நடிகர் ஆனார் தனுஷ் ரசிகர் மன்றத் தலைவர்!



‘ஸ்கெட்ச்’ படத்தில் வில்லன் ஆர்.கே.சுரேஷ் டீமுடன் சிறிது நேரமே வந்தாலும் கவனம் ஈர்த்தவர் டேவிட் பில்லா. இவர் தனுஷ் ரசிகர் மன்ற நிர்வாகியாக இருந்து நடிகராக மாறியவர்.‘‘சென்னை சாலிகிராமம்தான் நான் பிறந்த மண்.

அப்பா, அம்மா வைத்த பெயர் டேவிட் செல்லையா. எனக்கு அஜித்தைப் பிடிக்கும். ‘பில்லா’ ரிலீஸான சமயத்தில் என் பெயருடன் பில்லாவைச் சேர்த்துக் கொண்டேன். அந்தப் பெயருக்கு ஃபேஸ்புக்ல ஆறாயிரம், ஏழாயிரம் ஃபாலோயர்ஸ் கிடைத்ததால்  அதையே மெயின்டெயின் பண்ணிக்கொண்டிருக்கிறேன்.

  அப்பா ஏ.வி.எம் நிறுவனத்தில் பிலிம் பிரிண்டராக வேலை பார்த்தார். சினிமா ஏரியாவுல இருந்தாலும் படிக்கும்போது எனக்கு சினிமா மீது ஆர்வம் இருந்ததில்லை. பிரசிடென்ஸியில் கல்லூரிப் படிப்பை முடித்தேன்.ஸ்கூல் படிக்கும் போது என்னுடைய பால்ய கால நண்பர் குமரன். நானும் அவனும் எதிரெதிர் வீடு. அவனுடைய குளோஸ் ஃப்ரெண்ட் இப்போது மிகப் பெரிய நடிகராக இருக்கும் தனுஷ்.

அப்போது குமரன் வீட்டுக்கு தனுஷ் சார் அடிக்கடி வருவார். அந்த பழக்கத்தில்தான் அறிமுகமானார். அப்போது அவரை பிரபு என்று அவருடைய நிஜப்பெயரை சொல்லித்தான் அழைப்போம். ‘துள்ளுவதோ இளமை’ படம் வெளியான சமயத்தில்தான் அவர் சினிமா இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் என்ற விஷயம் எனக்குத் தெரியும்.

‘காதல் கொண்டேன்’  படம் எடுக்கும்போது தனுஷ் சார் கூடவே இருந்தேன். அந்தப் படம் மிகப் பெரிய வெற்றியடைந்தது. அப்போது அவரைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் வருவார்கள். அவர்களை ஒழுங்குபடுத்த தனுஷ் ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. அகில இந்திய தலைவராக என் நண்பன் குமரனும், சென்னை ரசிகர் மன்ற தலைவராக நானும் பொறுப்பு வகித்தோம். ரசிகர் மன்ற நிர்வாக விஷயங்களுக்காக தனுஷ் சார் படப்பிடிப்புக்கு அடிக்கடி செல்வேன். இதனால் ஏராளமான சினிமா இயக்குநர்கள், நண்பர்கள் அறிமுகமானார்கள்.

மன்ற நிர்வாகியாக நான் ஆக்டிவ்வாக இருந்த சமயத்தில் தென் சென்னை ஏரியாவில் தனுஷ் சார் படங்கள் வெளியாகும்போது வாழை மரம், தோரணம் என்று அமர்க்களப்படுத்திவிடுவேன். ஒரு முறை பிரபல நடிகரின் படமும் தனுஷ் சாரின் ‘ஆடுகளம்’ படமும் ஒரே சமயத்தில் வெளியானது. ஆனால் அந்த நடிகரின் படத்துக்கு அவர் ரசிகர்கள் செய்ததைவிட ‘ஆடுகளம்’ படத்துக்கு ரிலீஸ் வேலைகளை அதிகமாக செய்தேன்.

