வந்தவுடனேயே ஒரு காபி சொல்லச் சொல்லி விட்டு மேட்டருக்கு தாவினார் சரோஜா. ‘‘சமவெளியில் படமெடுத்த சர்ச்சை இயக்குநர் அடுத்து ஒரு படத்தைத் தொடங்கியது தெரியும் தானே?” எனக் கேட்டார் சரோஜா. “ஆமாம் இந்தமுறை முழுக்க குடும்பக்கதையாக எடுக்கப் போவதாகச் சொன்னார்களே” என்று நாம் சொல்ல, “அந்தப்படம் தொடங்கிய வேகத்திலேயே தடைபட்டிருக்கிறதாம்’’ என்றவர் தொடர்ந்து சொல்லத் தொடங்கினார்.
“அவரை இயக்குநராக வைத்துப் படத்தை தயாரிக்கத் தொடங்கியவர் சினிமாவில் பல ஆண்டுகளாக இருப்பவராம். அவர் இந்தப்படத்தைத் தொடங்குவதாகச் சொன்ன போதே பலரும் ‘அவரை வைத்தா படம் எடுக்கிறீர்கள்? எதற்கு இந்த வேண்டாத வேலை?’ என்றெல்லாம் கேட்டார்களாம். அதை மீறித்தான் படத்தைத் தொடங்கினாராம். படப்பிடிப்பு தொடங்கி மூன்றுநாட்கள் மட்டுமே நடந்த நிலையில் திடீரென படத்தை நிறுத்திவிட்டதாகத் தகவல்” என்ற சரோஜா, ‘இந்தப் படத்தை எடுப்பதால் என் குடும்பத்துக்குள்ளேயே சிக்கல் வந்து விடும்போலிருக்கிறது. எனவே என்னால் படத்தைத் தொடர முடியாது’ என்று தயாரிப்பாளர் சொல்லிவிட்டாராம்.
இதனால் அதிர்ந்துபோன இயக்குநர், வேறொரு தயாரிப்பாளரைப் பிடித்து படத்தைத் தொடரும் முயற்சியில் இருப்பதாகச் சொல்கிறார்கள்” என்றவர் “மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்” என்றபடி விடைபெற்றுச் சென்றார்.