சவுகார் ஜானகி ரசிகர் சீற்றம்!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

 மிஸஸ் கபாலியின் நடுப்பக்க கவர்ச்சி பாய்ச்சல் கோடைக்காலத்தில் செம்பரம்பாக்கத்தை திறந்து விட்டது மாதிரி ஜிலீர் வெள்ளத்தை வாசகர்களின் நெஞ்சத்தில் பெருக்கெடுத்து ஓடவைத்து விட்டது.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

நடிகர் சங்க செயலாளர் விஷாலின் பேட்டி நறுக்கென்று இருந்தது. யார் கண்டது, 2021ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வல்லமை பொருந்தியவர்களில் ஒருவராக புரட்சித்தளபதி விஷாலும் உருவெடுக்கக்கூடும்.
- பழனி நகர ஒன்றிய விஷால் தலைமை ரசிகர்கள் நற்பணி இயக்கம்

பிரியாமணிக்கு பரிசம் போட்டாச்சு என்கிற தகவலால் அனலில் இட்ட புழுவாய் துடித்துப் போனோம். மனசைத் தேற்றிக்கொண்டு, எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்துகிறோம்.
- ப.முரளி, சேலம்.

நடுப்பக்க ராதிகா ஆப்தேவின் படம் ஜில். அதற்கு நீங்கள் கொடுத்த கேப்ஷன் ஜங். பின்பக்க ‘மலையோடு மோதாதே’ அட்டைப்படம் ஜக்.
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

பளபளக்கும் கவர்ச்சிப் படங்களுடன் ‘சரோஜாதேவி பதில்கள்’ தொகுக்கப்பட்டு ஏ4 அளவில் பெரிய புத்தகமாக வரவேண்டும் என்பதே வாசகர்களின் கனவு. ‘வண்ணத்திரை’, எங்கள் ஆசையை நிறைவேற்றுமா?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

சூர்யா நடித்த ‘24’ படம் குறித்த விமர்சனம், அத்திரைப்படத்தை திரையில் காண்பதை போன்ற பரபரப்பை வாசிப்பிலேயே ஏற்படுத்தி விட்டது.
- ஏ.பி.எஸ்.ரவீந்திரன், வள்ளியூர்.

‘கபாலி’ திரைப்படத்தின் டீசர் ஏற்படுத்திய காய்ச்சலே இன்னும் சரியாகாத நிலையில்,        ‘வண்ணத்திரை’ ஆசிரியர் குழுவினர் ஒட்டுமொத்தமாக  ராதிகா ஆப்தே   தொண்டர்களாக மாறிவிட்டீர்களா? அதிருக்கட்டும். அதென்ன, மூடிக்கிட்டு நடிக்க நானென்ன சவுகார் ஜானகியா என்று இளக்காரமான கேள்வி.

‘புதிய பறவை’ படத்தில் ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ பாடலில் அவர் கண்களாலேயே காட்டிய கவர்ச்சிக்கு வேறெவராவது ஈடாக முடியுமா? இந்தக்கால இளசுகளுக்கு அந்தக்கால சவுகார்  ஜானகியின் அருமை எங்கிருந்து புரியப் போகிறது?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.