மதுரவீரன்



ஜாதியை ஒழிக்கும் ஜல்லிக்கட்டு!

‘சாதியைத் தூக்கிப் பிடிச்சுக்கிட்டு இன்னும் எத்தனை நாளைக்குத்தான்யா இப்படி சண்டை போட்டுக்கிட்டே இருக்கப் போறீங்க?’ என ஓங்கி அறையும் சமூகக்குரல்தான் கதை. ஊர்ப் பெரிய மனிதர், சமுத்திரக்கனி உயர்சாதியைச் சேர்ந்தவராக இருப்பினும் கீழே உள்ளவர்கள் மீது நேசம் காட்டும் பண்பாளர்.

சாதி வேறுபாட்டால் பகைமை கொண்டிருக்கும் இரண்டு ஊர்களை ஒன்று சேர்ப்பதற்காக ஜல்லிக்கட்டு விழா நடத்த முடிவு செய்கிறார். தடைகளைத் தாண்டி ஜல்லிக்கட்டு நடக்கிறது. ஆனாலும் பகை குறையவில்லை.

சமுத்திரக்கனியும் சிலரும் கொல்லப்படுகிறார்கள். வெளிநாட்டிலிருந்து திரும்பும் சமுத்திரக்கனியின் மகன் சண்முகபாண்டியன், அப்பாவின் லட்சியத்தை கையில் எடுக்கிறார். தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டை நடத்தினாரா, இரண்டு ஊர் மக்களும் ஒன்று சேர்ந்தார்களா, அப்பாவைக் கொன்றவரை அடையாளம் கண்டாரா என்பதை விளக்குகிறது திரைக்கதை.

ஆறரை அடி உயர ஆஜானுபாகுவாக வலம் வருகிறார் சண்முகபாண்டியன். சண்டைக்காட்சிகளில் எதிராளிகளைப் புரட்டி எடுக்கும்போது அப்பா விஜயகாந்தை நினைவுபடுத்துகிறார். ஹீரோயிசம் என்கிற பெயரில் எகிறாமல் அடக்கி வாசித்திருப்பது அழகு.

நாயகி புதுமுகம் மீனாட்சி. மண்ணுக்கேத்த பெண்ணாக மனம் கவர்கிறார். இன்னொரு ஹீரோ என சொல்லுமளவுக்கு கதையை ஆக்கிரமிக்கிறார் சமுத்திரக்கனி. படம் முழுக்க முறைத்துக்கொண்டே அலையும் வேல.ராமமூர்த்தி, இறுதிக்காட்சியில் சிரித்த முகத்துடன் கீழே உள்ளவரை மேலே தூக்கி விடுவது சிறப்பு.

மாற்று சாதியினருடன் மல்லுக்கு நிற்கும் ‘மைம்’ கோபி, நல்ல நண்பனாக வாழும் மாரிமுத்து, நல்லவனாக இருந்து துரோகியாக மாறும் தேனப்பன், சண்முகபாண்டியனின் நண்பனாக வரும் பால சரவணன் , கபாலி ரஜினியைக் கலாய்க்கும்  ‘நான் கடவுள்’ ராஜேந்திரன்  என அத்தனை கதாபாத்திரங்களும் தங்களது பங்களிப்பை அக்கறையோடு செய்திருக்கிறார்கள், சந்தோஷ் தயாநிதியின் இசையில் “அய்யா நீ பார்த்தாலே....”, “கொம்புல கொம்புல....”, “காட்டேரி நெருங்காம....”, “என்ன நடக்குது நாட்டுல...” உள்ளிட்ட பாடல்கள் இனிமை கலந்தவை.

சாதி, ஜல்லிக்கட்டு, விவசாயிகள் நிலை என கலந்துகட்டி பொழுதுபோக்கு நிறைந்த மாட்டுப்பொங்கலைப் படைத்திருக்கிறார் எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் பி.ஜி.முத்தையா.