17 ஆண்டுகளாக செருப்பே அணியாத ஒளிப்பதிவாளர்! ரகசியம் என்ன?



சமீபத்தில் வெளியான ‘ஆய்வுக்கூடம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் மோகன். சுமார் இரண்டாயிரம் படங்களில் வேலை பார்த்திருக்கும் இவரை கோலிவுட்டில் ‘செருப்பு போடாத மோகன்’ என்றுதான் சொல்கிறார்கள்.

வித்தியாசமான அடைமொழியோடு அழைக்கப்படும் ஒளிப்பதிவாளரை பேட்டிக்காக சந்தித்தோம்.“உங்க முன்கதைச் சுருக்கம்?”

“சொந்த ஊர் நன்னிலம் அருகே அச்சுதமங்கலம். சின்ன வயசுலேருந்தே சினிமா ஆர்வம். எவ்வித சினிமாப் பின்னணியும் இல்லைன்னாலும் என்னோட ஆர்வத்துக்கு எங்க வீட்டில் யாரும் தடை போடலை.

ஒரு சுபதினம் பார்த்து சென்னைக்கு டிக்கெட் எடுத்தேன். பெரிய இயக்குநர் ஆகணும் என்கிற லட்சியத்தோடு இங்கே வந்த எனக்கு சினிமா கம்பெனிகளில் ஆபீஸ்பாய் வேலை கூட கிடைக்கலை. அப்புறமா அரும்பாடுபட்டு சினிமாவில் கிடைக்கிற சின்ன சின்ன வேலைகள் எல்லாத்தையும் இழுத்துப்போட்டு செய்தேன். பெருசா சம்பாதிச்சிடலை. உதவி இயக்குநராக சில படங்களில் வேலை பார்த்திருக்கேன்.

குமார் பவர் யூனிட்டில் வேலை பார்க்கிறப்போ முன்னணி ஒளிப்பதிவாளர்கள் பலருடைய அறிமுகம் எனக்கு கிடைச்சுது. அந்த வகையிலேதான் சுமார் இரண்டாயிரம் படங்களுக்கு மேலாக கேமரா யூனிட்டில் லைட்பாய், அசிஸ்டெண்ட் கேமராமேன்னு எல்லா வேலையையும் பார்த்திருக்கேன்.திரைப்படக் கல்லூரிகளில் படிப்பவர்களுக்குக் கூட கேமராவை தொட்டுப் பார்த்து வேலை செய்யுற அனுபவம் கிடைக்காது.

ஆனா, எனக்கு முன்னணி கேமராமேன்களோட கேமராவை ஆபரேட் செய்யுற வாய்ப்பு கிடைத்தது. பெரிய பெரிய ஜாம்பவான்களிடமிருந்து அனுபவ அறிவை கற்றேன். சினிமாவைப் பொறுத்தவரைக்கும் அனுபவசாலிகள் சொல்கிற பாடங்களை ஒழுங்காக கற்றுக் கொள்பவனே நல்ல சினிமாக்காரனாக முடியும்.”

“முதன்முதலா தனிக்கடை போட்ட படம் எது?”“எவர்ஸ்டார் ராஜகணபதி சார்தான் என்னை ‘ஆய்வுக்கூடம்’ படத்தில் ஒளிப்பதிவாளரா அறிமுகப்படுத்தினாரு. அதுக்கப்புறம் ‘யானை மேல குதிரை சவாரி’, ‘வடபழனி பாதசாரிகள்’, ‘பாபாசாகிப்’, ‘அங்காளம்மா எங்கள் செங்காளம்மா’, ‘முடிவுகள் தொடரட்டும்’, ‘ஜீபூம்பா’ன்னு வரிசையா ஒரு டஜன் படங்களுக்கு ஒளிப்பதிவு செஞ்சிக்கிட்டிருக்கேன்.

கேமரா தொழில் நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. நான் தொழில் கத்துக்கிட்டப்போ ஃபிலிம் தொழில்நுட்பம் இருந்தது. இப்போ முழுக்க டிஜிட்டல்தான். சினிமாவில் என்னோட அனுபவத்துக்கு வயசு பதினேழு. எனக்கு எல்லாம் தெரியும்னு இல்லாம டிஜிட்டல் மேக்கிங்கில் புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர்களிடமும் உதவியாளனா சேர்ந்து தொழில்நுட்பதை கத்துக்கிட்டேன்.

அப்போ என்னை நண்பர்கள் கிண்டல் கேலி செஞ்சாங்க. ஆனா டிஜிட்டல் படங்களில் வேலை பார்த்தப்போதான் என்னுடைய அறிவு விசாலமானது. சினிமாவில் ஒரு டெக்னீஷியன் நவீன வளர்ச்சியை தெரிஞ்சு வெச்சுக்கிறது ரொம்ப ரொம்ப அவசியம். நமக்கு தெரியாத விஷயத்தை ஜூனியரா இருந்தாலும் அவங்க கிட்டே ஈகோ இல்லாம கேட்டுத் தெரிஞ்சுக்கணும்.”

