வெளிநாட்டிலும் குரல்தெளிக்கும் விருத்தாசல வேல்முருகன்!



கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள முதணை கிராமத்தில் தனசேகரன் -அமிர்தம்பாள் தம்பதியின் மகனாகப் பிறந்தார் வேல்முருகன். விவசாயக் குடும்பத்தில் பிறந்ததால் பெற்றோருக்குத் துணையாக அவ்வப்போது வயல்வேலைக்குப் போவார். அப்போது அங்கே பெண்கள் பாடும் கிராமியப் பாடல்களால் ஈர்க்கப்பட்டு, அதேபோல பாடி அனைவரையும் அசத்தியிருக்கிறார்.

பள்ளி வகுப்பறையில் நாட்டுப்புறப்பாடல் பாடி, சக மாணவர்களை சந்தோஷப்படுத்திக் கொண்டிருந்தவரை, வரலாற்றுப்பாட ஆசிரியர் ராஜேந்திரன், தலைமை ஆசிரியரின் அறைக்கு அழைத்துப் போயிருக்கிறார். பயந்துகொண்டே போனவருக்கு, பாட்டுத்திறனுக்கான பலன் கிடைத்தது. மாவட்ட ஆட்சியாளர் கலந்து கொண்ட விழாவில், ‘தலைவாரிப் பூச்சூட்டி உன்னை…’ பாடலைப்பாடி, பெருத்த வரவேற்பைப் பெற்றார்.



கோவையில் ஐ.டி.ஐ படிக்கும்போது விளையாட்டுத்துறை ஆசிரியர் ரமேஷ் உதவியால்,நிறைய இசைத்தட்டுகளில் பாடல் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. அம்மாவின் மறைவுக்குப்பின் மீண்டும் விருத்தாசலத்துக்கே திரும்பிய வேல்முருகன், முன்னர் படித்த பள்ளியிலேயே மேல்நிலைக் கல்வியைத் தொடர்ந்தார். தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம், மத நல்லிணக்கம், தீண்டாமை ஒழிப்பு என அந்தப்பள்ளியின் அத்தனை பகுதிகளிலும் இவரது பாட்டுக்குரல் பரவியது. மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் கரங்களால் வெள்ளிப்பதக்கம் உள்ளிட்ட பல பரிசுகளை வாங்கியிருக்கிறார் வேல்முருகன். பத்திரிகையாளர் மலர்தாசன் உதவியால் நிறைய அரங்குகளில் பாடும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

ரவிச்சந்திரன் வழிகாட்டுதலில் சென்னை இசைக்கல்லூரியில் சேர்ந்தார் வேல்முருகன். சுனாமி குறித்து இவர் எழுதிய கவிதையைப் பாராட்டி, அப்துல் கலாம் அனுப்பிய கடிதம், கல்லூரியில் அத்தனை பேரிடமும் இவரைக் கவுரவமாகக் கொண்டுபோய்ச் சேர்த்தது. அத்தனைபேரும் இவர் மீது அன்பு செலுத்த, கலா என்ற செளராஷ்டிர மாணவி காதல் வயப்பட்டார். பெண்ணைப் பெற்றவர்களின் எதிர்ப்பு இருந்தபோதும், நெய்வேலியில் சிறப்பாக நடந்துமுடிந்தது திருமணம். அந்த திருமண விழாவில், வாழ்த்த வந்தவர்கள் அனைவருக்கும் ஆச்சர்யமான கச்சேரியை அனுபவித்த திருப்தி கிடைத்தது. மணமகன் வேல்முருகன் பாட்டுப்பாட, மணமகள் கலா ஆட்டம் ஆடி மகிழ்வித்திருக்கிறார்.
 
