இன்ஸ்யூரன்ஸ் பணத்துக்காக கொலைசெய்யவும் துணியும் இளைஞனின் கதை. நாயகன் திலீப்குமாருக்கு வெளிநாட்டில் வேலை செய்யும் பெண்ணை திருமணம் செய்து, அங்கேயே செட்டிலாகிவிட வேண்டும் என்பது லட்சியம். நாயகி திவ்யாசிங் அமெரிக்காவில் வேலைசெய்து வருகிறார்.

இவருடைய முதலாளியாக மற்றொரு திலீப்குமார் வருகிறார். இருவரும் காதலர்கள். ஒரு கட்டத்தில் பெரிய அளவில் நஷ்டத்தை சந்திக்கிறார் முதலாளி திலீப்குமார். நஷ்டத்தை சரிக்கட்ட தன்னைப் போல் இருக்கும் அப்பாவி திலீப்குமாரை கொலை செய்துவிட்டு இன்ஸ்யூரன்ஸ் பணத்தை கைப்பற்ற சதி திட்டம் தீட்டுகிறார். அந்த திட்டம் வெற்றியா, தோல்வியா என்பதுதான் படம்.
திலீப்குமார் டபுள் ஆக்ஷனில் வித்தியாசம் காட்ட ரொம்பவே போராடியிருக்கிறார். திவ்யாசிங் ஃபாரின் ரிட்டர்ன் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்துகிறார். கிளாமரும் அவருக்கு கை கொடுக்கிறது. மயில்சாமி, சிங்கமுத்து ஆகியோர் காட்சிகள் குறைவாக இருந்தாலும் சிரிக்க வைக்கிறார்கள்.
இளவரசு, கோவைசரளா கேரக்டருக்கு சிறப்பு செய்திருக்கிறார்கள். ராம்ஜி, ஜான் பீட்டர் இசையில் பாடல்கள் பரவாயில்லை. முரளியின் விறுவிறுப்பான ஒளிப்பதிவு கதைக்கு பலம். காமெடி நடிகர்களை வைத்து கல கலப்பாக கதை சொல்லி யிருக்கிறார் இயக்குனர் சசிசங்கர்.