பஞ்சாபி லஸ்ஸி ரகுல் பராக் பராக்!



அது என்ன மாயமோ தெரியவில்லை, தமிழில் கல்லா கட்ட முடியாதவர்கள், தெலுங்கில் தாறுமாறாக கட்டுகிறார்கள். லேட்டஸ்ட் உதாரணம், ரகுல் ப்ரீத் சிங். ‘தடையற தாக்க’, ‘புத்தகம்’, ‘என்னமோ ஏதோ’ என்று இங்கே டல்லடித்தவர், தெலுங்குக்கு போனபிறகு அங்கே கோயில் கட்டுமளவுக்கு மவுசு பெற்றிருக்கிறார். ரவிதேஜா, ராம்சரண் என்று முன்னணி ஹீரோக்களுடன் வூடு கட்டி அடிக்கிறார். ரகுல், முதன்முதலாக அறிமுகமானது ‘கில்லி’ என்கிற கன்னடப் படத்தில். இந்தப் படம் வேறொன்றுமில்லை, நம்ம 7ஜி படத்தின் ரீமேக்தான். டோலிவுட்டில் ரகுலின் லேட்டஸ்ட் பரபரப்பு, அவர் ராம்சரணோடு ஜோடி சேர்ந்திருக்கும் ‘புரூஸ்லீ-2’ படம்தான்.

சமீபத்தில் தமிழ், தெலுங்கு இருமொழிகளிலும் ஹிட்டடித்த மகேஷ்பாபுவின் ‘செல்வந்தன்’ தயாரித்த பத்ரகாளி பிலிம்ஸ் பிரசாத் இந்த படத்தை தமிழில் வெளியிடுகிறார். தமிழில் ரகுலுக்கு முதல் படம் ‘தடையற தாக்க’. அந்தப் படத்தின் ஹீரோ அருண்விஜய், இதில் வில்லன். இவர்களோடு முக்கியமான வேடத்தில் நம்ம நதியாவும் உண்டு. இசை தமன். ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா. வசனம் ஏ.ஆர்.கே.ராஜராஜா. தெலுங்கின் அதிரடி மசாலா இயக்குனரான சீனு வைட்லா இயக்கியிருக்கிறார். ஆடியோ விழாவுக்கு வந்திருந்த ரகுல் பிரீத்தியை கொஞ்சம் ஓரங்கட்டினோம்.



“நேரடியா இல்லைன்னாலும், இன்டைரக்டா மீண்டும் தமிழுக்கு வந்திருக்கேன் என்பது சந்தோஷமா இருக்கு. இது டப்பிங் படம் மாதிரி இருக்காது. தமிழ், தெலுங்கு இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாக்கப்படும் படம். நேரடி படத்தில் நடிக்கிறப்போ என்ன ஃபீலிங்கோ, அதையேதான் படப்பிடிப்பிலும் உணர்ந்தேன். கூட வேலை பார்த்த நடிகர்கள், டெக்னீஷியன்கள் பெரும்பாலும் தமிழர்கள்தான். இதில் மாடர்ன் கேரக்டர். ராம்சரணும் செம்ம ஸ்டைலிஷா பண்ணியிருக்கார். இந்தப் படத்துக்கு பக்கம் பக்கமா எனக்கு வசனங்கள்.  திணறிட்டேன். தெலுங்கில் பேச ராம்சரணும், தமிழில் பேச அருண்விஜய்யும் பொறுமையா சொல்லிக் கொடுத்தாங்க. ராம்சரணோடு நான் முன்னாடியே ஒரு படத்தில் இணைந்து நடிச்சிருக்கணும்.

போட்டோஷூட் கூட பண்ணாங்க. ஆனா, அப்போ ரவிதேஜாவோடு ‘கிக்-2’ படத்துலே நடிச்சிக்கிட்டு இருந்ததாலே கால்ஷீட் பிரச்சினை வந்து அந்தப் படத்தை பண்ண முடியாமப் போயிடிச்சி. ச்சே... மெகாஸ்டார் பையனோடு நடிக்க முடியாம ஆயிடிச்சேன்னு வருத்தத்துலே இருந்தப்போ இந்த வாய்ப்பு கிடைச்சது. அதனாலே ‘புரூஸ்லீ-2’ எனக்கு ரொம்ப ஸ்பெஷல் படம். ராம்சரண், படப்பிடிப்பின்போது பயங்கர சீரியஸா உம்மணாம்மூஞ்சி மாதிரி இருப்பாரு. ஆனா வேலை முடிஞ்சதுமே அவரளவுக்கு ஒரு கலாட்டாவான பேர்வழியை பார்க்க முடியாது. ரொம்ப ஜாலியா பண்ணியிருக்கோம். படம் பார்த்தா நீங்களும் அதை உணரமுடியும்.”

- சுரேஷ் ராஜா