என்னுடைய ரிலீஸ் வேலைகளைப் பார்த்துவிட்டு ‘‘யாருப்பா இது இப்படி கலக்குறாங்க’’ என்று அந்த பெரிய நடிகர் விசாரித்ததாக கேள்விப்பட்டேன். அதன்பிறகு தனுஷ் சாருக்கு என் மீது தனி மரியாதை. படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்லும்போது விலையுர்ந்த பரிசுப் பொருட்களை வாங்கி வருவார். குடும்பத்தைப் பற்றி அக்கறையுடன் விசாரிப்பார்.

ஒரு கட்டத்தில் படிப்பு, வேலை விஷயமாக தலைவர் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார் குமரன். புதிதாக சிலர் பொறுப்புக்கு வந்தார்கள். ‘கொடி’ ரிலீஸ் சமயத்தில் எனக்கும் புதிதாக வந்தவருக்குமிடையே கருத்து வேறுபாடு வந்தது. தனுஷ் சார் அழைத்து சமாதானம் செய்தார்.

ஆனால் எனக்குள் உள்ளூர மனக்கஷ்டம் இருந்துகொண்டே இருந்தது. ஒரு நாள், ‘‘சார் மனசு கஷ்டமாக இருக்கிறது’’ என்று எஸ்.எம்.எஸ் அனுப்பினேன். ‘‘டேவிட் உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்’’ என்று பதில் அனுப்பினார். மனச் சோர்வாக இருந்த அந்த சமயத்தில்தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது’’ என்று நடிகராக மாறிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

‘‘சின்ன வயதில் நான் டிராமாவில் நடித்திருக்கிறேன். நாம் ஏன் நடிக்கக்கூடாது என்று ‘ரேணிகுண்டா’ பன்னீர்செல்வத்திடம் வாய்ப்பு கேட்டேன். ‘கருப்பன்’ படத்தில் ஒரு கேரக்டர் கொடுத்தார். தனுஷ் சாருடன் இருக்கும்போது பூபதி பாண்டியன் நல்ல பழக்கம். அவர் ‘மன்னர் வகையறா’வில் வாய்ப்புக் கொடுத்தார். என்னுடைய நடிப்பைப் பார்த்துவிட்டு க்ளைமாக்ஸில் ஹீரோவுடன் மோதக்கூடிய அளவுக்கு என் கேரக்டரைப் பெரிதாக்கினார்.

தொடர்ந்து ஆர்.கே.சுரேஷுடன் ‘பள்ளிப்பருவத்திலே‘, ‘ஸ்கெட்ச்’ பண்ணினேன்.  என்னுடைய நடிப்பும், அப்ரோச்சும் அவருக்குப் பிடித்திருந்ததால் அவர் ஹீரோவாக நடிக்கும் ‘பில்லா பாண்டி’யில் வில்லன் வாய்ப்பு கொடுத்துள்ளார். இப்போது சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் ‘கனவே கலையாதே’. ‘களவாணி-2’, சுசீந்திரன் இயக்கும் படம், தம்பி ராமையா இயக்கும் ‘உலகம் விலைக்கு வருது’ உட்பட ஆறேழு படங்களில் நடித்து வருகிறேன். அடுத்து தனுஷ் சார் படத்துக்காக வெயிட்டிங்.

எனக்கு நடிப்பில் முன்மாதிரி என்றால் பிரகாஷ்ராஜ் சாரை சொல்வேன். அவர் மாதிரி கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவும், வில்லனாகவும் பண்ண வேண்டும். நடிகர் மன்ற நிர்வாகியாக இருந்த நான் இப்போது நடிகனாக மாறியிருக்கிறேன் என்றால் அதற்கு தனுஷ் சார்தான் காரணம்’’ என்று தனுஷை விட்டுக்கொடுக்காமல் பேசுகிறார் டேவிட் பில்லா.

- சுரேஷ்ராஜா