பாத்திரமறிந்து நடிக்கும் பார்வதி!



ஹீரோயினிஸம்

“எனக்கு படங்களின் எண்ணிக்கை முக்கியமல்ல. என்ன மாதிரி படங்கள் என்பதுதான் முக்கியம்” - இது மீடியாக்களின் நேர்காணலி–்ல் எல்லா நடிகைகளும் தவறாமல் சொல்கிற வாக்கியம்தான். வருடத்துக்கு 5 படம் நடித்திருந்தால் அதனை ெபருமையாக சொல்லும் நடிகைகள்தான் மார்க்கெட் இழந்து படங்களின் எண்ணிக்கை  குறையும்போது இப்படிச் சொல்வார்கள். ஆனால், இந்த வாசகத்தைச் சொல்லி அதன்படி நடந்தும் வருகிறவர் பார்வதி மேனன். தமிழ் ரசிகர்களுக்கு ‘பூ’ பார்வதி.

2006ம் ஆண்டு ‘அவுட் ஆஃப் சிலபஸ்’ என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானார் பார்வதி. கடந்த 9 ஆண்டுகளில் 15 படங்களில்தான் நடித்திருக்கிறார். மலையாளம், கன்னடம், தமிழ் மூன்று மொழிகளையும் சேர்த்து மொத்தமே இவ்வளவுதான். ஆனாலும் தென்னிந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் ஹீரோயின். இவருடன் அறிமுகமான வேறு சில நடிகைகள், 50 படங்களைத் தாண்டிவிட்டார்கள். தமிழில் பார்வதி, தான் பங்குபெற்ற படங்களைவிட, நடித்த கேரக்டரால்தான் அதிகம் அடையாளம் காண்கிறார். மாரி (பூ), அதிதி (சென்னையில் ஒரு நாள்), பனிமலர் (மரியான்), மனோன்மணி (உத்தம வில்லன்). இப்படித்தான் மலையாளம் மற்றும் கன்னடத்திலும். கடைசியாக இவர் நடித்த ‘என்னு நிண்ட மொய்தீன்’ மலையாளப் படத்தின் காஞ்சனா கதாபாத்திரம் மலையாள ரசிகர்களை உருக வைத்துக் கொண்டிருக்கிறது.
‘பூ’ வெளிவந்த பிறகு அதே கிராமத்துப் பெண் வேடத்தி–்ல் நடிக்க குறைந்தது பதினைந்து வாய்ப்புகள் வாய்த்தன.



“மாரி ஒருவள்தான். அவள் மாதிரி இன்னொரு மாரியாக என்னால் நடிக்க முடியாது” என்று அத்தனை படங்களையும் நிராகரித்து விட்டு மலையாளத்துக்கே சென்று விட்டார். பல வருடங்களுக்குப் பிறகு ‘சென்னையில் ஒரு நாள்’ படத்தில் நடிக்கத்தான் திரும்பி வந்தார். அது ஒன்றும் ஹீரோயின் கேரக்டர் அல்ல. சிறிய கேரக்டர்தான். இருந்தாலும் விரும்பி நடித்தார். ‘மரியான்’ படத்தில் தனுஷிடம் உதை வாங்கும் பனிமலர் கேரக்டர் காலத்தை கடந்தும் நிற்கும். இப்படி அவரது கேரக்டர்கள் பற்றி நிறையச் சொல்லலாம். “படமும் கேரக்டரும்தான் எனக்கு பிரதானம். பணமும், புகழும் பெரிதல்ல. வருடத்திற்கு ஒரு படம் போதும். அதுவும் அமையாவிட்டால் வீட்டுத் தோட்டத்தில் காய்கறி பயிரிட்டு பிழைப்பேனே தவிர தவறான படங்களில் தவறான கேரக்டர்களில் நடிக்க மாட்டேன்” என்கிறார். பார்வதி மேனன் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் என்றால் அந்தப் படம் தரமான படம் என்று பொருள். இப்படி ஒரு இமேஜ் வேறெந்த நடிகைக்காவது இருக்கிறதா என்று தெரியவில்லை.

சம்பளத்தைப் பற்றி அலட்டிக் கொள்ளாத நடிகை; கிசுகிசுவில் சிக்காத நடிகை; எத்தனை பெரிய ஹீேராவாக இருந்தாலும் கேரக்டர் பிடித்திருந்தால் மட்டுமே இணைந்து நடிப்பேன் என்கிற துணிச்சல் - இவைேய பார்வதியை மற்ற ஹீரோயின்களிடமிருந்து தனித்து காட்டுகின்றன. “நடிப்பு என்பது எனக்கு பணம் சம்பாதிக்கும் தொழில் அல்ல. அது நான் நேசிக்கும் ஒரு கலை. அந்தக் கலையை நல்லவிதமாகச் செய்ய முடியாவிட்டால் விலகி இருப்பேனே தவிர கலையை தவறாகப் பயன்படுத்த மாட்டேன்” என்கிறார். இளம் வயது, வாய்ப்புகள் வாசல் வரை வந்து நிற்கும் சூழ்நிலை. அப்படி இருந்தும் எந்த சூழ்நிலையிலும் தனது பாலிசியை மாற்றிக்கொள்ளாத பார்வதி நிஜ வாழ்க்கையிலும் ஹீரோயினாகவே தொடர்கிறார்.

- மீரான்