வெய்ட் லவ்; லைட் ஆக்க்ஷன்!



“பெயரைக் கேட்டதும் இது படு பயங்கரமான ஆக்க்ஷன் படம் என்று நினைக்க வேண்டாம். ஒரு எளியவனுக்குத்தான் ‘வலியவன்’னு பேர் வெச்சிருக்கிறேன்” - புன்னகையுடன் பேசுகிறார் இயக்குனர் சரவணன். ஜெய்யை ‘எங்கேயும் எப்போதும்’ படத்துக்காகவும் விக்ரம் பிரபுவை ‘இவன் வேற மாதிரி’ படத்துக்காகவும் இயக்கியவர்.


கதை?

நம்முடைய நார்மல் லைஃப்ல நடக்கும் சம்பவங்களை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறேன். இது சிட்டியில் நடக்கிற கதை. லவ் போர்ஷன் அதிகமாக இருக்கும். ஆக்ஷன் போர்ஷன் லைட்டாக இருக்கும். மீண்டும் ஜெய்யுடன் இணைந்து வேலை செய்கிறேன். அஞ்சலிக்கு பதில் ஆண்ட்ரியா.

எப்படியிருக்கிறார் ஜெய்?

இந்தப் படத்தில் வினோத் என்ற மாடர்ன் பையனாக வர்றார். ஆனால் நார்மல் பையன் போல்தான் அவருடைய கேரக்டர் இருக்கும். ரொம்பவும் அடக்கி வாசித்திருக்கமாட்டார். ரொம்பவும் ஹீரோயிசம் காட்டியிருக்கமாட்டார். சுபிக்ஷா என்ற கேரக்டர்ல ஆண்ட்ரியா வர்றார். இவருக்கும் படத்துல ஸ்பெஷல் லுக் இருக்காது. நார்மல் கேர்ள் போல்தான் வர்றார். முக்கியமான கேரக்டர்ல அழகம் பெருமாள் வர்றார்.

பாடல்கள் எப்படி வந்திருக்கு?

படத்துல மொத்தம் ஐந்து பாடல்கள். கதைக்கு என்ன தேவையோ அதை மிகச் சரியாகக் கொடுத்திருக்கிறார் டி.இமான். ஒளிப்பதிவு ‘சூதுகவ்வும்’ தினேஷ். கதையின் பெரும் பகுதி சென்னையில்தான் நடக்கிறது. செட் போட்டால் என்ன பிரம்மாண்டம் கிடைக்குமோ அதை கொடுத்திருக்கிறார். தயாரிப்பாளர் எஸ்.கே.ஸ்டுடியோஸ் சம்பத்துக்கு இதுதான் முதல் படம். சினிமாவை நேசிக்கக் கூடியவர் என்பதால் தாராளமாய் செலவு செய்திருக்கிறார். இது யதார்த்த வாழ்க்கையை மீறாமல் எடுக்கப்பட்ட ஜனரஞ்கமான படமாக இருக்கும்” என்கிறார் சரவணன்.

-ரா