கதை திரைக்கதை வசனம் இயக்கம்



கதையே இல்லை என்று கதைவிட்டு, ஒரு கதைசொல்லியைப்பற்றிக் கதைசொல்லி, ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கியிருக்கும் படம். அவர் நடிக்கவில்லையே என்ற குறையை (ஒன்றிரண்டு துண்டுக் காட்சியில் வந்து போகிறார்) அவரது வசனத்தின் மூலம் மற்ற கதாபாத்திரங்கள் போக்கு கிறார்கள், போங்கு இல்லாமல்.

இயக்குனராகும் லட்சியத்தில் இருக்கும் சந்தோஷ், காதல் மனைவி அகிலா கிஷோரின் வேண்டுகோளின்படி வீட்டுக் குள்ளேயே டிஸ்கஷன் வைக்கிறார். அதனால் ஏற்படும் பிரச்னைகளே கதை.

கதை விவாதத்தில் அக்கறை காட்டுதல், மனைவியோடு மல்லுக் கட்டுதல், தயாரிப்பாளர்களை வழிக்குக் கொண்டுவருதல் என ஒரு நேர்மையான சினிமா இயக்குனராக நடித்திருக்கிறார் சந்தோஷ். வெடுக்குப்பேச்சு, துடுக்குத்தனம், வெகுவான கவர்ச்சி என வரும் அகிலா கிஷோர் நமீதா, நயன்தாரா, சமந்தா ரேஞ்சுக்கு ரசிகர்களைக் கவர்வார்.

படத்தின் முக்கால்வாசி கலகலப்புக்கு முழுப் பொறுப்பேற்கிறார் தம்பி ராமையா.  உதவி இயக்குனர்களுக்கு அவர் சொல்லும் அறிவுரையை அப்படியே புத்தமாகப் போட்டு, இயக்குனர் சங்கத்தின்மூலம் உதவி இயக்குனர்களுக்கு வழங்கலாம். ஆர்யா, அமலா பால், விஷால், விஜய் சேதுபதி, சேரன், ராகவா லாரன்ஸ் ஆகியோரின் சிறப்புத்தோற்றம் படத்துக்கு சிறப்பான தோற்றத்தை அளிக்கிறது.

விஜய் ஆண்டனி, அல்போன்ஸ்ராய் ஜோசப், ஷரத், எஸ்.தமன் இசையில், 'காற்றில் கதையிருக்கு மண்ணில் கதையிருக்கு...' பாடலில் கதை சொல்லியிருக் கிறார் மதன் கார்க்கி.
'கொய்யாப்பழம்' உள்பட அங்கங்கே பார்த்திபனின் பஞ்ச் பறக்கிறது.