சன் தொலைக்காட்சியில் ‘லலிதாவின் பாட்டுக்குப்பாட்டு’ நிகழ்ச்சியில் பாடியபோது, வேல்முருகனுக்கான வரவேற்பு வட்டம் பெரிதானது. இளைய கம்பன் எழுதி, மெட்டமைத்து, ஆதித்யன் பின்னணி இசையமைத்த  பத்துப்பாடல்கள் அடங்கிய ‘தாய்ப்பாசம்’ ஆல்பத்தைப் பாடி வெளியிட்டார் வேல்முருகன். அதில் இடம்பெற்ற ‘பத்துமாசம் என்னை சுமந்து பெத்து எடுத்த அம்மா/ உன் பாசத்துக்கு முன்னால எல்லாமே சும்மா…’ பாடலை தொலைக்காட்சியில் பாடியபோதுதான் வேல்முருகனின் விலாசம் வெளிச்சம் பெற்றது. அந்தப்பாடலை தொலைக்காட்சியில் பார்த்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அழைப்பு விடுத்திருக்கிறார். இயக்குநர் சசிகுமாருக்கும் பாடல் பிடித்துப் போனது. பின்னணிப்பாடகி சித்ராவின் ஒலிப்பதிவுக்கூடத்தில் ‘மதுர குலுங்க… குலுங்க…’ என்ற முதல் பாடலை ‘சுப்ரமண்யபுரம்’ படத்துக்காகப் பாடி, பாட்டுச்சாலையில் தனது பயணத்தைத் தொடங்கினார் வேல்முருகன்.



‘மண்ணிசை’ ஆல்பத்துக்காக கமல்ஹாசன் கரங்களால் விருது பெற்றதை உச்சகட்ட பெருமையாகக் கருதுகிறார் வேல்முருகன். நாமெல்லாம் கச்சேரி மேடையில் ஏறமுடியுமா என்று ஏங்கிய காலத்தில் பத்திரிகையாளர் ஹரிதாஸ் உதவியில் பி.சுசீலாவை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கியிருக்கிறார். காலண்டர்கள் கரைந்து கொண்டிருந்தன. ஒரு கல்லூரியின் ஆண்டுவிழாவுக்கு நடுவர்களாக  இவரும் சுசீலாவும் ஒரே விமானத்தில் பறந்திருக்கிறார்கள். சசிகுமார்- சமுத்திரக்கனி கூட்டணியில் ‘நாடோடிகள்’ படத்தில் ‘ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா…’ என்ற கபிலன் வரிகளைப் பாடியபோது, சினிமா இசைக்காரர்கள் இவரை சிநேகத்துடன் பார்த்தார்கள்.

உதயநிதி நடித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் இவர் பாடிய ‘வேணாம் மச்சி வேணாம் இந்த பொண்ணுங்க காதலு…’ என்கிற நா.முத்துக்குமாரின் பாடல் சிறப்பான சினிமா வரவேற்பைப் பெற்றது. அருள்நிதிக்காக ‘வம்சம்’ படத்தில் தாஜ்நூர் இசையில் பாடிய ‘ மன்னாதி மன்னரு…’ பாடல் கலைஞரால் ரசிக்கப்பட்டது. ‘கழுகு’ படத்தில் ‘ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்…’, ‘ஆடுகளம்’ படத்தில் ‘ஒத்த சொல்லாலே…’, ‘சகுனி’யில் ‘போட்டது பத்தல…’, ‘கொம்பன்’ படத்தில் ‘கறுப்பு நிறத்தழகி…’ என வேல்முருகனின் வெகுஜன விருப்பப் பாடல்கள் விரிந்து கொண்டே போகின்றன. இளையராஜா இசையில் ‘ஒரு ஊர்ல’ படத்தில் ‘இப்படியும் ஒருத்தனுன்னு…’ பாடலைப்பாடி, அவரது ஆசீர்வாதத்தைப் பெற்றிருக்கிறார்.

இவரை நடிக்கச்சொல்லி பல நண்பர்கள் கேட்டுக் கொண்டபோது மறுத்தவர், இப்போது சம்மதம் சொல்லிவிட்டார். இசையமைப்பாளர் அருணகிரியின் பரிந்துரையில், கவுண்டமணி நடிக்கும் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படத்தில், அவருடனே பயணிக்கும் புகைப்படக்கலைஞராக நடிக்கிறார். அறிமுகமான ஆறு வருடத்தில் 150 பாடல்களைத் தாண்டி, பயணம் தொடர்கிறது. வெளிநாட்டுத் தமிழர்களின் அன்பைப்பெற்ற பாடகர்களில் முக்கியமான இடத்தில் இருக்கிறார் வேல்முருகன். தமிழர்கள் வாழும் உலக நாடுகளிலெல்லாம் இவரது குரல் தெளிக்கப்பட்டுவருகிறது.