படைவீரன்



சாதியை எதிர்க்கும் படைவீரன்!

வேலை வெட்டிக்குப்  போகாமல், நண்பர்களுடன் ஊர் சுற்றும் விஜய் ஏசுதாஸ் ஒரு கட்டத்தில் போலீஸ் வேலை மீது ஆசைப்படுகிறார். நல்ல மரியாதை கிடைக்கும், சாப்பாடு, சரக்கு ஆகியவை  இலவசமாக கிடைக்கும் என்பதே அவரது ஆசைக்கு காரணம். உறவினரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான பாரதிராஜாவிடம் உதவி கேட்கிறார்.

 ஒரு லட்சம் ரூபாயை லஞ்சமாகக் கொடுத்து  பல தடைகளுக்கிடையே போலீஸ் ஆகிவிடுகிறார்.ஊருக்குத் திரும்பும்போது  இரண்டு ஊர்களுக்கு  இடையே ஜாதிக் கலவரம்  ஏற்பட்டு ரணகளமாக இருக்கிறது. போலீசாக இருந்து இரண்டு ஊர் பிரச்னைகளைத்  தீர்க்க முயற்சி செய்கிறார் விஜய் . அவரது முயற்சிக்கு வெற்றி கிடைத்ததா என்பதை சாதி, அரசியல், ஆணவக்கொலை கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

கார்த்திக் ராஜாவின் இசை கதைக்கு பெரிய பலம் சேர்த்திருக்கிறது. தனுஷ் குரலில் ஒலிக்கும் ‘லோக்கல் சரக்கா பாரின் சரக்கா’ பாடல் சரியான மதுக்கொண்டாட்டம். இயக்குனர் தனா மற்றும் கார்த்திக்  ராஜா பாடியிருக்கும் ‘லெஃப்ட் ரைட்’ பாடல் காவலர்களின் களியாட்டம். ‘இதுவரை நான்’ என்று யுவன்ஷங்கர் ராஜா பாடியிருக்கும் கீதம் இதமானது. வேல் மோகனின் ஒளிப்பதிவு கூர்மையாக இருக்கிறது.

முன்னாள் ராணுவ வீரராக பாரதிராஜா கம்பீரமாக கலக்குகிறார். `சரக்கைப் போட்டுட்டு  வந்து வெச்சுக்குறேன், இருங்கடா’ என சைகையிலேயே சொல்லும் இடம் சூப்பரோ சூப்பர். சரோஜாவிடம் செல்ஃபி எடுத்துக்கொள்ள ஜொள்ளு விடுவதிலும், உறவுப்பெண்ணை ஊரே சேர்ந்து ஆணவக்கொலை செய்தது கண்டு கலங்கும்போதும் தனக்குள் இருக்கும் நடிகனை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறார்.

“உன் அடையாளத்தை நீ பேசு, ஆனா இன்னொருத்தனை மட்டம் தட்டாதே” என பாரதிராஜா சொல்வது காலத்துக்கேற்ற அறிவுரை. சாதி வெறி பிடித்த ஊர்ப் பெரியமனிதன் கதாபாத்திரத்தில் உணர்வுகளைக் கொட்டியிருக்கிறார்  கவிதா பாரதி. வசனமே இல்லாத காட்சிகளிலும் அவரது கண்கள் அத்தனை அபாரமாக அபிநயம் பிடிக்கின்றன.

நாயகியாக வரும் அம்ரிதா அலட்டிக் கொள்ளாமல் அற்புதமான நடிப்பை வாரி வழங்கியிருக்கிறார்.இரண்டாவது நாயகனாக வரும் அகில் குறைந்த பட்ச காட்சிகளிலும் நிறைந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்.சாதிவெறி, அன்பு, மனித நேயம் அனைத்தும் கலந்து சாமர்த்தியமாக இயக்கியிருக்கிறார் தனா.