நாடெங்கும் ஒலிக்கும் பொதுவுடைமை இசை!



காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில்  எம்.ஏ.ஆறுமுகம் - ராஜாமணி பெற்றோரின் மகனாகப் பிறந்தார் அன்புராஜ். சென்னை எழும்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும்போதே பாடும் திறனும் மெட்டுப்போடும் வல்லமையும் வாய்க்கப்பெற்றது.

பள்ளிக்கூட விழாக்கள் மற்றும் நண்பர்கள் - உறவினர் வீட்டு விசேஷங்களில் அன்புராஜின் கச்சேரி களைகட்டும். கம்யூனிஸ்ட் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, கட்சியின் பிரச்சாரக் குழுவில் முக்கிய இடத்தைப் பிடித்தார்.

கம்யூனிஸ்ட்  தலைவர் வி.பி.சிந்தன் இவரது இசைத்திறமையை மேலும் மெருகூட்டும் வகையில் அடையாறு  தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் படிப்பதற்கு ஏற்பாடு செய்தார். கல்விக்கட்டணத்தை கட்சியே செலுத்தியது.

முறையான சங்கீதக் கலையை 3 ஆண்டுகள் கற்று, ‘இசைமணி பட்டம் பட்டம் பெற்றார் அன்புராஜ். கம்யூனிஸ்ட்  கட்சிக்கென கலைக்குழு ஆரம்பித்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. எட்டு ஆண்டுகளுக்கு மேலாக இயக்க கூட்டங்களில்  ஆர்மோனியம் வாசித்து அனைவரது கவனத்தையும் கவர்ந்தார். 

1990ல் குத்தூஸ் தயாரிப்பில்  க்ரெஸன்ட் ஆடியோ, தி.மு.க பரப்புரைப் பாடல்களை வெளியிட்டது. பூவை செங்குட்டுவன் பாடல்கள் எழுத, டி.எம்.எஸ் பால்ராஜ், இன்றைய இளம் இசையமைப்பாளர்  தமன் அம்மா சாவித்ரி, சந்திரன் சபரிநாதன் ஆகியோர் பாடினார்கள். ‘நாளை உதயம் நமதே’ என்ற தலைப்பில் உருவான அந்த இசைப்பேழைக்கு அன்புராஜ் இசையமைத்தார்.

தி.மு.க தரப்பில் பெரிதும் வரவேற்பைப் பெற்ற பாடல்களாக அமைந்தன.கம்யூனிஸ்ட்  கட்சிக்காக  இவரது இசையமைப்பில் உருவான ‘கத்திரிக்கா கொத்தமல்லி கீரையோடவே...’ பாடல்  நல்ல வரவேற்பைப் பெற்று நாடு முழுதும் ஒலித்தது. அந்தப்பாடலால் ஈர்க்கப்பட்ட இயக்குநர் பாண்டிராஜ் தனது  ‘மெரீனா’  படத்தில் பயன்படுத்த விரும்பினார். ‘இயக்கத்துக்கான பாடலை சினிமாவுக்குத் தருவதாக இல்லை’ என்று கட்சி மேலிடம் கூறிவிட்டது.

நண்பர்களின் தூண்டுதல் மற்றும் அக்கறை உள்ளோரின் ஆலோசனையால் சினிமா இசையமைப்பாளராக வலம்வர முடிவெடுத்தார் அன்புராஜ். இசைமேதை  வி.குமார் இவருக்கு உதவ முன்வந்தார். அவரது  உதவியாளராக ஐந்து ஆண்டுகள் சேவை செய்து, வெஸ்டர்ன் கம்போசிங் வித்தைகளைக் கற்றுத் தேர்ந்தார்.

900க்கும் மேற்பட்ட  அமெச்சூர் நாடகங்களுக்கு இசையமைத்துள்ள இவர், 400 ஆன்மிக  ஆல்பங்களில் இசை பக்தியைக் காட்டியிருக்கிறார். 35 குறும்படங்களில் இவரது இசை பெரும்பலமாக அமைந்திருக்கிறது. ‘நாங்கள் வருகிறோம்’ என்ற தலைப்பில் இவர் இசையமைத்த கம்யூனிஸ்ட் நாடகம் பல்வேறு பகுதிகளில் 3 வருடங்கள் அரங்கேறியிருக்கிறது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்துக்கும் கொள்கைப் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடலுக்கு இசையமைத்ததை பெருமையுடன் குறிப்பிடுகிறார் அன்புராஜ். யுகபாரதி எழுதி, இவரது இசையில் உருவான ‘உழவன் உரிமை’ ஆல்பம், விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலில் இவர் இசையமைத்த தமிழ் ‘லிங்காஷ்டனம்’ பக்தர்கள் வட்டாரத்தில் பரவசமாகக் கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை தெய்வத்தின் அருள் பரப்ப, 1991ல் இவரது இசையமைப்பில் உருவான ‘ஹர ஹர சிவ சிவ ஓம் அண்ணாமலையே ஓம்…’ பாடல் வெளிநாட்டுத் தமிழ் பக்தர்களையும் இசைப்பித்தர்களாக மாற்றியது.  ஜீவன் பிரபாகர் எழுதிய அந்தப்பாடல்,   மீரா கிருஷ்ணன் - பிரபாகர் குரல்களில் ஒலித்தது.

