செல்வம் தயாரிப்பில் படிப்பா? அறிவா?



அர்ஜுன், ஆனந்தபாபு, கவுண்டமணி, செந்தில் உட்பட நிறைய நடிகர்களுக்கு பி.ஆர்.ஓ, மேனேஜராக பணியாற்றியவர் மதுரை செல்வம். சினிமா வட்டாரத்தில் இவருக்கு குண்டு செல்வம் என்ற செல்லப் பெயரும் உண்டு. தொடக்க கால ‘வண்ணத்திரை’யில் குண்டுப் பையன் என்ற பெயரில் எழுதியும் இருக்கிறார்.  27 வருட சினிமா அனுபவம் உள்ள இவர் முதன் முறையாக தன்னுடைய அம்மா வேலம்மாள் பெயரில் படக் கம்பெனி ஆரம்பித்து தயாரிக்கும் படம் ‘சீனி’.

பேங்கில் லோன் வாங்கி ஆஸ்திரேலியாவில் எம்.பி.ஏ படிக்கும் இளைஞன், படிப்புக்குப் பிறகு தமிழ்நாட்டில் சொந்தமாக பிசினஸ் தொடங்குகிறார். அந்த இளைஞனை ஒரு படிக்காதவன் தன் அறிவால் ஏமாற்றுகிறான். வாழ்க்கையில் ஜெயிக்க படிப்பு முக்கியமா? அறிவு முக்கியமா? என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார்களாம்.

லோக்கல் டி.வி ரிப்போர்ட்டர் கேரக்டரில் ஓவியா நடித்திருக்கிறார். புதுமுகம் சஞ்சய் நாயகன். பாலுமகேந்திராவின் ஸ்கூலில் நடிப்பு பயின்ற பரத் காமெடியனாக அறிமுகமாகிறார். கவுண்டமணியின் தீவிர ரசிகரான இவர், தன் வீட்டில் கவுண்டமணியின் போட்டோவை பெரிய சைஸில் மாட்டிவைத்துள்ளாராம்.

பாம்பு பரமசிவம் என்ற கேரக்டரில் ராதாரவி நடித்திருக்கிறார். பலசரக்குக் கடை அண்ணாச்சியாக  சரவணன். முதிர் இளைஞனான இவர் ஓவியாவை ஒன்சைடாக லவ் பண்ணும் காட்சிகள் செம ரகளையாக வந்துள்ளதாம். உச்சகட்ட ரகளையாக இவருக்கும் ஓவியாவுக்கும் ‘டூயட்’டும் வைத்துள்ளார்களாம். முதன் முறையாக பவர் ஸ்டார் சீனிவாசன் வேலு நாயக்கர், திடீர் நகர் முருகன் என்ற இரண்டு வேடங்களில் நடிக்கிறாராம். இவர்களோடு ‘சீதா’ என்ற யானையும் முக்கிய ரோலில் வருகிறதாம்.

சுராஜிடம் அசோசியேட் இயக்குனராக பணியாற்றிய ராஜதுரை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். பாடல்கள் வைரமுத்து.  டி.ராஜேந்தர், தேவா, சின்னபொண்ணு மூவரும் கலக்கலான ஒரு குத்துப் பாடலை பாடியுள்ளார்களாம்.

-எஸ்