“ஒளிப்பதிவாளர்கள் அதிகம் முக்கியத்துவம் தர வேண்டியது யதார்த்தத்திற்கா? அழகுணர்ச்சிக்கா?”“அதையெல்லாம் கதைதான் முடிவு பண்ணுது. பொதுவா ஒளிப்பதிவாளர் கவனிக்க வேண்டிய விஷயம் எதுன்னா படத்தை கதைக்கு தேவையான கலரில் காட்டுறது. உலகத்திலேயே மிகச் சிறந்த கேமரா நம்முடைய கண்கள்தான்.

கேமரா மூலம் உலகத்தைப் பார்க்கும் போதும் கண்களால் பார்க்க முடிகிற யதார்த்தத்தை ஸ்கிரீனுக்கு அப்படியே கடத்த முயற்சிக்கணும். கமர்ஷியல் படங்களில் ஹீரோ, ஹீரோயினை அழகா காண்பிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். ‘விசாரணை’ போன்ற படங்களில் யதார்த்தம்தான் பேசும். பேசணும்.”

“கேமராமேன்களால் படத்தின் பட்ஜெட் உயருதுங்கிற குற்றச்சாட்டு உண்மையா?”“இந்த குற்றசாட்டு ஃபிலிமில் எடுக்கும்போதும் இருந்தது. இப்பவும் இருக்குது. எந்தவொரு கேமராமேனும் பட்ஜெட்டை உயர்த்தணும் என்கிற நோக்கத்தில் வேலை செய்யமாட்டாங்க. உண்மையில் அவங்கதான் பட்ஜெட்டை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறாங்க.

ஆர்டிஸ்ட் கால்ஷீட் நிலவரம், சீதோஷண நிலை என எல்லாத்தையும் மனசில் வெச்சு ஒரு படத்துக்கு தேவையான  ஃபுட்டேஜை சரியான சமயத்தில் எடுத்து வெச்சிருப்பாங்க. செலவைப் பொறுத்தவரை ஃபிலிமில் எடுக்கறப்போ என்ன ஆச்சோ, அதே அளவுக்குதான் டிஜிட்டலில் எடுக்குறப்பவும் ஆவுது. அப்போ ஃபிலிம் கேன். இப்போ ஹார்ட் டிஸ்க். அவ்வளவுதான் வித்தியாசம்.”“அதிருக்கட்டும்.

நீங்க செருப்பே போட மாட்டீங்களாமே?”“வைராக்கியம்தான் காரணம். பதினேழு வருஷமா செருப்பு அணியறதில்லை. ஆரம்பத்திலே ஒரு படத்திலே உதவி இயக்குநரா வேலை பார்த்தேன். க்ளாப் போர்டு சரியா பிடிக்கலைன்னு அந்தப் படத்தோட டைரக்டர் என் மேலே செருப்பை வீசினார். க்ளாப் போர்டே பிடிக்கத் தகுதி இல்லைன்னு அன்னைக்கு அவமானப்பட்டேன்.

நானே க்ளாப்னு சொல்லக்கூடிய இயக்குநர் நாற்காலியில் உட்கார்ற வரைக்கும் செருப்பு அணியறதில்லைன்னு அன்னிக்கு சபதம் எடுத்தேன். சீக்கிரமா சபதத்தை முடிச்சி செருப்பு மாட்டிப்பேன்னு நம்பிக்கை இருக்கு.”“இதைத்தவிர லட்சியம்னு வேற ஏதாவது?”

“எத்தனையோ முன்னணி ஹீரோக்களோடு வேலை பார்த்திருந்தாலும், அஜீத் சாரோட வேலை பார்த்த அனுபவம்தான் மறக்க முடியாதது. ‘ஜீ’, ‘காட்பாதர்’ போன்ற படங்களின் போது படப்பிடிப்புத் தளத்தில் சாதாரண டெக்னிஷீயன்கள் மீது அவர் காட்டிய அன்பு மறக்க முடியாதது. எல்லார் மேலேயும் அக்கறை செலுத்தணும்னு ஒரு பெரிய ஹீரோவுக்கு என்ன தலையெழுத்தா?

ஆனா, யூனிட்டில் இருக்குற அத்தனை பேரோடும் சகோதரத்துவத்தோடு அவர் பழகினார். சினிமாவில் அவமானங்களையே அதிகமா சந்தித்த எனக்கெல்லாம் அவர் ரொம்ப பெரிய இன்ஸ்பிரேஷன். என் வாழ்நாளில் ஒரே ஒரு படமாவது அஜீத் சாரை இயக்கணும் என்பதுதான் என்னோட லட்சியம். என்னை மாதிரி ஒரு ஆயிரம் பேராவது இதே லட்சியத்தோடு கோடம்பாக்கத்தில் அலையறாங்க.”

- சுரேஷ்ராஜா