‘மருது’



அக்கா பெத்த ஜட்கா வண்டி!

துடிக்கும் புஜங்களும், கருங்கல் மார்புமாக கிண்ணென்று கரிக்கட்டையாக இருந்தாலும் நாட்டுக்கட்டை தோற்றத்தில் காணப்படும் விஷாலுக்கு என்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் கதகளி கலாட்டாதான் ‘மருது’.

படத்தின் கதைப்போக்கு விஷாலின் ஹோம்கிரவுண்டு என்பதால் வூடு புகுந்து ரவுண்டு கட்டி ரத்தம் தெறிக்க தெறிக்க அடிக்கிறார். வெள்ைளச்சட்டையோடு படம் பார்க்க தியேட்டருக்குள் போனவர்கள் வெளியே வரும்போது சிகப்புச்சட்டையாக மாறி வருமளவுக்கு அடிதடி ஆர்ப்பாட்டத் திருவிழா.

ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு கோடையில் கிடைத்திருக்கும் குளிர்தரு இந்தப் படம்.ராஜபாளையம் வட்டார அரசியல் வானில் தேர்தல் போர் முழக்கம். அல்லக்கை, அடியாள் என்று படிப்படியாக பிரமோஷன் வாங்கி எம்.எல்.ஏ ஆகத்துடிக்கும் ஆர்.கே.சுரேஷ். அவருக்கு காட் ஃபாதராக ‘பயில்வான்’ ராதாரவி.

சம்பந்தமே இல்லாமல் இந்த ஏரியாவுக்குள் என்ட்ரி கொடுக்கும் சுமைதூக்கும் பாட்டாளியான விஷால், சுரேஷின் கனவுகளைத் தவிடுபொடி ஆக்குகிறார். விஷாலுக்கும், சுரேஷுக்கும் மோதல் ஏற்பட காரணம் ஹீரோயின் ஸ்ரீதிவ்யா. ஹீரோயினின் தாயாரை சுரேஷ், ஒரு பிரச்சினையில் போட்டுத்தள்ள, ஸ்ரீதிவ்யா சாட்சி சொன்னால் எம்.எல்.ஏ. ஆக முடியாது என்கிற எண்ணத்தில் அவரையும் போட்டுத்தாக்க சுரேஷ் துடித்துக் கொண்டிருக்கிறார். அவரது துடிப்பை அடக்குவதோடு, ராஜபாளையத்தையும் காக்கிறார் ‘மருது’.

தென்மாவட்ட மக்களையும், சமகால அரசியல் நிகழ்வுகளையும் இரண்டரை மணி நேரப் படத்தில் நம் கண் முன்னே நிறுத்தியிருக்கிறார் இயக்குநர் முத்தையா. விஷாலின் பாட்டியாக நடித்திருக்கும் கேரளத்து வரவு ஷீலா, தமிழ் சினிமாவில் மனோரமாவின் இடத்தை நிரப்ப தாராளமாக முயற்சிக்கலாம். விஷால், சூரி, ஸ்ரீதிவ்யா, ஷீலா, சுரேஷ், ராதாரவி என்று படத்தின் முக்கியமான பாத்திரங்கள் அத்தனை பேருமே தாங்கள் ஏற்றுக்கொண்ட பாத்திரத்தை அப்படியே வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.

இமானின் இசையும், வேல்ராஜின் ஒளிப்பதிவும் வெயில் நகரமான ராஜபாளையத்து வெப்பத்தை தியேட்டரில் பரவச் செய்கிறது. ‘சூறாவளிடா’ பாடலில் சூடும், ‘அக்கா பெத்த ஜட்கா வண்டி’யில் அமோக கவர்ச்சியும் கேரண்டி. கிளைமேக்ஸில் பாட்டியை பழிவாங்க வில்லன் செய்யும் டெக்னிக் கொடூரம். நிஜவாழ்வு வில்லன்களுக்கு ‘தொழில்’ கற்றுத் தருவதாக அந்தக் காட்சிகள் அமைந்துவிட்டன.‘மருது’, மார்பு வரைக்கும் நிறைக்கும் மசாலா விருந்து.