விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தவன்!



பாட்டுச்சாலை

பாண்டிச்சேரியில் பிறந்து, மூன்று வயதிலேயே சென்னைவாசியாகி விட்டவர் கபிலன். எதையாவது எழுத வேண்டும் என்றில்லாமல், விதையாக எழுத வேண்டும் என்ற எண்ணம் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே  வந்துவிட்டது. தமிழைச் சலித்தெடுத்து வார்த்தைகளைத் தொகுத்து கவிதை தொடுத்தார்.

படித்துப் பார்த்தவர்கள் பாராட்டியதால், கவிதைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்த இளம்கலைத் தமிழ், முதுகலைத் தமிழ், ஆய்வுத்தமிழ் எல்லாம் கற்பனையையும் கட்டமைப்பையும் வளர்த்தன. புகழ்மிகு கம்பன் கழகம் நடத்தும் கவிதைப் போட்டியில் தொடர்ந்து மூன்று முறை முதல்பரிசு வென்றார் கபிலன்.

இயக்குனர் திருப்பதிசாமியின் 'நரசிம்மா' படத்தில் 'நந்தலாலா நந்தலாலா...' என்ற பாட்டெழுதி பாட்டுச்சாலையில் பயணம் தொடர்ந்தார். அந்தப் படத்தில் இவருக்கு மூன்று பாடல்கள்.
'தில்' படத்தில் 'உன் சமையலறையில்...' என்றொரு பாடல். அதில் 'நீ புதுவை என்றால் நான் பாரதியா பாரதிதாசனா...' என்று எழுதி பிறந்த மண்ணுக்கும் பிடித்த கவிஞர்களுக்கும் பெருமை சேர்த்தார். இரண்டாவது படத்திலேயே நல்ல பாடலாசிரியருக்கான அங்கீகாரம் கிடைத்தது.

'தூள்' படத்தில் இடம் பெற்ற 'ஆசை ஆசை இப்பொழுது...' பாடலில் 'திருவிழா ஆகிறேன் இப்பொழுது நீ எனக்குள் தொலைவது எப்பொழுது...' என்று காதல் உற்சவம் நடத்தினார். 'பார்த்திபன் கனவு' படத்தில் 'ஆலங்குயில் கூவும் ரயில்...' பாடலில், நாயகன் ஒற்றை வார்த்தையில் கேட்பதற்கு நாயகி கவிதையாய் பதில் சொல்வதாக சூழல்.

அதில் 'காதல்?' என்ற கேள்விக்கு 'நம் நான்கு கண்ணில் தோன்றுகின்ற ஒற்றைக் கனவு' என்று எழுதி காதலின் நெருக்கத்தை கவுரவப்படுத்தினார். இந்தப்பாடலுக்காக தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது கிடைத்தது.

'பாய்ஸ்' படத்தில் 'எகிறிக் குதித்தேன் வானம் இடித்தது...' பாடலில் 'புருவங்கள் இறங்கி மீசை ஆனது' என்று எழுதி காதல் கூந்தலுக்குப் பூச்சூட்டினார்.பெண்ணின் ஒவ்வொரு அழகுக்கும் இரண்டு உவமை சொல்லும் முதல் சினிமாப்பாடலாக 'வேட்டைக்காரன்' படத்தில் இடம்பெற்ற 'கரிகாலன் காலப்போல கறுத்திருக்குது குழலு/ அது குழலு இல்ல குழலு இல்ல தாஜ்மஹால் நிழலு...' அமைந்தது.

அதே படத்தில் 'நான் அடிச்சா தாங்கமாட்ட...' பாடலில் 'உணவு உடை இருப்பிடம் உழவனுக்கே கிடைக்கணும்/ அவன் அனுபவிச்ச மிச்சம்தான் ஆண்டவனுக்கே படைக்கணும்...' என்று சரணத்தில் சிவப்புக் கொடி காட்டினார்.

'வில்லு' படத்தில் 'ராமா ராமா...' என்ற பாடல். அதில் 'அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்' என என்ன வரம் வேண்டுமென ஆண்டவன் கேட்கும்போது, இப்படிக் கேட்பேன் என்று கொத்துக் கொத்தாய் செத்த தமிழர்களுக்காக சொட்டுச்சொட்டாய் கண்ணீர் வடித்தார் கபிலன். 'தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து இதுதான் என் கருத்து...' என்று விஜய் மூலமாக போக்கிரிப்பொங்கலில் போகியைக் கொளுத்தினார். 'விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்...' என்பது 'தெகிடி' படத்தில் இடம் பெற்ற கானவேடிக்கை.

'மெட்ராஸ்' படத்தில் 'ஆகாயம் தீப்பிடித்தா...' பாடலில் 'கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு...' என்று எழுதி கசியும் கண்ணீரை அலையும் கடலோடு ஒப்பிட்டு அழகு கூட்டியிருக்கிறார். ஷங்கரின் 'ஐ' படத்தில் சென்னைத் தமிழால் புனையப்பட்ட 'மெர்சலாயிட்டேன்' பாடலில்கூட 'நீ வெண்ணிலா மூட்ட இவன் வண்ணாரப்பேட்ட, மாட்டுக்கொம்புமேல பட்டாம்பூச்சி போல' என்று உவமை கொட்டியிருக்கிறார். அதே படத்தில் வரும் 'என்னோடு நீ இருந்தால்' பாடலில் 'தேங்காய்க்குள்ள நீர்போல உன்னை நெஞ்சில் தேக்கி வைப்பேனே...' என்று இளநீர் வார்த்தைகளால் இசைபாடியிருக்கிறார் கபிலன்.

தனது இலக்கிய நண்பர்கள் வட்டத்தில் இருக்கும் இவரை, 'தசாவதாரம்' படத்தில் கவிஞராகவே நடிக்கவைத்து அழகு பார்த்தார் கமல்ஹாசன்.'மெர்சலாயிட்டேன்' பாட்டெழுதுவதற்காகவே விமானப்பயணம் ஏற்பாடு செய்து, கொடைக்கானல் உச்சி யில் உட்காரவைத்து வரிகளை வாங்கி உச்சிமுகர்ந்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் பிடித்த கவிஞர்களில் கபிலனின் பெயர் உச்சத்தில் இருக்கிறது. கோடிட்ட இடத்தை பூர்த்திசெய்துவிடுவதாக இல்லாமல், நேர்த்தியாக எழுதவேண்டும் என்று பல்லவி பிடிக்கும் கபிலனின் பாட்டுச்சாலைப் பயணம் பாதுகாப்பாகச் சென்று கொண்டிருக்கிறது.

நெல்லைபாரதி

அடுத்த இதழில்...
வசியக்கவிஞர் வைரமுத்து!