திருவண்ணாமலையைத் தொடர்ந்து, திருப்பதி  கடவுளுக்காகவும் இசையமைத்து, புகழை வாங்கினார் அன்புராஜ்.இயக்குநர் சூரியன் ‘ஆனந்த புன்னகை’  படத்தை இயக்கும்போது, அந்தப்படத்துக்கு இசையமைப்பாளராக இணைந்து சினிமா பாட்டுச்சாலைப்  பயணத்தைத் தொடங்கினார். படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெற்றன.

ஏவி.எம்  ஆர்.ஆர் ஒலிப்பதிவுக் கூடத்தில் ‘ஆனந்த புன்னகைக் காலம்...’ என்ற முதல் பாடல் உருவானது. சினேகன் எழுதியிருந்தார்.  திப்பு - ஹரிணி பாடினார்கள். ‘வானவீதியில்...’ பாடலை   செங்கதிர்வாணன் எழுத,  ஹரீஷ் ராகவேந்திரா பாடினார்.
மாணிக்க விநாயகம்  மற்றும் ‘ஒத்த ரூவா தாரேன்’ பாடல்  புகழ் தேவி இணைந்து பாடிய  ‘சிரிக்குது சிரிக்குது சின்னப்பொண்ணு...’ பாடல் சிறப்பான வரவேற்பைப் பெற்றது.

அடுத்து கிடைத்த படம், ‘பாடும் குயிலே’. இயக்கம் - பாடல்கள் நந்தகுமார்.   கே.எஸ்.சந்துரு, குமாரி பாபு  என இரண்டு பாடகர்களை அறிமுகம் செய்தார். ‘பாடும் குயிலே பாட்டுச்சொல்லி நான் தரவா…’, ‘சோல பூஞ்சோல…’, பாடல்களுடன் ‘வண்ண வண்ண கனவுகள்...’ என்று  அன்புராஜ் பாடிய பாடலும் கவனத்தை ஈர்த்தன. தொடர்ந்து இரண்டு கன்னடப்படங்களுக்கு  ரீ ரெக்கார்டிங் செய்தார்.

மாஜினி  இயக்கத்தில் ‘கடைசிப்பக்கம்’ படத்தில் ஒரேஒரு குத்துப்பாட்டுக்கு அன்புராஜ் இசையமைத்தார்.  ‘குயிலுக்குப்பம் கொய்யாத்தோப்பு ராணி...’ என்ற அந்தப்பாடலை   கிரேஸ் கருணாஸ்- அந்தோணிதாஸ் பாடினார்கள். எழுதியவர் மெய்யழகன். இவரது  இசையில் சங்கர் கணேஷ் பாடியிருக்கிறார்.

எம்.பி.ஸ்ரீனிவாஸ் ‘ சேர்ந்திசைக்குழுவில் இடம்பெற்று, நல்ல ஆர்மோனியக்கலைஞர்’ என அவரிடம்  பெயர் வாங்கியிருக்கிறார். ஐந்து ஆண்டுகள் அவருடன் இசைப்பணி தொடர்ந்தது.

‘வண்டியூர் பாண்டிச்சாமி’  படத்தில்  நாட்டுப்புறப்பாடகி புதுவை உமாவை  அறிமுகம் செய்துவைத்தார் இவர். அதில்  முத்துலிங்கம் எழுதிய ‘பொன்வானிலே…,’ பாடலை   ஹரீஷ் ராகவேந்திரா பாடினார். இளையகம்பன் எழுதிய  ‘வெண் ணிலவே கொஞ்சம் நில்லடி’ பாடல்  பத்மலதா - பிரசன்னா குரல்களில் ஒலித்தது.

‘முப்போக மழையே…’ பாடலை யுகபாரதி எழுத,  பிரசன்னா - லேகா பார்த்தசாரதி பாடினார்கள். ‘கொட்டுச்சத்தம் கேட்டுருச்சி…’ பாடலை படத்தின் இயக்குநர்  திருப்பதி எழுதி,  அன்புராஜ்- புதுவை உமா குரல்களில் ஒலித்தது.

வீட்டு நிர்வாகத்தை மனைவி புஷ்பா கவனித்துக் கொள்வதால், கவனம் சிதறாமல், இசைப்பணி ஆற்ற முடிகிறது  என்கிறார் அன்புராஜ். இவரது  மகள் இலக்கியா, ராணிமேரி கல்லூரியில் சமூகவியல் படிக்கிறார். குண்டு எறிதல் விளையாட்டில் அசத்தும் இவருக்கு ,  நல்ல குரல்வளம் இருப்பதால் விரைவில் பாடகியாகப் பார்க்கலாம்.  மகன் ரவிகரண் கீபோர்டு பிளேயராக   தேர்ச்சி பெற்றுள்ளார்.

இப்போது பாலுமகேந்திராவின் உதவியாளர் சாய் சுப்ரமணி இயக்கத்தில் தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கத் தலைவர் தமிழமுதன் வரிகளில் ‘திருடன் கையில சாவி’, ‘உன் விழியில் என் பார்வை’ படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அன்புராஜ்.

அடுத்த இதழில் பாடலாசிரியர் பிரியன்

நெல்லைபாரதி