றாக தமிழ் பேச கற்றுக் கொண்டார். ரீ-டேக் வாங்காமல் சிங்கிள் டேக்கில் அசத்தினார். இந்தப் படத்துக்குப் பிறகு பெரிய ரவுண்ட் வருவார். அதற்கு அச்சாரம் போடுகிற மாதிரி இப்போது இன்னொரு தமிழ்ப் படத்துல நடிக்கிறார்.

கார் பந்தயம் நடத்துபவராக ஆர்.பாண்டியராஜன் வர்றார். பவர் ஸ்டார் சீனிவாசன் காமெடி வில்லனாக வர்றார். பிளாக் அண்ட் ஒயிட் காலத்து வில்லன்களை ஞாபகப்படுத்துகிற மாதிரி அவருடைய கேரக்டரும் கெட்டப்பும் இருக்கும். ஒரு பாடல் காட்சியில் அவர் புருஸ்லீ, அர்னால்டு, ஹிட்லர், ஐன்ஸ்டீன், டாம்குரூஸ், ஜேம்ஸ்பாண்ட், பில்கேட்ஸ் என பல கெட்டப்களில் காமெடியில் அசத்தியிருக்கிறார். 

சமீபத்துல படத்தின் ஆடியோவை இமான் வெளியிட்டார். ‘பாடல்கள் நல்லா இருக்கு’ என்று மனம் திறந்து பாராட்டினார். இசைத்துறையில் ஜாம்பவானாக பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் அவருடைய பாராட்டு என்னுடைய எனர்ஜி லெவலை அதிகப்படுத்தியுள்ளது. என்னுடைய கின்னஸ் முயற்சிக்கு பக்கபலமாக இருக்கும் தயாரிப்பாளர் பானு சித்ராவுக்கு என் நன்றி.”

- சுரேஷ்ராஜா