வாடகை வீட்டில் வேதனை வாழ்க்கை!



சசிகுமாரின் உதவியாளர் வைகறை பாலன் அறிமுக இயக்குநராக களம் இறங்கும் படம் ‘கடிகார மனிதர்கள்’. இந்தப் படத்துக்கான பாடல் காட்சியை சென்னை செம்மொழிப் பூங்காவில் படமாக்கிக் கொண்டிருந்தார் நட்டியின் உதவியாளர் ஒளிப்பதிவாளர் உமா சங்கர்.
நாயகன் கருணாகரன், அறிமுக நாயகி ஷெரின் மற்றும் நடனக்கலைஞர்கள் ஆடிக்கொண்டிருந்தார்கள். நா.முத்துக்குமார் எழுதிய காதல் பெண்ணே/ காதல் பெண்ணே/ நான் பைத்தியமானேன்…’ என்ற  பாடலுக்காக நடன அசைவுகளை அமைத்துக் கொண்டிருந்தார் நடன இயக்குநர் கூல் ஜெயந்த்.  இயக்குநர் வைகறை பாலன் கொஞ்சம் ஓய்வாக இருந்த நேரத்தில் பேச்சுக் கொடுத்தோம்.



‘அதென்ன சார், வைகறை பாலன்-னு பேரு?’.

‘என்னோட பேரு பாலன். நான் பிறந்த நேரம் வைகறை என்பதால், அப்படி வைத்துக் கொண்டேன்’  என்று பெயர்க்காரணம் சொன்னார். தேனீ மாவட்டம் பள்ளத்தூரை சொந்த ஊராகக் கொண்ட இவர், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்தவர். நாடகவியலை ஒரு பாடமாகப் படித்ததால், சினிமா ஆர்வம் ஒட்டிக்கொண்டது. நா.முத்துக்குமார் உள்ளிட்ட கவிஞர்களுடன் பல கவியரங்குகளில் பங்கேற்றிருக்கிறார். கஞ்சா கருப்புவின் அறையில் தங்கியிருந்த நேரத்தில் சினிமா மக்கள் தொடர்பாளர் வீ.கே.சுந்தரின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. அவர், இவரை இயக்குநர் சசிகுமாரிடம் அறிமுகப்படுத்த, ‘சுப்ரமண்யபுரம்’ படத்தின் உதவி இயக்குநராக பொறுப்பேற்று பணியாற்றியிருக்கிறார். ‘விடுமுறை’ என்கிற இவரது குறும்படத்தில் நடித்த நண்பரின் பரிந்துரையில் பிரவீஷ்.கே. ,பிரதீப் ஜோஸ் தயாரிப்பில் முதல் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்.



‘கதை என்னன்னு சொல்லுங்க’

‘பிழைப்புத்தேடி கிராமத்திலிருந்து நகரத்துக்கு வரும் பலபேர், தங்களது வருமானத்தின் பெரும்பகுதியை வாடகை கொடுத்தே இழக்கிறார்கள். வீடு வீடாக மாறி, உள்நாட்டு அகதிகளாக வாழும் அவர்களைப் பற்றிய பதிவுதான் கதை. ‘பறவைக்கும் எறும்புக்கும்கூட வீடு உண்டு/ அது வாடகை தந்ததுண்டா?...’ என்ற பாடலை நான் எழுதியிருக்கிறேன். சாம்.சி.எஸ் இசையில் எல்லாப் பாடல்களும் இனிமையாக வந்திருக்கின்றன. நடுத்தர மக்கள் வசிக்கும் 100 வீடுகள் அடங்கிய குடியிருப்பை பாண்டிச்சேரியில் செட் போட்டு படமாக்கியுள்ளோம்.

கிஷோர், கருணாகரன் இருவரும் நாயகர்களாக நடித்துள்ளனர். கேரள அழகி ஷெரினை நாயகியாக அறிமுகப்படுத்தியுள்ளோம். தயாரிப்பாளர் பிரதீப் ஜோஸ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வாடகை வீட்டில் வசிப்போரின் வேதனைகளை, அனுபவ ரீதியாக பதிவு செய்திருக்கிறேன்’ என்கிறார் இயக்குநர் வைகறை பாலன். கருத்து சொல்லும் படங்கள் வெளிவரத்தொடங்கியுள்ள இந்த நேரத்தில், மனித வாழ்க்கையின் முக்கியமான பிரச்னையைக் கையிலெடுத்திருக்கும் ‘கடிகார மனிதர்கள்’ படக்குழு, தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்க வாழ்த்தி விடைபெற்றோம்.

-நெல்பா